வாழைச்சேனை

வாழைச்சேனை (Valaichchenai) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம். இந்தியப் பெருங்கடலில் புகழ் பெற்ற பாசிக்குடா கடற்கரை வாழைச்சேனை நகரில் இருந்து 3 கிமீ கிழக்கே அமைந்துள்ளது.

வாழைச்சேனை
மாநகரம்
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்மட்டக்களப்பு
பிரதேச செயலாளர் பிரிவுகோரளைப்பற்று, கோரளைப்பற்று மத்தி

இந்நகரம் மட்டக்களப்பு நகரிற்கு வடக்கே 30 கிமீ தொலைவிலும் பொலன்னறுவைக்குக் கிழக்கே 70 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. கொழும்பு-மட்டக்களப்பு தொடருந்துப் பாதையும் ஏ-15 நெடுஞ்சாலையும் இந்நகரூடாகச் செல்கின்றன.

வாழைச்சேனையின் மேற்கிலிருந்து வடக்கு எல்லையாக, வாழைச்சேனை ஆறு எனப் பெயர்பெற்ற மதுறு ஓயாவின் வடிச்சல் செல்கிறது. வாழைச்சேனை ஆறு கிழக்கிலே பாசிக்குடாவின் வடக்கு முனையில் வங்காள விரிகடலுடன் இணைகின்றது. தெற்கில் ஓட்டமாவடி எனும் முஸ்லிம் நகரம் உள்ளது. வாழைச்சேனை மட்டக்களப்பு பிரதான வீதி இவ்வூரை இரண்டாகப் பிரிக்கின்றது. வாழைச்சேனை கிழக்கில் தமிழரும் மேற்குப் பிரதேசம் முழுவதும் முஸ்லிம்களும் வாழ்கின்றனர். வாழைச்சேனையின் கிழக்கு எல்லையாகப் பேத்தாழைக் கிராமம் உள்ளது.

வாழைச்சேனை ஆற்றுடன் இணைந்து தற்போது அமைக்கப்பட்டுள்ள மீன்பிடித்துறைமுகம் ஒரு காலத்தில் பிரபல்யம் பெற்று விளங்கியது. தபாற்துறை அல்லது வங்களாத்துறை என அழைக்கப்பட்ட இவ்விடம் மட்டக்களப்பிற்கும் திருகோணமலைக்கும் இடையிலான போக்குவரத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்தது. பின்னர் ஆற்றின் மேற்குப் பகுதியில் அமைக்கப்பட்ட ஓட்டமாவடிப் பாலம் புகையிரத மோட்டார்ப் போக்குவரத்திற்கு வழியமைத்ததால் நீர்ப்போக்குவரத்தின் தேவை நின்றுவிட்டது.

வாழைச்சேனையின் வெருகல், வாகரை தொடக்கம் தெற்கிலுள்ள வந்தாறுமூலை வரை உள்ள மக்கள் அனைவரும் வாழைச்சேனையுடன் தொடர்புள்ளவர்களாகவே விளங்குகின்றனர். இவர்கள் தமக்குத் தேவையான பொருட்களை வாங்கவும் தமது உற்பத்திப் பொருட்களை விற்கவும் வாழைச்சேனை சந்தையைப் பயன்படுத்துகின்றனர்.

குடியேற்றம்

வாழைச்சேனைப் பிரதேசத்தில் தமிழரும் முஸ்லிம்களும் வாழ்கின்றனர். இப்பிரதேசம் இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு காடடைந்த பிரதேசமாக இருந்தது. இங்கு கல்குடாத்துறையை ஒட்டிய பகுதியில் ஆதிக்குடிகளான வேடுவர் வசித்து வந்தனர். மலைநாட்டிலும் பிறபிரதேசங்களிலிருந்தும் குடிப்பெயர்ச்சிகள் இடம்பெற்ற போது முஸ்லிம்களும் தமிழர்களும் இங்கு குடியேறினர்.

வாழைச்சேனை ஆற்றின் மேற்குக்கரையோரமாக விளங்கிய மருங்கையடிப் பூவல் பிரதேசம், வடிச்சல் நிலமாகவும் பயிர்ச் செய்கைக்கு உகந்ததாகவும் விளங்கியதால் படிப்படியே முஸ்லிம்களின் குடியிருப்புகள் அப்பிரதேசத்தை நோக்கி நகரலாயிற்று. இங்கு குயிடியேறியோர் வாழைமரப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டனர். சேனைப் பயிர்ச்செய்கை என்ற வகையில் வாழைச்சேனையென இவ்விடம் பெயர் பெறலாயிற்று. வாழைமரங்களை பெருமளவு செய்கை பண்ணிய நிலச்சொந்தக்காரர் வாழைச்சேனையார் எனவும் பெயர் பெற்றனர்.

மருங்கையடிப்பூவல் என அழைக்கப்பட்ட இப்போதுள்ள வாழைச்சேனை நான்காம் வட்டாரப் பிரதேசமே ‘வாழைச்சேனை’ என்ற பெயருக்குரியதாய்த் திகழ்ந்தது. மருங்கைப்பூவல் என்ற பிரதேசத்தையொட்டி இருந்த, கசட்டையடி, நாவலடி, வெம்பு ஆகிய இடங்கள் பின்னர் வாழைச்சேனையுடன் இணைந்து பெயர் பெற்றன. நாவலடி, வெம்பு ஆகிய இடங்களில் நாவல் மரங்களும் காசான் பற்றைகளும் முந்திரிகை மரங்களும் நிறைந்து காணப்பட்டன. 1900 களுக்குப் பிறகே இப்பிரதேசம் மனித குடியிருப்புகளுக்கு ஏற்றனவாக மாற்றமடைந்தன.

ஆரம்பத்தில் ஓலைக்குடிசைகளும் ஒரு சில கல் வீடுகளுமே இருந்தன. இன்று காணப்படும் முன்னேற்றங்கள் கடந்த ஐம்பது வருடங்களுக்குள் ஏற்பட்டதே. மின்சாரம், வீதிகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் எல்லாம் ஐம்பது தொடக்கம் எழுதுபது ஆண்களில் ஏற்பட்ட வளர்ச்சியே.

வாழைச்சேனை, ஓட்டமாவடி, மீராவோடை ஆகிய இடங்களில் குடியேறிய முஸ்லிம்களின் வரலாறு காத்தான்குடி முஸ்லிம்களின் வரலாற்றுடனும் பெருமளவு மலைநாட்டு ராஜ்ஜியத்துடனும் தொடர்புபடுவதை வரலாற்றில் காண முடிகின்றது. காத்தான்குடியில் குடியேறியோரில் ஒரு பிரிவினரும் கண்டி, மன்னார் ஆகிய இடங்களில் குடியேற்றப்பட்ட ஒரு பிரிவினரும் கல்குடா தொகுதி பிரதேசங்களில் குடியமர்ந்தனர் எனக் கொள்ளலாம். வாழைச்சேனையின் குடிப்பரம்பல் அதிகரித்ததும் இப்பிரதேச மக்கள் அருகிலுள்ள பிற பகுதிகளில் குடியேறி விவசாயம், மீன்பிடி போன்ற தொழில்களில் ஈடுபட்டு வந்தனர். இப்பிரதேசங்களும் பின்னர் தனித்தனி ஊர்களாக மாற்ற மடைந்தன. பிறைந்துறைச்சேனை, மாவடிச்சேனை, தியாவட்டவான், பாலை நகர், குறாத்தை, ஹிஜ்ரா நகர் (கேணிநகர்), மாங்கேணி, பனிச்சங்கேணி, கள்ளிச்சை, உன்னிச்சை, ஜெயந்தியாய, ரிதிதென்ன போன்ற பிரதேசங்களில் இப்பிரதேச மக்கள் பரந்து வாழ்கின்றனர்.

வாழைச்சேனை வரலாறு

வாழைச்சேனையின் ஆரம்ப கால வரலாறு குறித்து ஒரு சில நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள வை.அகமதுவின் “வாழைச்சேனை வரலாறு“, திருமதி.சி.ப.தங்கத்துரை எழுதிய “ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலய வரலாறு“, தாழை செல்வநாயகம் எழுதிய “வாழைச்சேனையின் வரலாற்று விழுமியங்கள்“ போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை.

மக்கள் பரம்பல்

வாழைச்சேனையில் தமிழரும், முஸ்லிம்களும் வாழ்கின்றனர். தமிழர் வாழைச்சேனை பிரதான வீதியின் கிழக்கேயும், முசுலிம்கள் மேற்கேயும் வாழ்கின்றனர்.

கோறளைப்பற்று பிரதேச சபை வாழைச்சேனை
    • மக்கள்தொகை - 125,000
    • பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்(2008) - 41,858
நிர்வாக அலகு
கோறளைப்பற்று- வாழைச்சேனை
கிராம சேவையாளர் பிரிவுகள் - 12
பரப்பளவு (கிமி2) - 35
கோறளைப்பற்று மத்தி- வாழைச்சேனை
கிராம சேவையாளர் பிரிவுகள் - 9
பரப்பளவு (கிமி2) - 80

போக்குவரத்து

இலங்கைத் தலைநகர் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு வரையான தொடருந்துப் போக்குவரத்து வாழைச்சேனை ஊடாகவே செல்கிறது. அத்தோடு திருகோணமலை ஊடான பேருந்துப் போக்குவரத்தும் வாழைச்சேனை ஊடாக நடைபெறுகிறது.

பாடசாலைகள்

  • வாழைச்சேனை இந்துக் கல்லூரி
  • பேத்தாழை விபுலானந்தா வித்தியாலயம் வாழைச்சேனை
  • வாழைச்சேனை அந்-நூர் தேசியப் பாடசாலை
  • வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம்
  • வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயம்
  • வாழைச்சேனை ஹைராத் வித்தியாலயம்
  • வாழைச்சேனை கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலயம்
  • வாழைச்சேனை புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலயம்
  • வாழைச்சேனை கல்குடா நாமகள் வித்தியாலயம்
  • வாழைச்சேனை கல்மடு விவேகானந்த வித்தியாலயம்
  • பிறந்துரசேனை அஷ்கர் வித்தியாலயம் வாழைச்சேனை
  • பிறந்துரசேனை சாதுலிய வித்தியாலயம்வாழைச்சேனை
  • மாவடிச்சேனை
  • செம்மனோடை
  • ரெதிதென்ன
  • ஜெயந்தியாய

தொழிற்சாலைகள்

  • வாழைச்சேனை காகித ஆலை
  • வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகம்

மேற்கோள்கள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.