வல்வெட்டித்துறை
வல்வெட்டித்துறை (Valvettithurai) இலங்கையின் வடகிழக்குக் கரையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். இது யாழ்ப்பாண நகரில் இருந்து வடக்கே 16 மைல் தூரத்திலும், கிழக்கே 9 மைல் தூரத்திலும், பருத்தித்துறையிலிருந்து மேற்கே 5 மைல் தூரத்திலும், தென்னிந்தியாவிலிருந்து தெற்கே கடல் மார்க்கமாக 30மைல் தூரத்திலுமுள்ள ஒரு துறைமுகப்பட்டினம். இதன் பரப்பு ஒன்றேமுக்கால் சதுரமைல்.
வல்வெட்டித்துறை Valvettithurai | |
---|---|
நகரம் | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | யாழ் மாவட்டம் |
பிரதேச செயலாளர் பிரிவு | வடமராட்சி வடக்கு |
அரசு | |
• வகை | நகரசபை |
• தலைவர் | நடராஜா அனந்தராஜ் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) |
பரப்பளவு | |
• மொத்தம் | 4.85 |
மக்கள்தொகை (2007) | |
• மொத்தம் | 18,000 |
• அடர்த்தி | 3,711 |
நேர வலயம் | நேர வலயம் (ஒசநே+5:30) |
இலங்கையின் வடபாகத்தின் கடற்கரையோரத்தில் கிழக்கே ஊறணியில் இருந்து மேற்கே ஊரிக்காடு வரையும் தெற்கே வல்வெட்டி, கம்பர்மலை கிராமங்களும் அடங்கப்பட்ட 250 ஏக்கர் விஸ்தீரணமுள்ளதாக இருந்த சிறிய பட்டினம் வல்வெட்டித்துறை. இன்று பழமை வாய்ந்த கந்தவனக்கடவை தொடக்கம் தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஈறாகவும் மூன்றரை மைல் நீளமும் அரை மைல் அகலமும் உள்ள வல்வெட்டித்துறை நகரசபையாக மிளிர்கின்றது. ஒவ்வொரு கிராமமும் தமக்கென்று பாரம்பரிய கலாச்சாரம், அரசியல், பண்பாடுகளை கொண்ட கதைகளை தாங்கியுள்ளது.
இங்கு வசிப்பவர்கள் இலங்கைத் தமிழர்கள் ஆவர். பெரும்பாலும் இந்து, மற்றும் கத்தோலிக்க மதத்தையும் சேர்ந்தவர்கள். கமம், மீன்பிடித்தல், மற்றும் வணிகம் போன்ற துறைகளில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். இங்குள்ளவர்கள் தமிழநாட்டின் கோடிக்கரை, வேதாரண்யம் போன்ற பகுதிகளுடன் கப்பற் தொடர்புகளை வைத்திருந்தபோதும் இப்போது நிலவும் சூழ்நிலைகளால் இத்தொடர்புகள் மிகவும் குறைந்துள்ளன. இங்கிருந்தே உள்ளூரில் தயாரிக்கப்பட்ட அன்னபூரணி என்ற பாய்க்கப்பல் 1933 ஆம் ஆண்டில் அத்திலாந்திக் பெருங்கடலைக் கடந்து அமெரிக்காவின் மசச்சூசெட்சை வந்தடைந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழ விடுதலை இயக்கம் ஆகிய ஈழ இயக்கங்கள் இங்கேயே உருவாகின. பிரபலமான போராளித் தலைவர்கள் வேலுப்பிள்ளை பிரபாகரன், குட்டிமணி ஆகியோர் இங்கு பிறந்தவர்கள்.
பிரபல கோயில்களான வல்வை வைத்தீஸ்வரன் ஆலயம், முத்துமாரி அம்மன் ஆலயம் என்பன இங்கு காணப்படுகின்றன.
சாரண இயக்கத்தில் அகில இலங்கைவரை முதலாவது இடம் சென்ற யா/சிதம்பரக்கல்லூரி இங்கு உள்ளது.
வல்வெட்டித்துறையில் பிறந்து பிரபலமானவர்கள்
- ச.வைத்தியலிங்கம்பிள்ளை
- ஆழிக்குமரன் ஆனந்தன்
- வேலுப்பிள்ளை பிரபாகரன்
- குட்டிமணி - யோகச்சந்திரன்
- கிட்டு (கேணல் கிட்டு)
- வல்வை ந அனந்தராஜ்
- பாலசிங்கம் நடேசன்
வல்வெட்டித்துறையின் மறக்க முடியாத நாட்கள்
- வல்வை நூலகப் படுகொலைகள், மே 12, 1985
- வல்வைப்படுகொலை ஆகத்து 2, 1989
- வல்வைப்புயல் - தொடர் குண்டுவீச்சுத்தாக்குதல் - சனவரி 1992
வரலாற்றுப்பெருமை மிக்க இடங்கள்
- தீருவில் ஞாபகார்த்த தூபி
- செல்வச் சந்நிதி - தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயம்
- தொண்டைமானாறு மண்டபக்கிடங்கு
- தொண்டைமானாறு வெளிக்கள நிலையம்
- ஊரணி ஊற்று