யாழ்ப்பாண இராச்சியம் (சிற்றம்பலம்)

யாழ்ப்பாண இராச்சியம் என்னும் நூல் பேராசிரியர் சி. க. சிற்றம்பலத்தைப் பதிப்பாசிரியராகக் கொண்டு வெளியான ஒரு தொகுப்பு நூல். 1992 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்ட இந்த நூல் யாழ்ப்பாண இராச்சியத்தின் பல்வேறு அம்சங்கள் தொடர்பான பல்வேறு கட்டுரைகளை உள்ளடக்கியது. தத்தமது துறைகளில் வல்லுனர்களான யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்து ஆய்வாளர்கள் பலர் இந்நூலிலுள்ள கட்டுரைகளை எழுதியுள்ளனர்.

யாழ்ப்பாண இராச்சியம்
நூல் பெயர்:யாழ்ப்பாண இராச்சியம்
ஆசிரியர்(கள்):சி. க. சிற்றம்பலம் (பதிப்பாசிரியர்)
வகை:வரலாறு
துறை:யாழ்ப்பாண வரலாறு
காலம்:யாழ்ப்பாண இராச்சியக்காலம்
இடம்:யாழ்ப்பாணம்
மொழி:தமிழ்
பக்கங்கள்:391 (2006 பதிப்பு)
பதிப்பகர்:யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
பதிப்பு:1992, 2006

நோக்கம்

தேசிய இனங்களின் தனித்தன்மையை வெளிக்காட்டுவதிலும் தேசிய இனப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுவதிலும் வரலாறு முக்கியப் பங்கை வகிக்கிறது. இதனால், இலங்கைத் தமிழர்கள் தமது அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு அவர்களுடைய வரலாறு தொடர்பான உண்மைகள் வெளிக்கொணரப்படுவது அவசியமானது. தனித் தேசிய இனம், தாயகம், தன்னாட்சி உரிமை போன்ற கோட்பாடுகளின் அடிப்படையிலான இலங்கைத் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை அடைவதில் அவர்களுடைய வரலாறு முக்கிய பங்கு வகிக்கக்கூடியது. இந்தக் காலத்தின் தேவையை உணர்ந்தே இந்த நூல் வெளியிடப்பட்டது என்பதை இந்நூலுக்கான வெளியீட்டுரையில் இருந்து அறிந்துகொள்ள முடிகிறது.[1]

உள்ளடக்கம்

இந்த நூலில் யாழ்ப்பாண இராச்சியத்தைப் பல்வேறு கோணங்களில் இருந்து ஆராயும் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக யாழ்ப்பாண வரலாற்றை ஆராய்வதற்கான மூலங்கள், அரசர்கள் காலம், என்பவற்றோடு யாழ்ப்பாண இராச்சியத்தின் அரசியல், சமூக, பண்பாட்டு அம்சங்களை ஆய்வு செய்கின்ற கட்டுரைகள் இந்நூலில் காணப்படுகின்றன. கட்டுரைத் தலைப்புக்களும், கட்டுரையாசிரியர்களின் பெயர்களும் பின்வருமாறு:[2]

  1. வரலாற்று அறிமுகம் - கலாநிதி சி. க. சிற்றம்பலம்
  2. வரலாற்று மூலங்கள் - பேரா. வி. சிவசாமி
  3. யாழ்ப்பாண மன்னர்களும் போர்த்துக்கேயரும் - திருமதி சோ. கிருஷ்ணகுமார்
  4. தொல்லியல் கருவூலங்கள் - ப. புஷ்பரத்தினம்
  5. ஆட்சிமுறை - பேரா. சி. பத்மநாதன்
  6. சமூகம் - கலாநிதி. சி. க. சிற்றம்பலம்
  7. சமயம் - கலாநிதி. சி. க. சிற்றம்பலம்
  8. பண்பாடு - பேரா. வி. சிவசாமி
  9. சிற்பம் - செ. கிருஷ்ணராசா
  10. நாணயம் - பேரா. சி. பத்மநாதன்

குறிப்புகள்

  1. சிற்றம்பலம், சி. க., யாழ்ப்பாண இராச்சியம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1992. பக். xiv, xv.
  2. சிற்றம்பலம், சி. க., யாழ்ப்பாண இராச்சியம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1992. பக். vi.

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.