யாழ்ப்பாண வைபவ கௌமுதி (நூல்)

யாழ்ப்பாண வைபவ கௌமுதி ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை அவர்களினால் எழுதி 1918இல் வெளியிடப்பட்ட வரலாற்று நூலாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களின் முன்னோர் பற்றியும் யாழ்ப்பாணச் சாதிகளின் பின்னணி பற்றியும் தெளிவு படுத்தும் செறிவு மிக்க நூலாகும். யாழ்ப்பாணப் பகுதியிலுள்ள ஊர்களின் பெயர்க் காரணங்களை வேலுப்பிள்ளை விளக்கும் பாங்கு, அவரின் ஆழ்ந்த அறிவு நுட்பத்தை எடுத்தியம்புகிறது.

யாழ்ப்பாண வைபவ கௌமுதி
நூல் பெயர்:யாழ்ப்பாண வைபவ கௌமுதி
ஆசிரியர்(கள்):கல்லடி வேலுப்பிள்ளை
வகை:வரலாறு
துறை:யாழ்ப்பாண வரலாறு
காலம்:யாழ்ப்பாண இராச்சியக்காலம், போர்த்துக்கேயர் காலம், ஒல்லாந்தர் காலம்
இடம்:யாழ்ப்பாணம்
மொழி:தமிழ்
பக்கங்கள்:476 (எ.ஏ.சே. பதிப்பு)
பதிப்பகர்:ஏஷியன் எஜுகேஷனல் சேர்விசஸ் (இரண்டாம் பதிப்பு)
பதிப்பு:1918, 2002
முதற் பதிப்பின் உட்பக்கம்

அந்தக் கால கட்டத்தில், யாழ்ப்பாணத்துச் சட்ட நிபுணர்களுள் பெரும் புகழ் பெற்றிருந்த சட்ட மேதை ஐசக் தம்பையா, இந்நூலைப் பிரசுரித்து வெளிவரப் பேருதவி புரிந்திருக்கிறார். எனவே ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை, அப் பெருநூலை மிகுந்த நன்றிப் பெருக்குடன் ஐசக் தம்பையாவிற்கு அர்ப்பணம் செய்துள்ளார்.

மறுபதிப்பு

யாழ்ப்பாண வைபவ கௌமுதி நூல் மறுபதிப்பாக தில்லியில் அமைந்துள்ள ஏஷியன் எஜுகேஷனல் சேர்விசஸ் (Asian Educational Services), நிறுவனத்தினரால் 2002 இல் வெளியிடப்பட்டது.

உள்ளடக்கம்

இந்நூல், புராதன காலம், ஆரியச் சக்கரவர்த்திகள் காலம், பறங்கியர் காலம், ஒல்லாந்தர் காலம், இலங்கையில் ஆங்கிலேயர் என்னும் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் வடமாகாணத்துள்ள சில இடப்பெயர்களின் வரலாறு என்னும் தலைப்பில் 136 பக்கங்களைக் கொண்ட ஒரு பகுதி சேர்க்கப்பட்டுள்ளது.

ஒல்லாந்தர், ஆங்கிலேயர் காலப் பிரிவுகளுக்குள் அக்காலத்தில் யாழ்ப்பாணச் சமூகத்தில் புகழ் பெற்றவர்களாகவும், ஆதிக்கம் கொண்டவர்களாகவும் இருந்த பலர் குறித்த தகவல்கள் உள்ளன. நூலின் பெரும்பகுதி இந்த நோக்கத்துக்காக ஒதுக்கப்பட்டிருப்பதையும் காண முடிகிறது. இந்நூலில் சேர்த்திருக்கவேண்டிய பலரது குறிப்புக்கள் தகவல்கள் கிடைப்பதற்குக் காலதாமதமானதால் சேர்க்கமுடியாமல் போனதாகவும், இங்கு சேக்கப் பட்டிருப்பவர்களினதும் முழுமையான லகவல்கள் இடவசதி இல்லாமை காரணமாகச் சேர்க்க முடியாமற் போனதாகவும் தனது முகவுரையில் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.[1] இந்த நூல் ஆங்கிலேயர் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலத்தில் எழுதப்பட்டதனால் நூலாசிரியர் பிரித்தானியர் ஆட்சியை மிகவும் புகழ்ந்து எழுதியுள்ளதுடன் "இந்த நாட்டை அரசாளும் பிரித்தானிய இராச்சியமும் நீடூழி வாழும்" என வாழ்த்தியுள்ளார்.[2]

இடப்பெயர் வரலாறு

யாழ்ப்பாணத்து வரலாறு கூறவென எழுந்த நூல்களுள் அப்பகுதியின் இடப்பெயர் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்த முன்னோடி நூல்களுள் இந்நூல் குறிப்பிடத்தக்கது. இவ்விடயத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்து ஆராய்ந்துள்ள நூலாசிரியர், முதற் பகுதியை,

  1. திராவிடதேயத்துப் பழம்பெயர் பெற்றிருக்குந் தானங்கள்
  2. சாவகப் பெயர் பூண்ட தானங்கள்
  3. உலாந்தேச நாமமுடைய தானங்கள்

என மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளார். ஏனைய இரண்டு பகுதிகளையும் முறையே சிங்களப் பெயருள்ள தானங்கள், புதுப்பெயர் பெற்ற தானங்கள் என்பவற்றை ஆராய ஒதுக்கியுள்ளார். யாழ்ப்பாணப் பகுதியில் பெரும்பாலான இடங்கள் சிங்களப் பெயர் மூலங்களைக் கொண்டவை எனக் கருதும் இந்நூலாசிரியர், இடப்பெயர் ஆய்வுக்கு ஒதுக்கப்பட்ட 136 பக்கங்களுள் 107 பக்கங்களைச் "சிங்களப் பெயருள்ள தானங்கள்" பற்றி விளக்குவதற்கு ஒதுக்கியுள்ளார்.[3]

குறிப்புகள்

  1. வேலுப்பிள்ளை, க., யாழ்ப்பாண வைபவ கௌமுதி, 2002. பக். ii
  2. வேலுப்பிள்ளை, க., யாழ்ப்பாண வைபவ கௌமுதி, 2002. பக். 330
  3. ஏஷியன் எஜுகேஷனல் சேர்விசஸ் 2002 வெளியிட்ட பதிப்பின்படி.

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.