வெடிப்பி

வெடிப்பி என்பது தீப்பொறி ஒன்றை உருவாக்கும் நோக்கோடு வடிவமைக்கப்பட்ட ஒரு சிறு வெடிபொருள் ஆகும். இது அனைத்துவிதமான வெடிபொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

பயன்பாடு

உயர்சக்தி வெடிமருந்துகளைக் கொண்ட வெடிபொருட்களில் கெற்பை வெடிக்க வைப்பதற்கான தீப்பொறியை வழங்கும் வகையில் பயன்படுத்தப்படுகிறது. அதேவேளை துப்பாக்கி ரவைகள், எறிகணைகள், ஏவுகணைகள் போன்றவற்றில் உந்துவிசை வெடிமருந்தை எரியச் செய்வதற்கான தீப்பொறியை வழங்கும் வகையிலும் பயன்படுத்தப்படுகிறது. கொஞ்சம் தெளிவாக எடுத்துக்காட்டோடு விளக்கினால், ஓர் எறிகணையில் இரண்டுவிதமான தேவைக்காக வெடிப்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. எறிகணையைப் பீரங்கியிலிருந்து இலக்கு நோக்கி ஏவுவதற்கு எறிகணையிலுள்ள உந்துவிசை வெடிமருந்தை எரிய வைக்க வேண்டும். இதற்கு வெடிப்பியொன்றே பயன்படுத்தப்படுகிறது. அதேபோல் ஏவப்பட்ட எறிகணை இலக்கில் மோதுகையில் அதிலுள்ள உயர்சக்த வெடிமருந்து வெடிக்க வேண்டும். அவ்வெடிமருந்தை வெடிக்க வைக்கும் கெற்புக்குத் தீப்பொறியைக் கொடுப்பதற்கும் வெடிப்பிதான் பயன்படுத்தப்படுகிறது.

வகைகள்

வெடிப்பிகள் தொழிற்படும் முறையைக் கொண்டு இரண்டாக வகைப்படுத்தலாம்: பொறிமுறை வெடிப்பிகள், மின்சார வெடிப்பிகள் என்பனவே அவை.

பொறிமுறை வெடிப்பிகள்

இவ்வெடிப்பிகள் பொறிமுறை (mechanically) மூலம் தூண்டல் ஏற்பட்டுத் தொழிற்படுகின்றன. வெடிப்பியினுள் உணர்திறன் கூடிய இரசாயனக் கலவையொன்று அடைக்கப்பட்டிருக்கும். மூடப்பட்டிருக்கும் முனையில் அடியாணி (Striker) அல்லது சுடும் ஊசி (Firing Pin) விசையோடு மோதுகையில் வெடிப்பியினுள்ளிருக்கும் உணர்திறன் கூடிய இரசாயனக் கலவை தூண்டப்பட்டு எரிகிறது. இதன்மூலம் ஏற்படும் தீப்பொறி வெடிப்பியின் திறந்த முனையூடு கடத்தப்படுகிறது. துப்பாக்கி ரவைகளின் அடிப்பாகத்தின் மையத்தில் வட்டமாக இருப்பதுதான் வெடிப்பி. துப்பாக்கியிலுள்ள அடியாணி அவ்வெடிப்பியில் மோதுகையில் தீச்சுவாலை உருவாக்கப்பட்டு ரவைக்கோதினுள் இருக்கும் கரிமருந்து எரிக்கப்படுகிறது. அதன்மூலம் ஏற்பட்ட உந்துதலால் ரவை நுனியிலுள்ள குண்டு துப்பாக்கிக் குழலைவிட்டுப் புறப்படுகிறது. அதேபோல் உயர்சக்தி வெடிமருந்துகளை வெடிக்க வைக்கும் சந்தர்ப்பத்திலும் இவ்வெடிப்பிகள் பயன்படத்தப்படுகின்றன. ஏவப்பட்ட எறிகணை இலக்கில் மோதும்போது அடியாணியொன்று வெடிப்பியில் மோதி தீச்சுவாலையை ஏற்படுத்துகிறது. அத்தீச்சுவாலையைப் பெற்ற கெற்பு வெடிப்பதன்மூலம் எறிகணையிலுள்ள வெடிமருந்து முழுவதும் வெடிக்கிறது.

மின்சார வெடிப்பிகள்

இவ்வெடிப்பிகள் மின்சாரம் மூலம் தூண்டல் ஏற்பட்டுத் தொழிற்படுகின்றன. மின்சாரம் கிடைத்ததும் சூடாகும் தங்குதன் இளையொன்று இவ்வெடிப்பியில் காணப்படும். அவ்விளையைச் சுற்றி வெப்பத்துக்கு எரியக்கூடிய உணர்திறன் கூடிய மருந்தொன்று தடவப்பட்டிருக்கும். தங்குதன் இளைக்கு மின்சாரம் கிடைக்கும்போது அதைச்சுற்றியுள்ள மருந்து எரிந்து தீச்சுவாலை உருவாக்கப்படுகிறது. மின்சார வெடிப்பிகள் பெரும்பாலும் மின்சாரக் கெற்புகளிற் பயன்படுத்தப்படுகின்றன.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.