திருநாரையூர் சௌந்தரநாதர் கோயில்

திருநாரையூர் சௌந்தரநாத கோயில் சம்பந்தர், அப்பர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.இத்தலம் தமிழ்நாடு கடலூர் மாவட்டத்தில் உள்ள திருநாரையூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் இது 33வது தலம் ஆகும். இத்தல இறைவன் சுயம்புவாகத் தோன்றியதால் ஸ்ரீ சுயம்பிரகாசர் எனவும் வழங்கப்படுகிறார்.[1]

தேவாரம் பாடல் பெற்ற
திரிபுரசுந்தரி சமேத சுயம்பிரகாச ஈஸ்வரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருநாரையூர்
பெயர்:திரிபுரசுந்தரி சமேத சுயம்பிரகாச ஈஸ்வரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருநாரையூர்
மாவட்டம்:கடலூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சவுந்தர்யேஸ்வரர்
தாயார்:திரிபுரசுந்தரி
தல விருட்சம்:புன்னை
தீர்த்தம்:செங்கழுநீர்
சிறப்பு திருவிழாக்கள்:வைகாசி திருவாதிரை,விநாயகர் சதுர்த்தி,பிரதோஷம், மகாசிவராத்திரி,நம்பி குருபூஜை விழா
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:அப்பர், சம்பந்தர்
வரலாறு
தொன்மை:1000-2000 வருடங்களுக்கு முன்
அமைத்தவர்:சோழர்கள்

இத்தலம் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரியின் வடகரையில் அமைந்துள்ள 33ஆவது தலமாகும்.

இங்குள்ள பொள்ளாப் பிள்ளையார் துணைகொண்டே நம்பியாண்டார் நம்பி தேவாரத் திருமுறைகளைத் தொகுத்தார் எனப்படுகிறது.நம்பியாண்டார் நம்பி பிறந்த தலமும் இதுவே ஆகும்.

திருநாரையூர் பெயர்க்காரணம்

துர்வாச முனிவர் ஆழ்ந்த தவத்தில் இருந்த சமயம் ஆகாய வழியில் கந்தர்வர்கள் சிலர் தங்கள் தங்க விமானங்களில் சென்றனர். அவர்களில் தேவதத்தன் என்ற கந்தர்வன் பழங்களை உண்ட பின்னர் கீழே போட்ட கொட்டைகள் துர்வாசர் மீது விழ முனிவரின் தவம் கலைந்தது. மிகுந்த கோபத்தில் அவர் கந்தர்வனை, பழக்கொட்டைகளை பறவை போல் உதிர்த்ததால் நாரையாகப் போக சாபமிட்டார். சாபவிமோசனம் வேண்டிய நாரையிடம் அங்கேயே தங்கியிருந்து கங்கை நீர் கொண்டு சிவபெருமானை அபிஷேகம் செய்து வழிபட சாபவிமோசனம் கிடைக்கும் என்று கூறினார்.

அவ்வாறே செய்து வந்த நாரைக்கு, ஒருநாள் சோதனை நேர்ந்தது. காசியிலிருந்து கங்கை நீர் கொண்டு வரும் போது கடும் புயலும் மழையும் வீச, பறக்க முடியாமல் தவித்த நாரையின் சிறகுகள் காற்றின் வேகத்தால் பிய்ந்து விழுந்தன.

’சிறகிழந்த நல்லூர்’

  • அவ்வாறு நாரையின் சிறகுகள் விழுந்த இடம், ’சிறகிழந்த நல்லூர்’ என வழங்கப்படுகிறது. அவ்வூர் திருநாரையூரிலிருந்து ஒரு கி.மீ தொலைவில் உள்ளது.

சிறகிழந்து சிரமப்பட்ட நிலையிலும் தவழ்ந்து வந்து வழிபட்டு மோட்சம் பெற்றது நாரை. அதனால் இந்த ஊர் திருநாரையூர் என்று வழங்கப்பட்டது.

கும்பாபிஷேகம்

1984 ஆம் வருட கும்பாபிஷேகத்திற்குப் பின்னர் 23 வருடங்களுக்குப் பின்னர் 2008 ஆம் ஆண்டு திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. போதிய நிதி வசதி இல்லாக் காரணத்தால் திருப்பணிகள் மெதுவே நடைபெற்றன.இந்து அறநிலையத்துறையின் 'நிதி வசதியற்ற திருக்கோயில் திருப்பணி நிதியுதவி திட்டத்தின்' கீழே ரூபாய் 7.75 லட்சம் அளிக்கப்பட்டது. மீத தொகை பக்தர்கள் மூலம் திரட்டப்பட்டு சுமார் 40 லட்சம் செலவில் திருப்பணி செய்யப்பட்டது. செப்டம்பர் 06, 2009 ஞாயிற்றுக்கிழமையன்று திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றது.[2]

வெளி இணைப்புக்கள்

மேற்கோள்கள்

  1. குமுதம் ஜோதிடம்;17.10.2008; திருமுறைகள் தந்த திருநாரையூர் கட்டுரை; பக்கம் 3-6
  2. http://www.dinamani.com/edition_villupuram/cuddalore/article1210597.ece

இவற்றையும் பார்க்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.