மெக்சுவல் மலை

மெக்ஸ்வல் மலை (மலாய் மொழி: Bukit Larut; ஆங்கிலம்: Maxwell Hill) என்பது மலேசியாவில் ஒரு மலை வாழிடமாகும். பேராக், தைப்பிங், தித்திவாங்சா மலைத் தொடரில் இந்த மலை வாழிடம் அமைந்து உள்ளது. மலேசியாவில் தோற்றுவிக்கப்பட்ட மலை வாழிடங்களில், மிகப் பழமையானவற்றில் இதுவும் ஒன்று.[1][2]

மெக்ஸ்வல் மலை
Bukit Larut
Maxwell Hill
மெக்ஸ்வல் மலையின் உயரம் 1036 மீட்டர்
நாடு மலேசியா
மாநிலம் பேராக்
மாவட்டம்தைப்பிங்
உருவாக்கம்1884
ஏற்றம்
மலை உயரம்
1,250
நேர வலயம்மநே (ஒசநே+8)
  கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)
அஞ்சல் குறியீடு34020
தொலைபேசி குறியீடு05

இப்போது இந்த மலை புக்கிட் லாருட் என்று அழைக்கப் பட்டாலும், மெக்ஸ்வல் மலை என்றே பரவலாக அழைக்கப் படுகிறது.[3]. 1884-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இந்த மலை வாழிடம், 1036 மீட்டர் உயரத்தில் இருக்கிறது.[4] மலேசியாவிலேயே அதிக மழை பெய்யும் தைப்பிங் நகருக்கு அருகில் அமைந்து இருப்பதால், மெக்ஸ்வல் மலை எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்கும்.

வரலாறு

பிரித்தானியர்களின் காலத்தில் கட்டப்பட்ட வளமனை.

மெக்ஸ்வல் மலையின் பெயர், 1979-ஆம் ஆண்டு புக்கிட் லாருட் என்று பெயர் மாற்றம் கண்டது. இது தைப்பிங் நகரில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது. 1884 ஆம் ஆண்டு வில்லியம் ஜார்ஜ் மெக்ஸ்வல்[5] என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. அவரின் நினைவாக அந்த இடத்திற்கும் அவருடைய பெயர் வைக்கப்பட்டது. இவர் அப்போது பேராக் மாநிலத்தின் துணைப் பிரித்தானிய நிர்வாக அதிகாரியாக இருந்தார்.

மலேசியாவில் உள்ள மற்ற மலை வாழிடங்களான கெந்திங் மலை, கேமரன் மலை, போல மெக்ஸ்வல் மலை வளர்ச்சி அடையவில்லை என்றாலும், பிரித்தானியர்களின் காலனித்துவச் சூழலை இன்றளவும் தக்க வைத்து வருகிறது. அங்குள்ள வளமனைகள் (பங்களாக்கள்), பிரித்தானியக் காலனித்துவச் சுற்றுச் சூழலை நினைவுபடுத்தி வருகின்றன.

உச்சிக்குச் செல்ல சிறப்பு மலையுந்துகள்

மெக்ஸ்வல் மலையின் அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்குச் செல்ல, அரசாங்கம் அனுமதி வழங்கி உள்ள சிறப்பு மலையுந்துகளை மட்டுமே பயன்படுத்த முடியும். உரிமம் இல்லாத தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. அதற்கு முன்னர் 1948-ஆம் ஆண்டு வரை மலை உச்சிக்குச் செல்ல குதிரைகள் பயன்படுத்தப்பட்டன.

மெக்ஸ்வல் மலையின் உக்குச் செல்லும் பாதையில், 72 ஊசிமுனை வளைவுகள் உள்ளன. சிறப்பு மலையுந்துகளைத் தவிர, மலையுச்சிக்கு பொதுமக்கள் நடந்தும் செல்லலாம். நடந்து சென்றால், 3 - 5 மணி நேரம் பிடிக்கும். மலையுந்துகளில் சென்றால் 30 நிமிடங்கள் பிடிக்கும். இயற்கை அழகை ரசிப்பவர்களுக்கும், பறவை விரும்பிகளுக்கும் இந்த மலை வாழிடம், ஒரு வரப்பிரசாதமாக அமைகின்றது.[6]

காலனித்துவச் சூழல்

மலேசியாவில் உள்ள மற்ற மலை வாழிடங்களைப் போல இல்லாமல், பல ஆண்டுகளுக்கு முன்னால் மெக்ஸ்வல் மலை எப்படி இருந்ததோ அப்படியேதான் இன்னமும் இருக்கிறது.[7] குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்குப் பெரிதாக வளர்ச்சி அடையவில்லை. இருப்பினும், நூறாண்டுகளுக்கு முன், பிரித்தானியர்களின் காலத்தில் இருந்த காலனித்துவச் சூழல் இன்றளவும் அப்படியே நிலவி வருகிறது. அனைத்துலகத் தரத்திலான தங்கும் விடுதிகள் கட்டப்படவில்லை.[8]

அங்குள்ள வளமனைகள், மாளிகைகள் பிரித்தானியர்களின் காலத்திய சுற்றுச் சூழலை நினைவுபடுத்தும் வகையில் அமைகின்றன. மலர்கள், பறவைகள், மரம் செடிகள் போன்றவை அழகிய இயற்கை ரம்மியத்தைத் இன்னமும் தக்க வைக்கின்றன.[7]

மெக்ஸ்வல் மலைப் பகுதிகளில் நிறைய காட்டுப் பாதைகள் உள்ளன. அவற்றுள் பச்சை மலைப் பாதை என்பது மிகவும் புகழ்பெற்ற மலைப் பாதையாகும். அந்தப் பாதை 1449 மீட்டர் உயரத்தில் இருக்கும் குனோங் ஈஜாவ் மலையின் உச்சிக்குச் செல்கிறது. போகும் வழியில் அரிய வகையான ஆர்கிட் மலர்கள், பெரணிகள், தாவரவகைகள், விலங்கினங்களைக் காண முடியும்.[7]

பத்து பெரிங்கின் ஓய்வகம் - அகல் காட்சி

பத்து பெரிங்கின் ஓய்வகம் - அகல் காட்சி

மெக்ஸ்வல் மலை மகாமாரியம்மன் ஆலயம்

மெக்ஸ்வல் மலையின் உச்சியில் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் எனும் பெயரில் ஓர் இந்து ஆலயம் உள்ளது. 125 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்த ஆலயம், 1890-ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டது. தென் இந்தியாவில் இருந்து இங்கு வந்த ராம பிள்ளை; கோச்சடை பிள்ளை எனும் சகோதரர்களால் கட்டப்பட்டது.[9][10]

பிரித்தானியர்களின் காலனித்துவ ஆட்சியின் போது, மெக்ஸ்வல் மலையில் வேலை செய்த தொழிலாளர்களில் 90 விழுக்காட்டினர் தென் இந்தியாவில் இருந்து வந்தவர்களாகும். 1900களில் 120 இந்தியக் குடும்பங்கள் அங்கே இருந்துள்ளன. பிரித்தானியர்கள் அவர்களுக்கு குடியிருப்பு இல்லங்களை வழங்கி இருக்கிறார்கள்.[9]

குழந்தைகளுக்கு மழலையர் பள்ளி

அவர்கள் அங்கு தங்கி இருந்த காலத்தில், தேயிலை, காய்கறிகள், மலர்ச் செடிகள் பயிரிடுவது; மாடுகளை வளர்ப்பது போன்ற வேலைகளைச் செய்துள்ளனர். கட்டுமானத் தொழில்களிலும் ஈடுபட்டு உள்ளனர். தவிர, பிரித்தானியர்களின் ஓய்வில்லங்களில் பாதுகாவலர்களாகவும், பொதுப் பராமரிப்பு தொழிலாளர்களாகவும் பணிபுரிந்துள்ளனர்.[9]

மெக்ஸ்வல் மலையில் அதிகமான இந்துக்கள் இருந்ததால், அவர்களுக்கு இந்து சமயம் சார்ந்த ஓர் ஆலயம் தேவைப்பட்டு உள்ளது. அதற்கு, பிரித்தானியர்களும் ஓர் ஆலயத்தைக் கட்டிக் கொள்ள ஒரு துண்டு நிலத்தை வழங்கி இருக்கின்றனர். முதலில் சிறிய ஆலயம் கட்டப்பட்டு இருக்கிறது.[11] பின்னர், பிரித்தானியர்களின் ஆதரவினால் ஒரு பெரிய ஆலயம் தோற்றுவிக்கப்பட்டது. ஆலயத்திற்கு அருகிலேயே அவர்களின் குழந்தைகளுக்கு மழலையர் பள்ளியையும், பிரித்தானியர்கள் கட்டிக் கொடுத்து இருக்கின்றனர்.[9]

இப்போது அந்தக் கோயில் இரண்டு ஏக்கர் நிலத்தில் இன்னும் இருக்கிறது. 1997 ஏப்ரல் 25-இல், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது.[9]

தட்பவெப்ப நிலை

மெக்ஸ்வல் மலையின் தட்பவெப்ப நிலை 15°C இருந்து 25°C வரை நீடிக்கிறது. இரவு நேரங்களில் 10°C வரை குரைந்து வருவதும் உண்டு. மலேசியாவிலேயே அதிகமாக மழை பெய்யும் இடங்களில் மெக்ஸ்வல் மலையும் ஓரிடமாகும். வருடம் முழுமையும் ஏறக்குறைய 4,000 mm (160 in) மழை பெய்கிறது.

2008 - 2013 ஆண்டுகளின் மழைப்பொழிவு

தட்பவெப்ப நிலைத் தகவல், 2013 ஆண்டுக்கான சராசரி மழைப்பொழிவு
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பொழிவு mm (inches) 235
(9.25)
270
(10.63)
134
(5.28)
369
(14.53)
568
(22.36)
236
(9.29)
124
(4.88)
459
(18.07)
374
(14.72)
518
(20.39)
179
(7.05)
150
(5.91)
3,616
(142.36)
மழைப்பொழிவுmm (inches) 232.7
(9.161)
184.2
(7.252)
363.5
(14.311)
349
(13.74)
432.5
(17.028)
297.7
(11.72)
299
(11.77)
438.8
(17.276)
385.5
(15.177)
398.6
(15.693)
495.8
(19.52)
299.2
(11.78)
4,176.5
(164.429)
ஆதாரம்: Department Of Irrigation & Drainage Malaysia

படத்தொகுப்பு

மேற்கோள்கள்

வெளித் தொடர்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.