வள்ளி (சொல் விளக்கம்)

தொல்காப்பியம் அகத்திணை 7, புறத்திணை 7 எனப் பகுத்துக்காட்டியதை மாற்றிப் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூல் புறத்திணையை 12 படலங்களாகப் பகுத்துக் காட்டுகிறது. இந்தப் 12-ல் ஒன்று பாடாண் படலம். பாடாண் படலத்தில் 48 துறைகள் காட்டப்பட்டுள்ளன. அவற்றில் தொல்காப்பியம் கொடிநிலை கந்தழி வள்ளி எனக் காட்டிய துறைகளுக்கும் துறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த மூன்றும் அந்த 48 துறைகளில் அடங்கும்.

தொல்காப்பியம் தரும் விளக்கம்

வீரக்கழல்
வள்ளி என்பது போரில் புறங்கொடாமல் போரிட்ட வீரனுக்கு அரசன் அணிவிக்கும் வீரக்கழல் இது பொன்னால் செய்யப்பட்டு வாடாமல் இருக்கும். [1]
கடவுளின் வள்ளண்மு
வள்ளி என்னும் துறை வள்ளல் தன்மையைப் போற்றும் துறை. இது கடவுளின் வள்ளல் தன்மையைப் போற்றுவதாய்க் கடவுள் வாழ்த்துப் பாடலாக வரும், [2]
மகளிர் தோளில் ஒப்பனையாக எழுதப்படும் கொடி
வள்ளி என்பது மகளிரின் தோளில் எழுதப்படும் கொடி-ஓவிய ஒப்பனை. [3]

புறப்பொருள் வெண்பாமாலை விளக்கம்

வள்ளி - துறை விளக்கம்
வேலன் வெறியாடுவது 'வள்ளி' என்னும் துறை[4]
துறைவிளக்கப் பாடலின் செய்தி
சூலமோடு ஆடும் சுடர்ச்சடையான் சிவன். அவன் காதல் மகன் வேலன். வேலனாக வந்த பூசாரியோடு மகளிர் வள்ளிக்கூத்து ஆடுவது விழுமிய நோக்கம் கொண்டது. (தலைவி தன் உள்ளத்தில் உள்ள தலைவனை வெளிப்படுத்திவிடுவாள் அல்லவா?)[5]
இளம்பூரணர் கருத்து
தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய ஆசிரியர் இளம்பூரணர். அவர் கொடிநிலை, கந்தழி என்னும் இரண்டு துறைகளுக்கு இந்தப் புறப்பொருள் வெண்பாமாலை நூல் காட்டியுள்ள பாடல்களை மேற்கோள் பாடல்களாகத் தருகிறார். ஆனால் வள்ளி என்னும் இந்தத் துறைக்கு எடுத்துக்காட்டு 'வந்தவழிக் கண்டுகொள்க' எனச் சொல்லி விட்டுவிடுகிறார். கொடிநிலை கந்தழி வள்ளி என்பதற்குத் தரப்பட்டுள்ள விளக்கம் அவரது கருத்து எனத் தெரிகிறது.
காண்க: கொடிநிலை, கந்தழி

அடிக்குறிப்பு

  1. வாடா வள்ளி, வயவர் ஏத்திய
    ஓடாக் கழல்-நிலை (தொலகாப்பியம் 3-63, புறத்திணையியல்)
  2. கொடிநிலை, கந்தழி, வள்ளி, என்ற
    வடு நீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
    கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே (தொல்காப்பியம் 3-85 புறத்திணையியல்)
  3. வண்டே, இழையே, வள்ளி, பூவே,
    கண்ணே, அலமரல், இமைப்பே, அச்சம், என்று
    அன்னவை பிறவும் ஆங்கண் நிகழ-
    நின்றவை களையும் கருவி' என்ப (தொல்காப்பியம் 3-92 களவியல்)
  4. கொளு
    பூண்முலையார் மனம்உருக
    வேல்முருகிற்கு வெறியாடின்று.
  5. பாடல்
    வேண்டுதியால் நீயும் விழைவோ விழுமிதே
    ஈண்டியம் விம்ம இனவளையார் - பூண்தயங்கச்
    சூலமோ டாடும் சுடர்ச்சடையோன் காதலற்கு
    வேலனோ(டு) ஆடும் வெறி.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.