வீரசோழியம்

வீரசோழியம் சோழர் காலத்தில் தோன்றிய ஒரு தமிழ் இலக்கண நூலாகும். 11 ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டை ஆண்ட வீரசோழன் காலத்தது. இக் காலத்தில் அதிகரித்து வந்த சமஸ்கிருதச் செல்வாக்கினால் தமிழில் சில புதிய இலக்கிய இலக்கண மரபுகள் உருவாயின. இதன் காரணமாக ஏற்பட்ட தேவைகளுக்கு இணங்கப் புதிய இலக்கண நூல்கள் தோன்றின. இவற்றுள் வீரசோழியமும் ஒன்று. புத்தமித்திரர் என்பார் இயற்றிய இந்நூலின் பெயர் வீர சோழன் என்னும் வீர ராசேந்திர சோழ மன்னனின் பெயரைத் தழுவியது எனக் கூறப்படுகிறது. இது தொல்காப்பியம் கூறும் பண்டைத் தமிழ் மரபுடன், சமஸ்கிருத இலக்கண மரபுகள் சிலவற்றையும் சேர்த்து எழுதப்பட்டதாகும்.

எனினும் இந்நூல் இயற்றப்பட்ட சொற்ப காலத்திலேயே வழக்கிழந்து போய்விட்டதாகவும், தமிழ் மரபுக்கு மாறான வடமொழி இலக்கண விதிகளைப் புகுத்தியதனாலேயே இந்நிலை ஏற்பட்டதாகவும் சிலர் கருதுகின்றனர். கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்தபுராணத்தை அரங்கேற்றும்போது அதன் காப்புச் செய்யுளின் முதற் சொல் தொல்காப்பியத்தின்படி இலக்கண வழுவுள்ளதாகக் கூறப்பட, வீரசோழியத்தை மேற்கோள் காட்டி இறைவன் அதனை நியாயப் படுத்தியதாகக் கதை உண்டு. ஆனால், தமிழ் இலக்கியங்கள் எதிலும் முன்னுதாரணம் இல்லாமல் தமிழ் மரபுக்கு மாறான புதிய இலக்கண விதிகள் வீரசோழியத்தில் புகுத்தப்பட்டிருப்பது குறித்துக் குற்றச்சாட்டுகள் உண்டு.

மேற்கோள் காட்டப்பட்டதாகக் கூறப்படுவது

கச்சியப்ப சிவாசாரியார் கந்த புராணத்தை எழுத இறைவனே அடியெடுத்து கொடுத்ததாக செய்தியுண்டு. அதாவது "திகட சக்கர செம்முகம்.. என்பதே அவ்வடியாம். ஆனால், கந்த புராணத்தை அவையில் அரங்கேற்றுங் கால், அவையோர் யாவரும் 'திகட சக்கரம்' என்பதிற்கு விளக்கம் கேட்டனர். கச்சியப்பரும், திகழ்+தசக்கரம்(திகழ்- விளங்குகின்ற; தசக்கரம்- பத்து கரங்கள்) என்பன புணர்ந்து திகடசக்கரம் ஆயிற்று என்றார். ஆனால் அறிஞரோ, 'ழ்'உம் 'த்'உம் சேர்ந்து ட் ஆகாது என மொழிந்தனர். பின்னர் முருகனே வந்து வீரசோழியத்தை மேற்கோள்காட்டி அவ்விதப் புணர்ச்சி அமையுமே என்றார் என்பதே அக்கதையாகும்.

வெளி இணைப்புகள்

வீரசோழியம் மூலமும் பெருந்தேவனார் இயற்றிய உரையும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.