பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோயில்

பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பனையபுரம் எனும் ஊரில் அமைந்துள்ளது.இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். [2]

தேவாரம் பாடல் பெற்ற
பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):பரவைபுரம்[1]
பெயர்:பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:பனையபுரம்
மாவட்டம்:விழுப்புரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பனங்காட்டீஸ்வரர்,பனங்காட்டீசன் (நேத்ரோதாரகேஸ்வர சுவாமி)
தாயார்:சத்யாம்பிகை,மெய்யாம்பிகை, புறவம்மை
தல விருட்சம்:பனை
தீர்த்தம்:பத்ம தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்
வரலாறு
தொன்மை:1300 வருடங்கள்

சூரிய கிரணங்கள்

சூரியன் வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). சித்திரை மாதம் முதல் தேதியிலிருந்து ஏழு நாட்களுக்கு கருவறையிலிருக்கும் சிவலிங்கத்திருமேனியின் மீதும், சத்யாம்பிகை அம்பாள் மீதும் சூரியக் கதிர்கள் படுமாறு அமைக்கப்பட்ட சிறப்பான கட்டடக்கலைக் கொண்ட திருத்தலம்.[1]

நேத்ரோதாரகேஸ்வர சுவாமி

இத்தலத்தின் மூலவர் பனங்காட்டீஸ்வரர், தாயார் சத்யாம்பிகை. கண் பார்வையைக் காப்பவர் என்ற பொருளில் இத்தல இறைவனார் ’நேத்ரோதாரகேஸ்வர சுவாமி’ என்ற திருப்பெயர் பெற்றுள்ளார்.[1]

அரச குடும்பத் திருப்பணிகளும் பெயர்க்காரணமும்

கல்வெட்டுகள் மூலம் இரண்டாம் ராஜேந்திர சோழ மன்னனின் (கி.பி 1052-1064) தேவியான பரவை நங்கை இத்தல இறைவனார் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்ததால் ஏராளம் கொடையளித்தது தெரியவருகின்றது. இவரது பெயராலேயே ’பரவைபுரம்’ என்றழைக்கப்பட்டு பின்னர் பனையபுரம் என்றானது.[1]

தேசிய நெடுஞ்சாலை

சில ஆண்டு முன்பு, 45C தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிக்காக, 1300 ஆண்டு பழைமையான இத்திருக்கோயிலின் முக்கிய பகுதிகள் எடுத்துக்கொள்ளப்பட குறிக்கப்பட்டு, பின்னர் ஊர் மக்கள், வெளியூர் பக்தர்கள், சிவனடியார்கள், பத்திரிக்கைகள் ஆகியோர் எதிர்ப்பை பதிவு செய்ததை அடுத்தும், ஊர் மக்கள் சுப்பிரமணிய சுவாமியை அணுகி உதவி வேண்டியதையடுத்தும் நெடுஞ்சாலைத்துறை வேண்டுகோளுக்கு செவிசாய்த்தது. மக்கள் எதிர்ப்பையடுத்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட நில எடுப்பு அலுவலர் ஆகியோர் மாற்று வழியை பரிந்துரைத்ததையடுத்தும் கோயில் பகுதியை இடிக்காமல் மதில் சுவரை ஒட்டி சாலையிட நெடுஞ்சாலைத் துறை முடிவெடுத்தது.[1]

அமைவிடம்

சென்னையிலிருந்து 150 கி.மீ தொலைவிலும், விழுப்புரத்திற்கு 10 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.[1] சென்னையிலிருந்து வரும்போது தே.நெ 45 (சென்னை-திருச்சி நெடுஞ்சாலை) சாலையில் இருந்து விழுப்புரம் செல்ல பிரியும் சாலையில்(தே.நெ 45 சி ) 1.1 கி.மீ தொலைவில் பனையபுரம் உள்ளது.

இவற்றையும் பார்க்க

ஆதாரங்களும் மேற்கோள்களும்

  1. குமுதம் ஜோதிடம்; 15.02.2013; பக்கம் 2-5
  2. பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.