வெள்ளை ஆஸ்திரேலியா கொள்கை

வெள்ளை ஆஸ்திரேலியா கொள்கை (White Australia policy) என்பது ஆஸ்திரேலியாவுக்கு 1901 முதல் 1973 ஆம் ஆண்டு வரையில் வெள்ளையரல்லாத இனத்தவர்கள் குடியேற அனுமதி மறுக்கப்பட்ட ஆஸ்திரேலிய அரசின் கொள்கைகளுக்கு கொடுக்கப்பட்ட பெயராகும்.

வெள்ளை ஆஸ்திரேலியா கொள்கையை எடுத்துக்காட்டும் இச்சின்னம் 1906 இல் வெளியிடப்பட்டது.

1901 ஆம் ஆண்டில் உர்ருவாக்கப்பட்ட ஆஸ்திரேலியக் கூட்டமைப்பின் முதலாவது நாடாளுமன்றத்தினால் எவ்வித எதிர்ப்பும் இன்றி நிறைவேற்றப்பட்ட முதலாவது சட்டமூலங்களில் ஒன்று வெள்ளை ஆஸ்திரேலியா கொள்கையாகும். இரண்டாம் உலகப் போரை அடுத்து வந்த ஆஸ்திரேலிய அரசாங்கங்கள் படிப்படியாக இக்கொள்கையைத் தளர்த்தி வந்தது. இதன் படி முதலில் பிரித்தானியரல்லாத வெள்ளை இனத்தவர்களும் பின்னர் வெள்ளையரல்லாதோரும் அனுமதிக்கப்பட்டனர். 1973 ஆம் ஆண்டு முதல் வெள்ளிஅ ஆஸ்திரேலியா கொள்கை முற்றாக ஒழிக்கப்பட்டது. 1975 இல் இனவாரியாக தொழில்களுக்குத் தெரிவு செய்யப்படுதல் சட்டபூர்வமாகத் தடை செய்யப்பட்டது.

கூட்டமைப்புக்கு முன்னர் குடியேற்றக் கொள்கை

1830களுக்கு முன்னர் நியூ சவுத் வேல்ஸ், வான் டீமனின் நிலம் ஆகிய பிரித்தானிய குடியேற்ற நாடுகளில் குடியேற்றம் தொடர்பாக குறிப்பிடத்தக்க கொள்கைகள் இருக்கவில்லை. மாறாக பிரித்தானியாவில் இருந்து குற்றவாளிகளும் அவர்களைச் சார்ந்தவர்களுமே குடியேறினர். ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்ட 165,000 குற்றவாளிகளில் 4,000 பேர் மட்டுமே பிரித்தானிய டொமினியன்களைச் சேராதோர். இந்த 4,000 பேரில் 900 பேர் வெள்ளையரல்லாதோர் ஆவர்[1]. மக்கள் தொகையை அதிகரிக்கவென 1830ஆம் ஆண்டில் இருந்து, பிரித்தானியர்கள் இங்கு வந்து குடியேற ஊக்குவிக்கப்பட்டனர். ஊக்கத்தொகை, மற்றும் குடியேறுவதற்கு செலவுகள் ஆகியன அறிவிக்கப்பட்டன. 1830-1940 காலப்பகுதியில் 1,068,312 பிரித்தானியர்கள் குடிபெயர்ந்தனர்[2].

சீனர்கள் குடியேற்றம்

1851 இல் ஆஸ்திரேலியாவில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் குடியேறுவது மிக வேகமாக அதிகரித்தது. அடுத்த 20 ஆண்டுகளில், 40,000 சீன ஆண்களும் 11 சீனப் பெண்களும் தங்கச் சுரங்கங்களுக்கு குடிபெயர்ந்தனர்[3]. வெள்ளை இனத்தவர்களுக்கும் சீனர்களுக்கும் இடையில் அடிக்கடி கலவரங்கள் இடம்பெற ஆரம்பித்தன. இதனை அடுத்து 1855 முதல் சீனர்களுக்கு பல தடைகள் சட்டப்பூர்வமாக இடப்பட்டன. அவர்களிடம் இருந்து கூடுதலான வரிகள் அறவிடப்பட்டன. இத்தடைகள் 1870கள் அவரையில அமுலில் இருந்தன.

1870களில் குயின்ஸ்லாந்தில் சர்க்கரை உற்பத்தி ஆரம்பித்ததை அடுத்து வெப்பவலயப் பிரதேசங்களில் வேலை செய்வதற்கு ஆட்கள் பெருமளவில் தேவைப்பட்டது. அக்காலகட்டத்தில், பிஜி போன்ற பசிபிக் தீவுகளில் இருந்து இங்கு வரவழைக்கப்பட்டனர்[4]. 1870கள், 80களில் ஆஸ்திரேலியத் தொழிற்சங்கங்கள் ஆசியர்களை இங்கு கொண்டுவரும் திட்டத்திற்கெதிராகக் குரல் கொடுக்க ஆரம்பித்தன. குறைந்த கூலிகளுக்கு ஆசியர்களும், சீனர்களும் இங்கு கொண்டுவருவதனால் வெள்ளையினத்தவர்களின் தொழில் வாய்ப்புக் குறைவதாக அவர்கள் வாதிட்டனர்[3].

1875-1888 காலப்பகுதியிலிருந்து, அனைத்து ஆஸ்திரேலியக் குடியேற்றப் பிரதேசங்களும் சீனர்கள் மேலும் குடியேற அனுமதி மறுத்தது[4]. ஏற்கனவே குடியேறியவர்கள் வெளியேற்றப்படவில்லை. அவர்களுக்கு வெள்ளை இனத்தவருக்கு சமமாக குடியுரிமை வழங்கப்பட்டது.

கூட்டமைப்பில் இருந்து இரண்டாம் உலகப் போர் வரை

1901 ஆம் ஆண்டில் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர், ஆஸ்திரேலியத் தொழிற் கட்சியின் ஆதரவுடன் "பாதுகாவலர் கட்சி" (Protectionist Party) ஆட்சியை அமைத்தது. தொழிற்சங்கங்கள், மற்றும் பல்வேறு தொழிலாளர் இயக்கங்கள் வெள்ளையரல்லாத இனத்தவர்கள் குடியேறுவதற்கு எதிராகக் குரல் கொடுக்க ஆரம்பித்தன. இதனையடுத்து புதிய கூட்டாட்சி நாடாளுமன்றம் குடியேற்றக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை 1901 ஆம் ஆண்டில் இயற்றியது. இதே மாதிரியான சட்டமூலம் தென்னாபிரிக்காவிலும் இயற்றப்பட்டது.

அச்சட்டமூலத்தின் படி ஐரோப்பியர் அல்லாதோர் இங்கு குடியேற அனுமதி மறுக்கப்பட்டது. இச்ச்சட்டமூலத்தை பிரித்தானிய அரசாங்கம் தனது இந்திய, மற்றும் ஜப்பானிய பிரித்தானியர்களை குடியேற்ற மறுப்பதாகக் கூறி எதிர்ப்புத் தெரிவித்தது. இதனையடுத்து சட்டமூலத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. தேவையற்ற குடியேற்றங்களைத் தடுப்பதற்காக 50-சொற்கள் "சொல்வதெழுதல்" சோதனை அறிமுகப்படுத்தப்பட்டது.

1902 ஆண்டில் குயின்ஸ்லாந்தில் இருந்து 7,500 பசிபிக் தீவைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். 1904 ஆண்டு முதல் இவர்கள் ஆஸ்திரேலியாவுக்குக் குடியேறுவது முற்றாகத் தடை செய்யப்பட்டது.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.