கலங்கரை விளக்கம்

கலங்கரை விளக்கம் (ஒலிப்பு ) (Light house, வெளிச்ச வீடு), கடலில் செல்லும் கப்பல்களுக்கு வழி காட்டுவதற்காக ஒளி உமிழும் விளக்குகள் பொருத்தி கடற்கரைகளில் அமைக்கப்பட்டுள்ள உயர்ந்த கோபுரம் போன்ற அமைப்புக்களைக் குறிக்கும். இதை வெளிச்சவீடு எனவும் அழைப்பதுண்டு. முற்காலத்தில் இக் கலங்கரை விளக்கங்களில் தீயும் விளக்குகளும் ஒளி மூலங்களாக பயன்பட்டன. பிற்காலங்களில் கலங்கரை விளக்கங்களில், நவீன தெறிப்பிகளுடன் கூடிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டன.

அலெக்சாந்திரியாவின் கலங்கரை விளக்கத்தின் வரைபடம். பாரோவின் தீவில் உள்ளது.
டோவர் கோட்டையிலுள்ள ரோமர் கலங்கரை விளக்கம்
மட்டக்களப்பிலுள்ள கலங்கரை விளக்கம்

கலங்கரை விளக்குகள், ஆபத்தான கரைப் பகுதிகளையும், பவளப் பாறைகள் நிறைந்த இடங்களைக் குறித்துக் காட்டுவதற்காகவும், துறைமுகங்களுக்கான பாதுகாப்பான நுழை வழிகளைக் குறிப்பதற்காகவும் பயன்பட்டன. ஒரு காலத்தில் பெருமளவில் பயன்பாட்டிலிருந்த கலங்கரை விளக்கங்களின் தேவை இன்று அருகி வருகிறது. பல வகையான மின்னணுவியல் வழிசெலுத்தல் கருவிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், செயற்படும் கலங்கரை விளக்கங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது.

கலங்கரை விளக்கத் தொழில்நுட்பம்

கலங்கரை விளக்கத்தில் பயன்படும் ஒளிமூலம் விளக்கு எனப்படும். இது மின் விளக்காகவோ எண்ணெய் விளக்குகளாகவோ இருக்கலாம். இவற்றிலிருந்து வெளியாகும் ஒளி வில்லைகளைப் பயன்படுத்திக் குவியச் செய்யப்படுகின்றன. தொடக்ககாலக் கலங்கரை விளக்கங்களில் திறந்த தீச்சுவாலைகள் பயன்பட்டன. பின்னர் இதற்குப் பதிலாக மெழுகுதிரிகள் பயன்பாட்டுக்கு வந்தன. 1781 ஆம் ஆண்டளவில், ஐரோப்பாவில், ஆர்கண்ட் பொட்திரி விளக்கும், பரவளைவுத் தெறிப்பியும் உருவாக்கப்பட்டன. அமெரிக்காவில், 1810 ஆம் ஆண்டில் வின்ஸ்லோ லூயிஸ் என்பவர் ஆர்கண்ட் விளக்கு, பரவளைவுத் தெறிப்பி ஆகியவற்றை அறிமுகப்படுத்தும் வரை, திமிங்கில எண்ணெய் பயன்பாட்டில் இருந்தது. 1850 இல் திமிங்கில எண்ணெய்க்குப் பதிலாக ஒருவகைத் தாவர எண்ணெயான, கோல்சா எண்ணெய் பயன்படுத்தப்பட்டது. ஆனால், அமெரிக்க உழவர்கள் இதனை உற்பத்தி செய்வதில் அதிக ஆர்வம் காட்டாததால் அந்த ஆண்டே லார்ட் எண்ணெய் பயன்பாட்டுக்கு வந்தது. 1870 இல் அறிமுகமான மண்ணெய் 1880 ஆம் ஆண்டளவில் ஏறத்தாழ எல்லா கலங்கரை விளக்கங்களிலும் பயன்படத் தொடங்கியது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மின்சாரமும், கார்பைட் (அசட்டலீன்) வாயுவும், மண்ணெய்க்குப் பதிலீடுகள் ஆயின.[1]

தமிழ்ப் பண்பாட்டில் கலங்கரை விளக்கம்

பண்டைய காலத்தில் தமிழர் கப்பல் போக்குவரத்திற்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கலங்கரை விளக்கங்களைக் கட்டியுள்ளார்கள். சோழர் காலத்து கலங்கரை விளக்கத்தை நாகப்பட்டிணம் மாவட்டம் கோடியக்கரையில் காணலாம். "இலங்குநீர் வரைப்பிற் கலங்கரை விளக்கமும்" (சிலப்பதிகாரம் 6: 141) எனும் அடிகளால் பழந்தமிழ் நாட்டிலும் கலங்கரை விளக்கங்கள் இருந்ததென்பதை அறியலாம்.

மேற்கோள்கள்

  1. "The Linde Group - Gases Engineering Healthcare -". பார்த்த நாள் 6 April 2017.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.