எஸ். எஸ். ராமசாமி படையாட்சியார்

சிவ சிதம்பர ராமசாமி படையாச்சி (எஸ். எஸ். ராமசாமி படையாச்சி, செப்டம்பர் 16, 1918 -ஏப்ரல் 3, 1992) ஒரு தமிழக அரசியல்வாதியும், இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும் ஆவார். தமிழக அமைச்சரவையில் உறுப்பினராகவும் இந்திய மக்களவை உறுப்பினராகவும் இருந்தவர். இவரின் பெயரே விழுப்புரம் மாவட்டத்தின் முந்தைய பெயராகும்.[1]

சிவ சிதம்பர ராமசாமி படையாட்சி
S. S. Ramasami Padaiyatchi
நாடாளுமன்ற உறுப்பினர், திண்டிவனம் மக்களவைத் தொகுதி
பதவியில்
1980–1989
பிரதமர் இந்திரா காந்தி,
ராஜீவ் காந்தி
பின்வந்தவர் ஆர். ராமதாசு
உள்ளாட்சி துறை அமைச்சர் (மதராசு மாகாணம்)
பதவியில்
13 ஏப்ரல் 1954  13 ஏப்ரல் 1957
Premier காமராசர்
முன்னவர் என். சங்கர ரெட்டி
பின்வந்தவர் லூர்டம்மாள் சிமன்
தனிநபர் தகவல்
பிறப்பு செப்டம்பர் 16, 1918(1918-09-16)
இறப்பு 3 ஏப்ரல் 1992(1992-04-03) (அகவை 73)
கடலூர், தமிழ்நாடு, இந்தியா
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி,
இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) பாப்பம்மாள்
தொழில் அரசியல்வாதி
சமயம் இந்து

அரசியல் வாழ்க்கை

1951ல் வன்னிய குல சத்திரிய சங்கம் ஒரு சாதி மாநாட்டைக் கூட்டி வன்னியருக்காக ஒரு மாநிலந்தழுவிய கட்சியினை உருவாக்க முயன்றது. ஆனால் தலைவர்களுக்குள் இருந்த வேறுபாடால் இம்முயற்சி வெற்றி பெறவில்லை. மாறாக வட ஆற்காடு மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் செல்வாக்கு பெற்றிருந்த எம். ஏ. மாணிக்கவேலு நாயக்கர் காமன்வீல் கட்சியினைத் தொடங்கினார். தென்னாற்காடு மற்றும் சேலம் மாவட்ட வன்னியர்கள் ராமசாமி படையாச்சியின் தலைமையில் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி என்ற மற்றொரு கட்சியைத் தொடங்கினர். இரு கட்சிகளும் 1952 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) ஆதரவுடன் போட்டியிட்டன. இத்தேர்தலில் திமுக நேரடியாகப் போட்டியிடவில்லை. மாறாக திராவிட நாடு கோரிக்கையைப் பற்றி சட்டமன்றத்தில் பேசுவோம் என்று உறுதியளித்து ஒப்பந்ததில் கையெழுத்திட்ட கட்சிகளுக்கும் சுயேட்சை வேட்பாளர்களுக்கும் ஆதரவளித்தது. அவ்வாறு உறுதியளித்து போட்டியிட்ட கட்சிகளுள் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியும் ஒன்று.

ராமசாமி படையாட்சி உட்பட 19 உழைப்பாளார் கட்சி வேட்பாளர்கள் 1952 தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக்கட்சி வேட்பாளார்கள் மக்களவைக்கான தேர்தலில் நான்கு இடங்களில் வென்றனர். ஆரம்பத்தில் த. பிரகாசம் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு காமன்வீல் கட்சி ஆதரவளித்தது. தேர்தலில் எக்கட்சிக்கும் பெரும்பான்மை கிட்டவில்லையெனினும் தனிப்பெரும் கட்சியான காங்கிரசுக்கு ஆட்சியமைக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டு சி. ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) முதலமைச்சரானார். அவர் தனது பெரும்பான்மையை நிரூபிக்க எதிர்க்கட்சிக் கூட்டணியை உடைத்து பல கட்சிகளை தம்பக்கம் இழுத்தார். அவ்வாறு இழுக்கப்பட்ட கட்சிகளுள் ஒன்று உழைப்பாளார் கட்சி. அரசுக்கு ராமசாமி வெளியிலிருந்து ஆதரவளித்தார். 1954ல் காமராஜர் முதல்வரான பின்னர் ராமசாமி அவரது அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சரானார். 1954ல் அவர் தன் கட்சியை காங்கிரசுடன் இணைத்து விட்டார்.

1962 சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது காங்கிரசிலிருந்து விலகிய ராமசாமி மீண்டும் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியை உருவாக்கினார். தேர்தலில் சுதந்திராக் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அவர் உட்பட இக்கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர். 1967 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்தார். ஆனால் திமுக தன் கூட்டணியில் இக்கட்சியை சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டது. சிறிது காலத்துக்குப் பின்னர் ராமசாமி கட்சியை மீண்டும் கலைத்து விட்டு இந்திய தேசிய காங்கிரசில் இணைந்துவிட்டார். 1980 மற்றும் 1984 பொதுத்தேர்தல்களில் காங்கிரசு சார்பாக திண்டிவனம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு இந்திய நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1992ல் மரணமடைந்தார்.

அரசு விழா

சுதந்திரபோராட்ட வீரர் ராமசாமி படையாச்சியின் பிறந்தநாளையும் அரசு விழாவாக கொண்டாட இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி அறிவித்துள்ளார்.[2]

மேற்கோள்கள்

  1. "கருவூலம்:விழுப்புரம் மாவட்டம்". தினமணி (26 நவம்பர் 2016)
  2. "ராமசாமி படையாச்சி, பிறந்த நாட்கள் அரசு விழாவாக கொண்டாடப்படும்: முதல்வர் அறிவிப்பு". நக்கீரன் (சூன் 29,2018)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.