வெலாசிராப்டர்
வெலாசிராப்டர் (Velociraptor) என்பது "அதிவேகத் திருடன்" எனப் பொருள்படும் ட்ராமோசாரிட் தெரோபாட் வகை டைனோசர்கள் 7 லிருந்து 8.3 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சிறிய வகை ஊனுண்ணிகளாகும். வெலாசிராப்டர்களில் ஏனைய வகைகள் வாழ்ந்திருப்பினும் வெலாசிராப்டர் மங்கோலியன்சிஸ் என்ற ஒரு வகை மட்டுமே ஆய்ந்தறியப்பட்டுள்ளது. இவ்வகையின் தொல்படிவங்கள் மத்திய ஆசியாவின் மங்கோலியாவில் கண்டறியப்பட்டுள்ளது.
வெலாசிராப்டர் Velociraptor புதைப்படிவ காலம்:83–70 Ma Late Cretaceous | |
---|---|
![]() | |
வெலாசிராப்டர் மங்கோலியன்சிஸ் மண்டையோட்டின் மறு உருவமைப்பு. | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கினம் |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | ஊர்வன |
பெருவரிசை: | Dinosauria |
வரிசை: | Saurischia |
துணைவரிசை: | Theropoda |
குடும்பம்: | Dromaeosauridae |
பேரினம்: | Velociraptor ஹென்றி ஒஸ்போர்ன், 1924 |
இனங்கள் | |
|
ஏனைய ட்ராமோசாரிட் வகை டைனோசர்களான டெய்னானிகஸ் மற்றும் அகீல்லோபேட்டர் வகைகளை விட வெலாசிராப்டர் உருவத்தில் சிறியது. நன்கு வளர்ந்த ஒரு வெலாசிராப்டர் ஒரு வான்கோழியின் அளவினது. இது சிறகுகள் உள்ளதாகவும், இரு கால்களால் நகர்வதாகவும், விறைத்த நீளமான வால் கொண்டதாகவும் வாழ்ந்தது. இந்த ஊனுண்ணி கதிர் அரிவாள் போன்ற வடிவுடைய கடினமான கூரிய இரு நகங்களை, முறையே இரு பின்னங்கால்களிலும் கொண்டிருந்தது. இது தன் இரையை கொல்வதற்கு இந்த நகங்களை பயன்படுத்தி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மேல்நோக்கிய மூக்குப்பகுதியைக்கொண்டு மற்ற வகை ட்ராமோசாரிட் டைனோசர்களினின்று வெலாசிராப்டரை வகைப்படுத்தலாம்.
மக்களிடையே மிகவும் பிரபலமாக அறியப்படுகிற டைனோசர் வகைகளுள், வெலாசிராப்டர் (சுருக்கமாக ’ராப்டர்’ என்றழைக்கப்படும்) வகை ஒன்று. ஜுராஸிக் பார்க் திரைப்படத்தொடர்களின் மூலம் இவை மக்களிடையே மிகப் பிரபலமாயின. ஆயினும், இந்த திரைப்படங்களில் வரும் வெலாசிராப்டர்கள் உருவ அமைப்பில் பெரியனவாகவும், சிறகுகள் இன்றியும் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளன. தொல்படிம ஆராய்ச்சியாளர்களுக்கும் வெலாசிராப்டர்கள் நன்கு பரிச்சயமானவை. இதுவரை கண்டறியப்பட்டுள்ள ட்ராமோசாரிட் வகை டைனோசர் படிமங்களுள் வெலாசிராப்டரின் படிமங்களே அதிகம். குறிப்பாக ப்ரோட்டோசெராடாப்ஸ் ஒன்றுடன் சண்டையிட்ட நிலையில் காணப்படும் புதை படிமத்தை சொல்லலாம்.
