ஏவுகணை

ஏவுகணை (missile) என்பது தானாக உந்திச் சென்று வெடிக்கும் வெடிகுண்டு ஆகும். பீரங்கிகள் போல் அல்லாமல், ஏவுகணைகளில் தாமே தம்மை செலுத்தும் தன்மை கொண்டவை.

ஏவுகணை ஒன்று பறப்பில்

ஏவுகணைகள் பொதுவாக ஏவூர்தி மூலமாகவோ, தாரை இயந்திரம் மூலமாகவோ தமது உந்து விசையை பெறுகின்றன. பொதுவாக ஏவுகணைகள் வெடிபொருள்களை தனது வெடிமுனையாக கொண்டாலும், பல நவின ஏவுகணைகள் வேதியியல் ஆயுதங்களையும், அணு ஆயுதங்களையும், உயிரியல் ஆயுதங்களையும் வெடிமுனையாக கொண்டு செல்ல வல்லவை.

தொழில்நுட்பம்

வழிகாட்டப்பட்ட ஏவுகணைகள் நான்கு முக்கிய அமைப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளன. அவையாவன:

  • இலக்கு குறிபார்த்தல் மற்றும் வழிகாட்டப்படல்.
  • பறக்கட்டுப்பாட்டு அமைப்பு
  • இயந்திரம்
  • வெடிமுனை

வழிகாட்டி அமைப்புகள்

ஏவுகணைகள் தமது இலக்கினை பல வழிகளில் கண்டறிய இயலும். இலக்குகள் நகரக்கூடிய வாகனங்களாகவோ, நிலையானவையாகவோ இருக்கலாம். பொதுவாக ஏவுகணைகள் தமது நகரும் இலக்கினை, இலக்கில் இருந்து வரும் கதிரியக்கத்தின் மூலமே அறிந்து கொள்ளுகின்றன. உதாரணமாக இலக்கு ஒர் வானூர்தியாக இருப்பின் அவ்வூர்தியில் இருந்து வரும் அகச்சிவப்பு கதிர்களோ, ரேடியோ கதிர்களோ, வெப்ப கதிர்களோ இலக்கினை கண்டறியும் வழியாக அமைகிறது. இலக்கினை தொடர்ந்து கண்காணித்து தாக்க ஏவுகணைகள் தம்முள் அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டி அமைப்புகளை (எ.கா கதிரலைக்கும்பா) சார்ந்துள்ளன. சில ஏவுகணைகள் தாம் ஏவப்பட்ட ஏவுமேடையில் உள்ள வழிகாட்டி அமைப்புகளின் துணையுடன் இலக்கை அடைகின்றன. மற்றொரு வகையான வழிகாட்டி அமைப்பு ஏவுகணையின் மேல் பொருத்தப்பட்டுள்ள படக் கருவி மூலம் பிடிக்கப்படும் காட்சிகளை கொண்டு ஏவுகணையை இலக்கு நோக்கி கணிப்பொறி மூலமோ, மனித துணை கொண்டோ செலுத்துகிறது. பல ஏவுகணைகள் மேல் கூறப்பட்ட பல முறைகளை ஒருங்கே கொண்டு துள்ளியமாக தாக்கவல்லவை.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.