விடாய்க்கால அணையாடை

விடாய்க்கால அணையாடை (sanitary napkin), மாதவிடாய் அடிக்குட்டை, மூட்டுத்துணி, விடாய்க்கால அடிப்பட்டை (sanitary pad), அல்லது பட்டை (pad) எனப் பலவாறாக வழங்கப்படும் உறிஞ்சுகின்றத் தன்மை கொண்ட இவ்வாடையை பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தில்் வெளியேறும் உதிரத்தால் ஆடைகள் கறைபடாதிருக்கப் பயன்படுத்துகின்றனர். மேலும் யோனி சீராக்க அறுவை, குழந்தைப் பிறப்பிற்குப் பிந்தைய குருதிப்போக்கு (lochia), கருக்கலைப்பு காலங்களிலும் பெண்ணின் யோனியிலிருந்து குருதிப் போக்கு நிகழக்கூடிய பிற நேரங்களிலும் இவற்றைப் பயன்படுத்துகின்றனர்.

களைந்தெறியக்கூடிய இறக்கையில்லா (இடது) மற்றும் இறக்கையுடன் கூடிய (வலது) விடாய்க்கால அணையாடைகள்.

கட்டுப்பாடிழந்த சிறுநீர்ப் போக்குக்கான கூடிய உறுஞ்சும் தன்மை கொண்ட சிறுநீர் அடிக்குட்டைகளிலிருந்து இவை மாறுபட்டவை. சிறுநீர் அடிக்குட்டைகள் கட்டுப்பாடிழந்த அல்லது தகைவுவிளை சிறுநீர்ப் போக்கினை உடைய ஆண் பெண் இருபாலராலும் அணியப்படுகின்றன.

வளர்ந்து வரும் அறிவியல் அறிவினையொட்டி இவற்றின் தன்மையிலும் வடிவமைப்பிலும் பல முன்னேற்றங்கள் காணப்படினும் உலகின் நாகரிகம் எட்டா பெரும்பகுதிகளில் பெண்கள் தூய்மை குறைந்த துணித்துண்டுகளையே பயன்படுத்துகின்றனர்.[1] பழைய துணிகள், மண், மற்றும் சேற்றைப் பயன்படுத்துவதும் உண்டு.[2] இவற்றின் தூய்மைக்குறைவினால் பலவகை நோய்களுக்கு ஆளாகின்றனர்

பொருளாதார நலிவடைந்த பெண்களால் வாங்கவியலாத நிலையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டும் மீண்டும் பயன்படுத்தும் வண்ணமும் தீர்வு காண்கின்றனர். இத்தகைய பெண்களின் பயனிற்காக மலிவு விலைத் தீர்வாக தமிழ்நாட்டின் கோவையின் ஊரகப்பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் ஓர் புதிய இயந்திரத்தை வடிவமைத்துள்ளார். இதன்மூலம் வழக்கமான தயாரிப்புச் செலவைவிட மூன்றில் ஒருபங்குச் செலவில் இவ்வாடைகளைத் தயாரிக்க முடிகிறது.[3]

பொதுவானவை

ஒரு பெண்ணின் மாதவிடாய் காலத்தில் மாதவிடாய் ஒழுக்கை உறிஞ்சிக்கொள்ளுமாறு இவற்றை அணிகின்றனர். பெண்ணின் உள்ளாடைக்கும் பிறப்புறுப்பிற்கும் இடையில் இது அணியப்படுகிறது. யோனியின் உள்ளே அணியும் பஞ்சுத்தக்கையையும் மாதவிடாய் குப்பியையும் போலன்றி உடலின் வெளிப்புறம் இது அணியப்படுகிறது.

இவை பயன்படுத்தப்படும் நாடு, அணியும் வண்ணம் மற்றும் வணிகச்சின்னத்தைப் பொறுத்து பலவகை பொருட்களால் தயாரிக்கப்படுகிறது.

சில புகழ்பெற்ற வணிகச்சின்னங்களாக கோட்டெக்சு, இசுடேஃப்ரீ, விங்சு, ஆல்வேசு மற்றும் விசுபர் ஆகியன ஆகும்.

சில நெருக்கடிச் சூழலில், அணையாடைகளைக் கொண்டுசெல்லாத பெண் பொதுக் கழிப்பிடங்களில் உள்ள கழிவறை துடைத்தாள்களைத் தற்காலிகமாகப் பயன்படுத்தலாம்.

அணையாடைகள் முழுவுடல் நுணுகிநோக்கியில் புலப்படும்.[4]

சான்றுகோள்கள்

  1. Letters: Period pain in Zimbabwe - Salon
  2. Thomas L. Friedman (April 6, 2007). "Cellphones, Maxi-Pads and Other Life-Changing Tools". New York Times. pp. 1.
  3. http://xavierdayanandh.wordpress.com/2011/12/20/did-arunachalam-muruganantham-go-to-a-design-school/
  4. Gustafson, Kristi (30 November 2010). "Female passenger subjected to patdown after her sanitary napkin showed up on body scanner". San Francisco Chronicle. http://www.sfgate.com/cgi-bin/blogs/hottopics/detail?entry_id=78004. பார்த்த நாள்: 30 November 2010.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.