கந்தழி

கந்தழி என்னும் துறைபற்றித் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

வழிபடும் தெய்வம், நடுகல்-தெய்வம் போன்றவை பகைவரின் வலிமையை அழித்துப் பற்றுக்கோடாகித் துணைநின்ற பாங்கைப் பாராட்டிப் பாடுவது கந்தழி. [1] கந்து என்னும் சொல் துணைநிற்றலைக் குறிக்கும். [2]

பாடாண்திணை எட்டு வகைப்படும். [3]
அவற்றில் முதல் ஆறு துறைகள் [4] அமரர்கண் முடியும். [5]
அமரர் என்போர் தெய்வநிலை எய்திய பெருமக்களும், தெய்வங்களும் ஆவர்.

கடவுள் மேலும், வேண்டியவர் மேலும் காமம் கொள்ளல் பின்னைய இரண்டு காமப்பகுதிகள். [6]
தேவாரம், திருவாசகம், திவ்வியப்பிரபந்தம் போன்றவை காமப்பகுதி.

இது குழந்தையாக்கியும் [7] ஊரொடு தோற்றம் செய்தும் [8] இரு வகையில் பாடப்படும். [9]

கொடிநிலை கந்தழி வள்ளி ஆகிய மூன்றும் கடவுள் வாழ்த்தோடு ஒப்ப வைத்து எண்ணப்படும். இது போக தமிழ்த் தத்துவக் கொள்கையும் இங்கு எண்ணத்தக்கது கொடிநிலை ஒன்றைப் பற்றுக் கோடாக கொண்டு படர்தலையும் அதாவது உயிரின் இயல்பையும் வள்ளி அருள் நிலையாகவும் கந்து கட்டு என்றும் பொருளில் கந்தழி கட்டழிந்த (limitless) பரம்பொருளையும் குறிக்கும்

புறப்பொருள் வெண்பாமாலை விளக்கம்

தொல்காப்பியம் அகத்திணை 7, புறத்திணை 7 எனப் பகுத்துக்காட்டியதை மாற்றிப் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூல் புறத்திணையை 12 படலங்களாகப் பகுத்துக் காட்டுகிறது. இந்தப் 12-ல் ஒன்று பாணாண் படலம். பாடாண் படலத்தில் 48 துறைகள் காட்டப்பட்டுள்ளன. அவற்றில் தொல்காப்பியம் கொடிநிலை கந்தழி வள்ளி எனக் காட்டிய துறைகளுக்கும் துறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த மூன்றும் அந்த 48 துறைகளில் அடங்கும்.

துறை விளக்கம்
அரசன் பகைவர் கோட்டையை அழித்த சிறப்பைப் பாடுவது.[10]
துறைவிளக்கப் பாடலின் செய்தி
பகைவர் அரண் பற்றி எரிகிறது. அரசனை வெறும் ஆயன் என எண்ணவேண்டா. மது அரக்கனை அழித்த மாயவன் என எண்ணுக.[11]

இவற்றையும் காண்க

அடிக்குறிப்பு

  1. கொடிநிலை கந்தழி வள்ளி என்னும் வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே – தொல்காப்பியம் 3-85
  2. காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் பேதைமை எல்லாம் தரும். – திருக்குறள்
  3. தொல்காப்பியம் – 3-78.
  4. கொடிநிலை, கந்தழி, வள்ளி, புலவராற்றுப்படை, புகழ்தல், பரவல்
  5. தொல்காப்பியம் – 3-79
  6. தொல்காப்பியம் 3-80,
  7. பிள்ளைத்தமிழ்
  8. உலாநூல்கள் போன்றவை
  9. தொல்காப்பியம் 3-81,82
  10. கொளு
    சூழுநேமியான் சோஎறிந்த
    வீழாச்சீர் விறல்மிகுத்தன்று.
  11. பாடல்
    மாயவன் மாய மதுவான் மணிநிரையுள்
    ஆயனா எண்ணல் அவனருளால் - காயக்
    கழலவிழக் கண்கனலக் கைவளையார் சோரச்
    சுழலழலுள் வைகின்று சோ.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.