வறுமைக்கோட்டிற்கு கீழானவர்கள் (இந்தியா)

வறுமைக்கோட்டிற்கு கீழானவர்கள் (Below Poverty Line) என்பது பொருளாதார ஏற்றத்தாழ்வைக் குறிக்கவும் அரசு வழங்கும் மானியத்தொகை மற்றும் உதவிகள் தேவைப்படும் தனிநபர்கள் மற்றும் குடும்பங்களை அடையாளம் காணவும் இந்திய அரசு பயன்படுத்துகின்ற ஓர் பொருளியல் குறிகாட்டியும் வறுமைக்கான குறுமட்டமும் ஆகும். இது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுவதோடு மாநிலத்தினுள்ளும் பல்வேறு இடங்களுக்கிடையே மாறுபடுகின்றது. பல்வேறு காரணிகளைக் கொண்டு இக்குறியீடு தீர்மானிக்கப்படுகிறது. தற்போதைய குறியீடு 2002ஆம் ஆண்டின் கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டது. அடுத்த பத்தாண்டுகளுக்கு உரிய புதிய குறியீட்டை அறிவிக்கத் தேவையான கணக்கெடுப்பு நடுவண் அரசால் இன்னமும் முடிவு செய்யப்படவில்லை;இதற்கான காரணிகளை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.[1]பன்னாட்டளவில், ஒருவருக்கு ஒருநாளைக்கு கொள்வனவு ஆற்றல் சமநிலை $1.25 கீழ் உள்ளவர்கள் மிகுந்த வறியவர்களாக அடையாளப்படுத்தப்படுகின்றனர்.இந்த மதிப்பீட்டின்படி ஏறத்தாழ 40% இந்தியர்கள் மிகுந்த வறியவர்களாக அறியப்படுகின்றனர். வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட வறுமைக்கோடுகள் அடிப்படை உணவுத்தேவையை வழங்கக்கூடிய குறைந்த பட்ச வருமானமாகக் கொள்ளப்படுகிறது; இது மற்ற அடிப்படைத் தேவைகளான கல்வியையும் உடல்நல பராமரிப்பையும் கருத்தில் கொள்வதில்லை.

அளவை முறை

சிற்றூர் பகுதிகளுக்கும் நகரப்பகுதிகளுக்குமான கட்டளைவிதிகள் வெவ்வேறானவை. பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் வறுமையின் அளவு 13 கூறுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் சூன்யத்திலிருந்து நான்குவரை மதிப்புக் கொடுக்கப்பட்டு இறுதி மதிப்பெண் பெறப்பட்டது. உயர்ந்த பட்சமாக 52 பெறக்கூடிய இவ்வமைப்பில் 17 அல்லது அதற்கு குறைந்த (முன்பு 15ஆக இருந்தது) மதிப்பெண்களைப் பெற்ற குடும்பங்கள் வறுமைக்கோட்டிற்கு கீழானவர்களாக வகைப்படுத்தப்பட்டனர். இந்தியாவில் இது ஒருவருடைய வருமானத்தை மட்டுமே கொண்டு கணக்கிடப்படுகிறது; நிலவும் விலைகளைச் சார்ந்திருப்பதில்லை.[2][3]2009இல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது சமர்பிக்கப்பட்ட சுரேஷ் டெண்டுல்கர் குழு அறிக்கையின்படி நகர்ப்புறத்தில் நாளொன்றுக்கு ரூ.33.33க்கு அதிக மாகவும், கிராமப்புறத்தில் நாளொன்றுக்கு ரூ.27.20க்கு அதிகமாகவும் செலவு செய்பவர்கள் அனைவரும் வறுமைக்கோட்டைத் தாண்டி சென்றுவிட்டதாக நிர்ணயிக்கப்பட்டது. இதன் பின்னர் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. 2014இல் அறிக்கை தந்த அக் குழுவின் அறிக்கையில் கிராமப்புறத்தில் நாளொன்றுக்கு 32ரூபாயும், நகர்ப்புறத்தில் 47ரூபாயும் செலவிட்டால் அவர்களை வறுமைக்கோட்டு பட்டியலிலிருந்து நீக்கிவிடலாம் என்று கூறியுள்ளது.[4]

ஒன்பதாம் ஐந்தாண்டுத் திட்டம்

ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் (1997–2002), ஊரகப்பகுதிகளில் குடும்ப வருமானம் ஆண்டுக்கு Rs. 20,000க்கும் குறைவாகவும் இரண்டு எக்டேரை விடக் குறைவான நிலமுள்ளவர்களும் தொலைக்காட்சிப் பெட்டி அல்லது குளிர்சாதனப் பெட்டி இலாதவர்களும் வறுமைக்கோட்டிற்கு கீழானவர்களாக கருதப்பட்டனர். இந்த அளவீட்டின்படி ஒன்பதாம் திட்டக்காலத்தில் ஊரக பிபிஎல் குடும்பங்கள் 650,000 ஆக இருந்தது. இதே கட்டளைவிதிகளின்படி 2002இல் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் இத்தகைய குடும்பங்கள் 387,000 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை செப்டம்பர் 2006 வரை செயற்பாட்டில் இருந்தது.[2]

பத்தாம் ஐந்தாண்டுத் திட்டம் (2002–2007)

பத்தாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் (2002–2007) ஊரகப் பகுதிகளில், 13 கூறளவுகளில், ஒவ்வொன்றுக்கும் 0-4 மதிப்பெண் கொடுக்கப்பட்டு பிபிஎல் வரையறுக்கப்பட்டது. நில உரிமை, வீட்டு வகை, துணிமணிகள், உணவுப் பாதுகாப்பு, தூய்மை, நுகர்வுப் பொருட்கள், எழுத்தறிவு நிலை, வேலையாட்கள், வாழ்வாதார முறை, மக்கள்நிலை, கடன்நிலை, இடப்பெயர்வுக் காரணங்கள் ஆகியன போன்ற கூறுகளில் வறுமைத்தனம் அளக்கப்பட்டது.

எளிய கணக்கெடுப்பின் மூலம் திட்டக்குழு ஊரக பிபிஎல் குடும்பங்களின் எண்ணிக்கையை உயர்ந்த பட்சமாக 326,000 என நிர்ணயித்தது. இதன்படி 52 மதிப்பெண்களில் 15 மதிப்பெண் பெற்றவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழானவர்களாக வகைப்படுத்தப்பட்டனர். 2002இல் மேற்கொள்ளபட்ட கணக்கெடுப்பிற்குப் பிறகு உச்ச நீதிமன்றத் தடையால் கணக்கெடுப்பு எதுவும் நடக்கவில்லை. 2006ஆம் ஆண்டில் பெப்ரவரியில் இந்தத் தடை விலக்கப்பட்ட பிறகு கணக்கெடுப்பு நடத்தப்பட்டு செப்டம்பர் 2006இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.இதன் அடிப்படையிலேயே இந்திய அரசு திட்டங்களின் மானியங்கள் பகிரப்பட்டன. மாநில அளவிலான திட்டங்களுக்கு மாநில அரசுகள் இந்த கட்டளை விதிகளையோ கணக்கெடுப்பு மதிப்புகளையோ ஏற்றுக்கொள்ளவோ தனியாக வேறு மதிப்புக்களை பின்பற்றவோ அனுமதிக்கப்பட்டன.[2]

பத்தாம் திட்ட பணிக்காலத்தில் நகரப்பகுதிகளில் ஏழு கூறுகளைக் கொண்டு வறுமைக்கு கீழானவர்கள் மதிப்பிடப்பட்டனர்: கூரை, தளம், நீர், தூய்மை, கல்வி நிலை, வேலை வகை, வீட்டில் சிறுவர்களின் நிலை. இதன்படி 2004இல் 125,000 நகர குடும்பங்கள் வறுமைக்கு கீழானவர்களாக கண்டறியப்பட்டனர். இதுவே பின்னர் செயற்படுத்தப்பட்டது.[2]

மேற்சான்றுகள்

  1. "BPL's dividing line". Down to the earth: Science and entertainment online. cse webnet (2011-04). பார்த்த நாள் 2011-04-21.
  2. "Sub" (PDF). பார்த்த நாள் 2012-10-08.
  3. http://priasoft1.tn.nic.in/rdwebsite/Central_Schemes/linkfiles/go_rd_150_06_pg251.pdf
  4. "அடுத்த மோசடி". தீக்கதிர் தமிழ் நாளிதழ்: pp. 4. 8 சூலை 2014. http://epaper.theekkathir.org/news.aspx?NewsID=69882. பார்த்த நாள்: 12 சூலை 2014.

கூடுதல் தகவல்களுக்கு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.