இசுரயேலர்

இந்த கட்டுரை விவிலிய இசுரயேலரைப் பற்றியது. இப்பெயரிலுள்ள நாடு பற்றி அறிய இசுரேல் கட்டுரையை பார்க்க.

இசுரயேலர் அல்லது இஸ்ரவேலர் என்பவர்கள் யாக்கோபின் 12 மகன்கள் மூலம் தோன்றிய 12 குலங்களின் வழி வருபவர்களை குறிக்கும். ஆதியாகமம் 32:28 [1] இல் கடவுள் யாக்கோபின் பெயரை இஸ்ரவேல் என மாற்றுகிறார். இதனால் அவர் வம்சத்தாருக்கும் இப்பெயர் வழங்கிற்று. விவிலியத்தில் கூறப்பட்டுள்ளப்படி இசுரயேலர் எபிரேய மொழி பேசிய ஒரு மக்கள் கூட்டமாகும்.

இஸ்ரவேலரின் 12 குலங்களுக்கும் யாக்கோபின் 12 மகன்மாரது பெயர் சூட்டப்பட்டது. அவைகளாவன ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசாக்கர், செபுலோன், தான், காத், நெபதலி,அசேர், யோசேப்பு, மற்றும் பெஞ்சமின் என்பனவாகும்.

பிரிவுகள்

1759 கோத்திரங்கள் படி இசுரேல் நாட்டின் பகிர்வு

இஸ்ரவேலின் 12 குலங்கள் இஸ்ரவேலின் (யாக்கோபு) 12 மகன்மாரை ஆரம்பத்தில் குறித்தது. ஆனால் யோசுவாவின் காலத்தில் இஸ்ரவேலருக்கு கானாம் நாட்டை பகிரும் போது லேவி கோத்திரத்தார் ஆசாரியராக இருந்தபடியால் நிலம் எதையும் பெறவில்லை. மாறாக யோசேப்பு குலமானது எபிரகீம், மனாசே எனப்பட்ட குலங்களால் பிரத்யீடு செய்யப்பட்டது. இவர்கள் யோசேப்புக்கு எகிப்திய மனைவிமூலம் கிடைத்த இரண்டு மகன்கள் ஆகும் இவர்களை யாக்கோபு இரு குலங்களாக பிரகடனப்படுத்தினார்.[2] ஆகவே இஸ்ரவேலரின் குலப் பிரிவுகள் இரண்டுவகைப்படும்:

பாரம்பரிய பிரிவு

  1. ரூபன்
  2. சிமியோன்
  3. லேவி
  4. யூதா
  5. இசாக்கர்
  6. செபுலோன்
  7. தான்
  8. காத்
  9. நெபதலி
  10. அசேர்
  11. யோசேப்பு
  12. பெஞ்சமின்

நில பகிர்வின்படி குலங்கள்

  1. ரூபன்
  2. சிமியோன்
  3. யூதா
  4. இசாக்கர்
  5. செபுலோன்
  6. தான்
  7. காத்
  8. நெபதலி
  9. அசேர்
  10. எபிரகீம் (யோசேப்பின் மகன்)
  11. மனாசே (யோசேப்பின் மகன்)
  12. பெஞ்சமின்

இஸ்ரவேலர்களிடம் 12 தலைவர்கள் இருந்ததாக அல்-குரானிலும் கூறப்பட்டுள்ளது. சூரா 5, வசனம் 12[3]

வட அரசும் இஸ்ரவேலின் தொலைந்த பத்து குலங்களும்

விவிலியத்தின் பழைய ஏற்பாட்டின் படி சாலொமோன் அரசனின் மகனான ரெகொபெயாம் காலத்தில் இஸ்ரவேல் உள்நாட்டு போர்மூலம் இரண்டாக பிரிந்தது. வட அரசு யெரொபெயாம் தலைமையில் இஸ்ரவேலின் காலத்தில் ரூபன், இசாக்கர், செபுலோன், தான், காத், நெபதலி, அசேர், எபிரகீம், மனாசே என்ற 9 குலங்களும் நிலமற்ற சில லேவி குலத்தவரும் பிரிந்தன.[4] விவிலியத்தில் இச்சந்தர்ப்பத்தில் சிமியோன் கோத்திரம் பற்றிய குறிப்பு எதுவும் காணப்படவில்லை. சிமியோன் குல யாக்கொபின் சாபத்தின் [5] படி அழிந்துபோயிருக்கலாம் என்பது பொதுகருத்தாகும். தென் அரசான யூதா, எருசலேமை தலைநகராக கொண்டிருந்த்து. இது ரெகொபெயாமால் ஆளப்பட்டது. இங்கு யூதா மற்றும் பெஞ்சமின் குலத்தவரும் சில லேவியரும் வசித்தனர்.

கி.மு. 722 இல் அசிரியர், சல்மனெசீர் (Shalmaneser V) மற்றும் சர்கொன் (Sargon II) தலைமையில் படையெடுத்து இஸ்ரவேலின் வட அரசைக்கைப்பற்றி அதன் தலைநகரான சமாரியாவை அளித்து, மக்களை கொராசானுக்கு (இன்றைய கிழக்கு ஈரான் மற்றும் மேற்கு அப்கானிஸ்தான்) அடிமைகளாக அனுப்பினார்கள். இவ்வாறு நாடுகடத்தப்பட்ட 10 குல மக்களே இஸ்ரவேலின் தொலைந்த பத்து குலங்கள் என அழைக்கப்படுகின்றன. தென் அரசில் இருந்த யூதா,பெஞ்சமின், லேவி கோத்திரத்தார் இன்று யூதர் எனப்படும் மக்களாக உருவெடுத்தனர்.

பாபிலோனிய அடிமைத்தனம்

கி.மு. 586 இல் புது பாபிலோனியப் பேரரசினர் இஸ்ரவேல் இராச்சியத்தை கைப்பற்றி அதன் மக்களை அடிமைகளாக பபிலோனுக்கு கொண்டு சென்றது. கி.மு. 539 இல் பாபிலோனை பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசால் கைப்பற்றப்பட்டப்போது இசுரயேலர் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு எருசலேமுக்கு திரும்பினார்கள். இக்காலப்பகுதியில் இசுரயேலர் தங்களது குல வேற்றுமைகளைத் துறந்திருந்தனர்.

உசாத்துணை

  1. ஆதியாகமம் 32:28
  2. ஆதியாகமம் 48:14-22
  3. அல் குரான், சூரா 5 வசனம் 12
  4. 1 அரசர் 12 1 அரசர் 13
  5. ஆதியாகமம் 49:5-7
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.