லிங்கி
லிங்கி, மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் இருக்கும் ஒரு சிறு நகரம். மலேசிய வரலாற்றில் புகழ் பெற்ற இடங்கில் இதுவும் ஒன்று. இந்த நகரின் வரலாற்று முக்கியத்துவம், அண்மைய காலங்களில் மறைந்து போய் வருகிறது. இந்த நகரின் அருகாமையில் லிங்கி ஆறு செல்கிறது. இந்த நகரம் மிகவும் அமைதியான நகரம் ஆகும்.
இந்த ஆற்றின் வழியாகத்தான் பிரித்தானியர்கள் மலாயாவில் காலடி எடுத்து வைத்தனர். மலாக்கா சுல்தானகம் உருவாகிய காலத்தில், லிங்கி கிராமம் மிகவும் புகழ் பெற்று விளங்கியது.
மலாக்காவை 1400களில் உருவாக்கிய பரமேஸ்வரா, சில ஆண்டுகள் இங்கே தங்கி உள்ளார். சுமத்திராவின் மினாங்கபாவ் மக்களுடன் பழகி இருக்கிறார். முன்பு காலத்தில் லிங்கி ஒரு வர்த்தக மையமாகவும் விளங்கி உள்ளது. 1840ஆம் ஆண்டுகளில் ஈயம் கண்டுபிடிக்கப்பட்டதும், நெகிரி செம்பிலான் மாநிலத்திற்கு, இந்த நகரம் வர்த்தகப் போக்குவரத்துகளின் ஓர் இடைத் தரகராகவும் விளங்கியது.
லிங்கி நகரின் ஆற்றில் நிறைய முதலைகள் உள்ளன. மலேசியாவில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு இங்குதான முதலைகள் அதிகமாகக் காணப்படுகின்றன.