திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீசுவரர் கோயில்

திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீசுவரர் கோயில் தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருவெண்ணெய்நல்லூர் எனும் ஊரில் அமைந்துள்ள, தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் சுந்தரரால் பாடல் பெற்ற சிவாலயமாகும்.

தேவாரம் பாடல் பெற்ற
திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீசுவரர் கோயில் (அருள்மிகு வேற்கண்ணிநாயகி உடனுறை தடுத்தாட்கொண்டநாதர்)
பெயர்
புராண பெயர்(கள்):திருவருள்துறை, திருவெண்ணெய்நல்லூர்
பெயர்:திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீசுவரர் கோயில் (அருள்மிகு வேற்கண்ணிநாயகி உடனுறை தடுத்தாட்கொண்டநாதர்)
அமைவிடம்
ஊர்:திருவெண்ணெய்நல்லூர், திருக்கோயிலூர் வட்டம்
மாவட்டம்:விழுப்புரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:கிருபாபுரீசுவரர்(அருட்கொண்ட நாதர், ஆட்கொண்டநாதர், வேணுபுரீசுவரர்)
தாயார்:மங்களாம்பிகை(வேற்கண்ணியம்மன்)
தல விருட்சம்:மூங்கில் மரம்
தீர்த்தம்:தண்டுத்தீர்த்தம்,(சிவனாற்கேணி), பெண்ணை நதி தீர்த்தம், நீலி தீர்த்தம், சிவகங்கா தீர்த்தம், காம தீர்த்தம், அருட்டுறைத் தீர்த்தம், பாண்டவ தீர்த்தம், வைகுண்ட தீர்த்தம், வேத தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சுந்தரர்
தொலைபேசி எண்:04153 234548

அமைவிடம்

விழுப்புரத்திலிருந்து திருச்சிராப்பள்ளிக்குச் செல்லும் இருப்புப்பாதையில், திருவெண்ணெய்நல்லூர் ரோடு தொடர் வண்டி நிலையத்திலிருந்து ஏழு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

இறைவன், இறைவி

இக்கோயிலுள்ள மூலவர் கிருபாபுரீசுவரர் என்றும் தடுத்தாட்கொண்டநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி மங்களாம்பிகை எனப்படுகிறார்.[1] இங்குள்ள இறைவர், முதலாம் இராசராச கல்வெட்டில், திருவெண்ணெய்நல்லூர்த் திருவருட்டுறை ஆள்வார் என்றும், இரண்டாம் இராசாதிராச முதலானோர் கல்வெட்டுக்களில் திருவெண்ணெய் நல்லூர் ஆட்கொண்டதேவர் என்றும், தடுத்தாட்கொண்ட தேவர் என்றும் அழைக்கப் பெறுகிறார்.

சிறப்புகள்

இக்கோயிலின் தல மரம் மூங்கில் ஆகும்.[1] இவ்வூரிலுள்ள கோயிலுக்குத் திருவருட்டுறை என்று பெயர். சுந்தரமூர்த்தி நாயனார், புத்தூர் சடங்கவியாருடைய மகளாரைத் திருமணஞ் செய்தருளும் போது, இறைவர், முன் கயிலாயத்தில் அருளியபடி வயது முதிர்ந்த அந்தணராய்த் தோன்றித் தடுத்தாட்கொண்டருளிய இடம். அப்புத்தூர் இது பொழுது மணம் தவிர்ந்தபுத்தூர் என்று வழங்கப்படுகின்றது. சைவசமய சந்தனாசாரியராகிய மெய்கண்டதேவர் எழுந்தருளியிருந்த தலமும் இது. இம் மெய்கண்ட தேவருக்கு அருள் செய்த மூர்த்தி பொல்லாப் பிள்ளையார் ஆவர். இக்கோயிலின் தீர்த்தம் பெண்ணையாறு ஆகும்.

மேற்கோள்கள்

படத்தொகுப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.