ஸ்ரீதர் (இயக்குநர்)
ஸ்ரீதர் (சூலை 22, 1933 - அக்டோபர் 20, 2008) புகழ்பெற்ற தமிழ் திரைப்பட இயக்குனரும், வசனகர்த்தாவும் ஆவார். தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் மற்றும் பாலிவுட்டிலும் பெரும் வெற்றியினை ஈட்டியவர் ஸ்ரீதர்.
சி. வி. ஶ்ரீதர் | |
---|---|
![]() இந்திய அஞ்சல் தலையில் சி. வி. ஶ்ரீதர் | |
பிறப்பு | சித்தாமூர் விசயராகவுலு ஶ்ரீதர் சூலை 22, 1933 சித்தாமூர், செங்கல்பட்டு, மதராசு மாகாணம், பிரித்தானிய இந்தியா ![]() |
இறப்பு | 20 அக்டோபர் 2008 75) சென்னை, தமிழ்நாடு | (அகவை
பணி |
|
செயல்பட்ட ஆண்டுகள் | 1959–1991 |
பெற்றோர் | தந்தை : விஜயராகவுலு ரெட்டியார் தாயாா் : தாயாரம்மாள் |
வாழ்க்கைத் துணை | தேவசேனா |
வாழ்க்கைச் சுருக்கம்
ரத்தப்பாசம் என்ற படத்தின் மூலம் வசனகர்த்தாவாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கியவர் ஸ்ரீதர். அந்த நாட்களில் மிகுந்த புகழ் பெற்றிருந்த இளங்கோவனின் வசனத்தால் ஈர்க்கப்பட்டு திரையுலகை நாடியவர் ஸ்ரீதர். தொடக்கத்தில் அமரதீபம், உத்தம புத்திரன், புனர் ஜன்மம், எதிர்பாராதது போன்ற பல படங்களுக்கு வசனகர்த்தாவாகப் பணி புரிந்து வந்தார்.
ஸ்ரீதர் இயக்கிய முதல் படமான கல்யாணப்பரிசு ஜெமினி கணேசன், சரோஜா தேவி மற்றும் விஜயகுமாரி ஆகியோரின் நடிப்பில் 1957ஆம் ஆண்டு முதல் தாயாரிப்பில் இருந்து இரண்டு வருடம் கழித்து 1959 ஆம் ஆண்டு வெளியானது. வீனஸ் பிக்சர்ஸ் என்னும் நிறுவனத்திற்காக ஸ்ரீதர் இயக்கிய இத்திரைப்படம், நடிகை சரோஜாதேவி அவர்கள் அதற்கு முன்பு தமிழில் பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும் கதாநாயகியாக சரோஜாதேவி முதல் முதலில் நடித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது, அதுவரை பாடகராக மட்டுமே தமிழில் அறியப்பட்டிருந்த ஏ.எம். ராஜா ஒரு இசை அமைப்பாளராகவும் அறிமுகமான படம் இது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தின் பாடல்களான "காதலிலே தோல்வியுற்றான்" போன்ற பாடல்கள் பெரும்புகழை ஈட்டின.
1961 ஆம் ஆண்டில் தனது சொந்தப் பட நிறுவனம் சித்ராலயாவைத் தொடங்கிய ஸ்ரீதர் 30 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தினார். இவர் கடைசியாக இயக்கிய படம் "தந்துவிட்டேன் என்னை".
ஸ்ரீதர் படங்களின் சில சிறப்பம்சங்கள்
தமிழ்த் திரையுலகில் அதுவரை வசனமே செங்கோலோச்சி வந்த நிலையை மாற்றி இயக்குனருக்கான ஒரு இடம் பெற்றுத் தந்தவர் ஸ்ரீதர். அவரது திரைப்படங்களின் காட்சியமைப்புக்களையும், காமிரா கோணங்களையும் அவருக்குப் பின்னர் திரையுலகில் பெரும் மாறுதல்களை உருவாக்கியதாகக் கூறப்படும் கே.பாலச்சந்தர், பாரதிராஜா ஆகியோர் பெருமளவில் பாராட்டியுள்ளனர். ஸ்ரீதரின் ஆரம்பப்படங்கள் பலவற்றிலும் அவருடன் பணியாற்றியவர் வின்செண்ட் என்னும் ஒளிப்பதிவாளர். நெஞ்சில் ஓர் ஆலயம் என்னும் திரைப்படத்தில், முத்துராமன் மற்றும் தேவிகாவின் நடிப்பில் "சொன்னது நீதானா" என்னும் பாடல் படமாக்கப்பட்ட கோணங்களும், படத்தொகுப்பும் பெரிதும் பாராட்டப்பட்டன.
புதுமுகங்களை அறிமுகப்படுத்துவது மட்டும் அன்றி அவர்களைப் பிரபலமான நட்சத்திரங்களாக்குவதிலும் ஸ்ரீதரின் படங்கள் பெரும்பங்கு வகித்தன. சரோஜாதேவி, விஜயகுமாரி (கல்யாணப்பரிசு), ரவிச்சந்திரன், காஞ்சனா (காதலிக்க நேரமில்லை), ஶ்ரீகாந்த், ஜெயலலிதா, நிர்மலா, மூர்த்தி ஆகியோர் (வெண்ணிறாடை) இதில் நிர்மலா, மூா்த்தி இருவருமே இப்படத்தின் பெயரான வெண்ணிறாடை என்ற பெயரே இவர்களுக்கு இன்றளவும் அடைமொழியாக இருந்து வருகிறது ஆகியோர் ஸ்ரீதரால் அறிமுகமான நட்சத்திரங்கள்.
பாலிவுட்டிலும் ஸ்ரீதர் வெற்றிகரமான இயக்குனராக விளங்கினார். அவரது படங்களான கல்யாணப்பரிசு நஜ்ரானா என்னும் பெயரில் ராஜ்கபூர், வைஜயந்தி மாலா நடிப்பில் வெளியாகிப் பெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நெஞ்சில் ஓர் ஆலயம் (ராஜேந்திர கபூர், ராஜ்குமார், மீனாகுமாரி நடித்த தில் ஏக் மந்திர்), காதலிக்க நேரமில்லை (சஷிகபூர், கிஷோர் குமார் நடித்த பியார் கியா ஜாயே) ஆகியவையும் ஹிந்தியில் மறுவாக்கம் செய்யப்பட்டு வெற்றிக் கொடி நாட்டின.
1960ஆம் ஆண்டுகளில் இறுதி வரை ஸ்ரீதர் குறிப்பிடத்தக்க பங்கினையளித்தார். நாடகபாணிக் கதைகளான கல்யாணப் பரிசு, விடி வெள்ளி போன்றவை தவிர, காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு போன்ற நகைச்சுவைப் படங்களையும் இயக்கிப் பெரும் புகழ் பெற்றார்.
ஸ்ரீதரின் திரைப்படங்களில் தனிச்சிறப்பாக அமைந்தவை அவற்றின் பாடல்கள். அவரது முதல் படமான கல்யாணப்பரிசு தொடங்கி இளையராஜா வுடன் அவர் இணைந்த இளமை ஊஞ்சலாடுகிறது, நினைவெல்லாம் நித்யா வரையிலான திரைப்படங்களில் பல பாடல்களுக்காகவே புகழ் பெற்றன.
இயக்கிய திரைப்படங்கள்
- 1959 கல்யாணப் பரிசு
- 1960 விடிவெள்ளி, மீண்ட சொர்க்கம்
- 1961 தேன் நிலவு
- 1962 சுமைதாங்கி, நெஞ்சில் ஓர் ஆலயம், போலீஸ்காரன் மகள்
- 1963 நெஞ்சம் மறப்பதில்லை
- 1964 கலைக்கோவில், காதலிக்க நேரமில்லை
- 1965 வெண்ணிறாடை
- 1966 கொடிமலர்
- 1967 நெஞ்சிருக்கும் வரை, ஊட்டி வரை உறவு
- 1969 சிவந்த மண்
- 1971 அவளுக்கென்று ஒரு மனம்
- 1973 அலைகள்
- 1974 உரிமைக்குரல்
- 1975 வைர நெஞ்சம்
- 1976 ஒ மஞ்சு
- 1977 அண்ணா நீ என் தெய்வம், மீனவ நண்பன்
- 1978 இளமை ஊஞ்சலாடுகிறது
- 1979 அழகே உன்னை ஆராதிக்கிறேன்
- 1980 சௌந்தர்யமே வருக வருக
- 1981 மோகனப் புன்னகை
- 1982 நினைவெல்லாம் நித்யா
- 1983 துடிக்கும் கரங்கள், ஒரு ஓடை நதியாகிறது
- 1984 ஆலய தீபம், தென்றலே என்னைத் தொடு, உன்னைதேடி வருவேன்
- 1986 யாரோ எழுதிய கவிதை, நானும் ஒரு தொழிலாளி, குளிர்கால மேகங்கள்
- 1987 இனிய உறவு பூத்தது
- 1991 தந்துவிட்டேன் என்னை
தயாரிப்பு மற்றும் கதை வசனம் எழுதிய திரைபடங்கள் :-
- 1954 ரத்த பாசம், எதிர்பாராதது
- 1955 மகேஸ்வரி, லட்சாதிபதி, மாமன் மகள்
- 1956 அமரதீபம், மாதர் குல மாணிக்கம்
- 1957 யார் பையன், எங்கள் வீட்டு மகாலட்சுமி
- 1958 உத்தம புத்திரன்
- 1959 மஞ்சள் மகிமை
- 1961 புனர்ஜென்மம்
- 1963 சித்தூர் ராணி பத்மினி
- 1968 கலாட்டா கல்யாணம்
- 1971 உத்தரவின்றி உள்ளே வா
மறைவு
சில ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட ஸ்ரீதர், திரைப்படப் இயக்குனர் பணியிலிருந்து முழுவதுமாக 1991 ஆம் ஆண்டிலிருந்து ஒதுங்கியிருந்தார். 2008, அக்டோபர் 20 இல் சென்னையில் தனது 75 ஆவது அகவையில் காலமானார்.