வட்டெழுத்து

வட்டெழுத்து என்பது கி.பி மூன்றாம் நூற்றாண்டிலிருத்து கி.பி பத்தாம் நூற்றாண்டு வரை தமிழை எழுத பயன்படுத்தப்பட்டு வந்த ஓர் எழுத்து முறையாகும். வட்டெழுத்தை மலையாள மொழியினை எழுதவும் பயன்படுத்தினர். [1]தற்கால தமிழ் எழுத்துக்கள் தமிழி எழுத்திலிருந்து தோன்றியவையே. வட்டெழுத்தை வட்டம் என குறிப்பிட்டுள்ளனர்.

இராசராச சோழன் காலத்துக் கல்வெட்டு
வட்டெழுத்து
வகை அபுகிடா
மொழிகள் தமிழ், மணிப்பிரவாளம்
காலக்கட்டம் கி.பி 3 ஆம் நூற்றாண்டு முதல் 18ஆம் நூற்றாண்டு வரை
மூல முறைகள் பிராமி
  தமிழ் பிராமி
   வட்டெழுத்து
தோற்றுவித்த முறைகள் தமிழ் எழுத்துமுறை
நெருக்கமான முறைகள் கிரந்தம்

வட்டெழுத்து தோற்றம்

வட்டெழுத்துக்கள் பிராமி எழுத்து முறையில் இருந்து தோன்றியதாக கருதப்படுகிறது. பிராமி எழுத்துக்களை ஓலைச்சுவடிகளில் எழுதுவதற்கிணங்க அதை மாற்றியதால் வட்டெழுத்து தோன்றியது எனப் பொதுவாக கருதப்படுகின்றது.[2] பிராமி எழுத்துக்கள் கோடுகளாக இருப்பதால்(கோடுகளை ஓலைச்சுவடியில் எழுதினால் அவை கிழிந்து விடும்) ஓலைச்சுவடியில் எழுதும் பொருட்டு அவற்றை வட்ட வடிவில் மாற்றி எழுதப்பட்டதால் வட்டெழுத்து உருவானதாகக் கருதலாம்.

ஆனால் சிலர் வட்டெழுத்தே தமிழரின் பழங்கால எழுத்து முறையென்றும் அதிலிருந்தே தமிழ் பிராமி எழுத்துக்கள் தோன்றியன என்றும் வாதிடுகின்றனர்.[3] மு.வரதராசனார் தன்னுடைய தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலில் வெட்டெழுத்தே தமிழரின் பழங்கால எழுத்துமுறை என்றும் வட பிராமி தென் பிராமியாக திரிபுற்றது வட்டெழுத்தை ஒட்டி வளர்ந்த வளர்ச்சியே காரணம் என்றும் கூறியுள்ளார். ஆனால் இந்த வாதம் பலரால் ஒப்புகொள்ளப்படவில்லை.

கி.பி 8ஆம் நூற்றாண்டுகளில் வட்டெழுத்து கிரந்த எழுத்துக்களுடன் மணிப்பிரவாளத்தை எழுத பயன்படுத்தப்பட்டது.

கி.பி 11ஆம் நூற்றாண்டுகளில் வட்டெழுத்து தமிழ் நாட்டில் வழக்கொழிந்து, தற்கால தமிழ் எழுத்துக்களை ஒத்த எழுத்து முறை பயன்படுத்தப்பட துவங்கப்பட்டது.[4] ஆனால் கேரளத்தில் 15ஆம் நூற்றாண்டுவரை வட்டெழுத்து மலையாளத்தை எழுத பயன்படுத்தப்பட்டது.

குயிலெழுத்து

சங்ககாலக் குயிலெழுத்து நடுகல்லில் செய்தி எழுதப் பயன்படுத்தப்பட்டது. வழிப்போக்கர்கள் இதனைப் படிக்காமல் செல்வார்களாம்.[5] கல்லில் குயின்று எழுதப்பட்ட எழுத்தைக் குயிலெழுத்து என்றனர். மூங்கிலைக் குயின்று குழல் செய்யும் கலைஞரைக் குயிலுவ மாக்கள் [6] என்றது இங்குக் கருதத் தக்கது.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. வட்டெழுத்து - தமிழ் இணையக் கல்விக் கழகம்
  2. http://blog.360.yahoo.com/blog-IHs9FFYzeqhS6IL.5yu4wTp7Ww--?cq=1&p=16
  3. http://www.tamilcanadian.com/page.php?cat=175&id=875
  4. http://www.1911encyclopedia.org/Tamils
  5. நடுகல்
    பெயர் பயம் படரத் தோன்று குயிலெழுத்து
    இயைபுடன் நோக்கல் செல்லாது அசைவுடன்
    ஆறு செல் வம்பலர் விட்டனர் கழியும் (அகநானூறு 297)
  6. சிலப்பதிகாரம் 3-130
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.