புனித பிலிப் நேரி தேவாலயத் தாக்குதல்

புனித பிலிப்பு நேரியார் ஆலயம் மீதான எறிகணை வீச்சுத் தாக்குதல் (St. Philip Neri Church shelling) 2006 ஆகத்து 13 இல் இடம்பெற்றது. புனித பிலிப்பு நேரியார் ஆலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணக் குடாநாட்டில் வேலணைத் தீவில் அல்லைப்பிட்டி கிராமத்தில் அமைந்துள்ளது. இவ்வாலயம் மீதான எறிகணைத் தாக்குதல் இலங்கைப் படைத்துறையினரால் நடத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.[1] இத்தாக்குதலில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 54 பேர் காயமடைந்தனர்.[2]

புனித பிலிப்பு நேரியார் ஆலயத் தாக்குதல்
St. Philip Neri Church shelling
இடம்அல்லைப்பிட்டி, யாழ்ப்பாண மாவட்டம், இலங்கை
நாள்ஆகத்து 13, 2006 (+6 கிநே)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
இலங்கைத் தமிழ் இடம்பெயர்ந்தோர்
தாக்குதல்
வகை
எறிகணை வீச்சு
ஆயுதம்குண்டுகள்
இறப்பு(கள்)15
தாக்கியோர்இலங்கை படைத்துறை

பின்னணி

யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் நோக்கில் விடுதலைப் புலிப் போராளிகள் இலங்கை படைத்துறையினருடன் அல்லைப்பிட்டியில் சிறு சமரில் ஈடுபட்டனர்[3] இலங்கை இராணுவத்தினரின் எறிகணை வீச்சுக்களுக்கு அஞ்சி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில் அடைக்கலம் புகுந்தனர்.[4]

நிகழ்வு

2006 ஆகத்து 12 சனிக்கிழமை காலையில் விடுதலைப் புலிகள் அல்லைப்பிட்டியில் தரையிறங்கினர். இதனை அடுத்து இராணுவத்தினர் பின்வாங்கி அருகில் அமைந்திருந்த கடற்படைத் தளத்தினுள் சென்றனர்.[3][5] இராணுவத்தினர் கிராமைத்தை நோக்கி எறிகணை வீச்சை ஆரம்பித்தனர். இது அன்று இரவு முழுவதும் தொடர்ந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கை ஒன்றின் படி இராணுவத்தினரின் பல்குழல் ஏவுகணைகள் அல்லைப்பிட்டிக் கிராமம் முழுவதும் வந்து வீழ்ந்ததாகத் தெரிவித்திருக்கிறது.[3]

2006 ஆகத்து 13 ஞாயிற்றுக்கிழமை அதிகால 04:30 மணிக்கு பிலிப்பு நேரியார் ஆலயம் மீது எறிகணை ஒன்று வீழ்ந்தது. ஆலயத்தில் அடைக்கலம் புகுந்திருந்த 15 பேர் கொல்லப்பட்டனர். 54 பேர் காயமடைந்தனர்.[2][3][4] தேவாலய குருவானவர் திருச்செல்வம் நிகால் ஜிம் பிறவுண் காயமடைந்தோரை யாழ்ப்பாணம் சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.[3] அல்லைப்பிட்டியில் தங்கியிருந்த மேலும் 300 குடும்பங்களை அவர் ஊர்காவற்துறையில் உள்ள புனித மேரி தேவாலயத்திற்கு அனுப்பினார். குண்டு வீச்சு இடம்பெற்று ஒரு வாரத்தின் பின்னர் ஆகத்து 20 இல் அருட்தந்தை ஜிம் பிறவுன் காணாமல் போனார்.[4][6]

பொறுப்பு

தேவாலயம் மீது தாம் தாக்குதல் நடத்தவில்லை என இராணுவத்தினர் மறுப்புத் தெரிவித்தனர். ஆனாலும், அரசுப் படையினராலேயே எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.[5] பலாலி இராணுவமுகாமில் இருந்து ஏவுகணைகள் வீசப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்ததாக யாழ் பல்கலைக்கழக மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.[3] விடுதலைப் புலிகளும் இவ்வாறே தெரிவித்தனர்.[5]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.