வீரபாண்டி கண்ணீசுவரமுடையார் கோயில்

தேனி மாவட்டத்திலுள்ள வீரபாண்டி எனும் ஊரில் கண்ணீசுவரமுடையார் கோயில் அமைந்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தக் கோயில் சிவபெருமானுக்குப் புகழ் சேர்க்கும் பல கோயில்களில் ஒன்றாகும்.

வீரபாண்டி கண்ணீசுவரமுடையார் கோயில்
பெயர்
பெயர்:வீரபாண்டி கண்ணீசுவரமுடையார் கோயில்
அமைவிடம்
ஊர்:வீரபாண்டி
மாவட்டம்:தேனி மாவட்டம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா

தல வரலாறு

வைகை நதியின் கரையின் அடர்ந்த காட்டுப் பகுதியில் அசுரன் ஒருவனை வெல்வதற்காக சக்திதேவியின் அம்சமான கௌமாரி ஒரு சிவலிங்கம் செய்து அதன்முன் தவமியற்றி வந்தார். இதையறிந்த அசுரன் கௌமாரியைத் தூக்கிச் செல்ல முயன்றான். இதைத் தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்த கௌமாரி அருகிலிருந்த அருகம்புல்லை எடுத்து அவனை நோக்கி வீசினாள். அந்த அருகம்புல் முக்கழுப்படையாக உருவெடுத்து அசுரனை இரண்டாகப் பிளந்து கொன்றது. இதைப் பார்த்த தேவர்கள் வானிலிருந்து மலர்களைத் தூவினர். அவள் பூஜித்து வந்த சிவலிங்கத்திற்கு "திருக்கண்ணீசுவரர்" எனப் பெயரிட்டாள்.

மதுரையைத் தலைநகராகக் கொண்ட பாண்டிய நாட்டின் மன்னன் வீரபாண்டியன் தனது ஊழ்வினைகளால் இரண்டு கண்களின் பார்வையை இழந்தான். தனக்கு கண் பார்வை வேண்டி பல கோயில்களுக்குச் சென்றான். ஒரு நாள் அவனது கனவில் தோன்றிய இறைவன் இந்த கண்ணீசுவரமுடையார் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் கண் பார்வை கிடைக்கும் என்று சொன்னார். அதன்படி அந்த மன்னனும் இந்தப் பகுதிக்கு வந்து கௌமாரியை வணங்கி ஒரு கண்ணின் பார்வையும், கண்ணீசுவரமுடையாரை வணங்கி மற்றொரு கண்ணின் பார்வையையும் பெற்றான். அதன் பின்பு கண்ணீசுவரமுடையாருக்கு கற்கோயில் அமைத்து வழிபாடு செய்தான்.

சிறப்புக்கள்

  • கண்ணீசுவரமுடையார் கோயிலில் கண்ணீசுவரமுடையார் மற்றும் உடனிருக்கும் அம்மனாக அறம் வளர்த்த நாயகி இருக்கிறார். பாண்டிய மன்னனுக்குக் கண் பார்வை தந்த இந்தக் கோயிலில் வணங்கிச் செல்பவர்களுக்கு அனைத்து நோய்களும் நீங்கி விடும் என்று கருத்து இப்பகுதி மக்களிடையே இருக்கிறது.
  • இந்தக் கோயிலின் தீர்த்தமாக கோயிலுக்கு அருகே ஓடும் முல்லை நதியின் நீர் பயன்படுத்தப்படுகிறது. இந்த நீர்தான் அபிசேகத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.
  • இந்தக் கோயில் குறித்த தகவல்கள் சின்னமனூர் அரிகேசரி நல்லூர் தல புராணத்தில் பதினான்காம் படலத்தில் இடம் பெற்றிருக்கிறது.
  • இந்தக் கோயிலில் இந்தப் பகுதி மக்களில் பெரும்பான்மையாகத் திருமணம் செய்து கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

வழிபாடுகள்

இந்து சமயக் கோயிலில்கள் அனைத்திலும் செய்யப்படும் தினசரி பூசைகள் இந்தக் கோயிலிலும் செய்யப்படுகின்றன.

இந்தக் கோயிலில் தை மாதச் சங்கராந்தி, தைப்பூசம், மாசி மாத மகா சிவராத்திரி, பங்குனி மாத உத்திரம், சித்திரை மாத சிவராத்திரி பிறப்பு, வைகாசி மாத விசாகம், ஆடி மாத அமாவாசை, ஆவணி மாத விநாயகர் சதுர்த்தி, புரட்டாசி மாத நவராத்திரி திருவிழா , ஐப்பசி மாத தீபாவளி, கார்த்திகை மாத கார்த்திகை விழா, மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சி போன்ற நாட்களில் சிறப்புப் பூசைகள் செய்யப்படுகின்றன.

துணைக் கோயில்கள்

இந்தக் கண்ணீசுவரமுடையார் கோயிலின் துணைக் கோயில்களாக வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில், வீரபாண்டி செல்லாண்டியம்மன் கோயில் ஆகியவைகள் இருக்கின்றன.

பயண வசதி

தேனியிலிருந்து கம்பம் செல்லும் சாலையில் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் வீரபாண்டிக்கு இந்த வழியே செல்லும் அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்கின்றன.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.