தன்னாட்சி உரிமை

தன்னாட்சி உரிமை அல்லது சுயநிர்ணயம் (Self-determination) எனப்படுவது சுயமாக, சுதந்திரமாக ஒரு மக்கள் குழு தமது அரசியல் ஏற்பாட்டை தீர்மானிக்கும் உரிமையைக் குறிக்கின்றது. தன்னாட்சி உரிமை என்ற சொற் தொடருக்கு பதிலாக சுயநிர்ணய உரிமை என்ற சொற் தொடரும் பயன்பாட்டில் உண்டு.

வெளி வற்புறுத்தல்கள் இன்றி ஒருவர் தனது செயல்பாடுகளைத் தானே தெரிவு செய்துகொள்வதற்கு, சிறப்பாக, ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்கள் தமது சொந்த அரசியல் நிலையை முடிவு செய்து கொள்வதற்கு அல்லது தமது தற்போதைய நாட்டில் இருந்து விடுதலை அடைவதற்கு, அவர்களுக்கு உள்ள சுதந்திரமே தன்னாட்சி உரிமை என்பதன் வரைவிலக்கணம் ஆகும்.[1] எனினும் இது ஒரு சிக்கலான கருத்துரு ஆகும். தன்னாட்சி உரிமை கோரக்கூடியவர்களைத் தீர்மானிப்பதில் முரண்பாடான வரைவிலக்கணங்களும், சட்ட விதிகளும் காணப்படுகின்றன.

ஐக்கிய நாடுகள் அவைப் பட்டயம்

ஐக்கிய நாடுகள் அவை தன்னாட்சி உரிமை பற்றி பின்வருமாறு உறுதி செய்கிறது.

  • அத்தியாயம் 1, உறுப்புரை 1, பகுதி 2 இன்படி ஐக்கிய நாடுகள் பட்டயத்தின் நோக்கம்: மக்களின் சம உரிமை கொள்கை மற்றும் தன்னாட்சி உரிமைகளுக்கு மதிப்புக் கொடுத்தலின் அடிப்படையில் தேசங்களுக்கு இடையிலான நட்புறவுகளை மேம்படுத்துவதுடன், உலக அமைதியை வலுப்படுத்துவதற்காக வேறு உகந்த நடவடிக்கைகளை எடுத்தலும் ஆகும்.”[2]
  • அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான ஒப்பந்தம் (ICCPR)[3], பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகளுக்கான அனைத்துலக ஒப்பந்தம் (ICESCR).[4] ஆகிய இரண்டு ஆவணங்களும் உறுப்புரை 1 இல் பின்வருமாறு கூறுகின்றன: எல்லா மக்களுக்கும் தன்னாட்சி உரிமை உண்டு. இந்த உரிமையைப் பயன்படுத்தி, அவர்கள், சுதந்திரமாகத் தமது அரசியல் நிலையை முடிவு செய்து, தமது பொருளாதார, சமூக, பண்பாட்டு வளர்ச்சிகளைத் தேடிக்கொள்வர்.
  • ஐக்கிய நாடுகளின் அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம்[5] உறுப்புரை 15 இல் பின்வருமாறு கூறுகிறது: (1) ஒரு தேசிய இனத்தினராக இருக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. (2) எவரினதும் தேசிய இனத்துவம் மனப்போக்கான வகையில் இழப்பிக்கப்படுதலோ அவரது தேசிய இனத்துவத்தை மாற்றுவதற்கான உரிமை மறுக்கப்படுதலோ ஆகாது.

குறிப்புகள்

  1. மெரியம்-வெப்ஸ்டர் இணைய அகராதி; வேர்ட்நெட்.பிரின்ஸ்டன் வரைவிலக்கணம்; ஆன்ஸ்வர்ஸ்.கொம் வரைவிலக்கணம்.
  2. ஐக்கிய நாடுகள் பிரகடனம் (ஆங்கில மொழியில்)
  3. அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான ஒப்பந்த உரை (ஆங்கில மொழியில்)
  4. பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகளுக்கான அனைத்துலக ஒப்பந்த உரை (ஆங்கில மொழியில்)
  5. மனித உரிமைகள் பற்றிய உலகப் பிரகடனம் (தமிழில்)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.