முல்லைக்கலி

சங்க இலக்கியம் கலித்தொகையில் ஒரு பகுதியாக விளங்கும் முல்லைக்கலி முல்லைத்திணைப் பற்றிய கலிப்பாக்களால் ஆன நூல். இதில் 17 பாடல்கள் உள்ளன. கலித்தொகை நூலில் இவை 101 முதல் 117 வரிசை-எணகளில் இடம் பெற்றுள்ளன.

வாய்பாட்டுப்பாடல் ஒன்று இதனை இயற்றியவர் சோழன் நல்லுருத்திரன் என்று குறிப்பிடுகிறது. இந்த வாய்பாட்டுப் பாடல்களைத் தொகுத்துப் பதிப்பித்த சு. வையாபுரிப்பிள்ளை சோழன் நல்லுருத்திரன் வேறு புலவர் எனவும், முல்லைக்கலிப் பாடல்களைப் பாடிய நல்லுருத்திரனார் வேறு புலவர் எனவும் காட்டிப் பதிப்பித்துள்ளார். [1]

17 பாடலகளில் முதல் 7 பாடல்கள் ஏறு தழுவல் பற்றிய செய்திகளைக் கூறுகின்றன. பிற 10-ல் ஒருதலைக் காமமாகிய கைக்கிளை, பொருந்தாக் காமமாகிய பெருந்திணை பற்றிய உறவுப்பாடல்கள் வருகின்றன.

இடம் சுட்டியது

  • தலைவி கன்றுடன் பாட்டங்கால் என்னும் மேய்சல் நிலத்துக்குச் சென்றாள். தலைவன் கன்றின் கயிற்றைப் பிடித்துக்கொண்டான். இவன் விடு என்றாள். அவன் யார் வந்தாலும் விடமாட்டேன் என்றான். இன்று விடு. நாளை பால் கொண்டுசெல்லும்போது வா என்றாள் அவள். [2]
  • காஞ்சி மரத்தடியில் நின்று குழல் ஊது, வருகிறேன் என்று தலைவி குறியிடம் சொல்கிறாள். [3]

ஒப்புதல்

  • பெற்றோர் ஒப்புதல் - தலைவன் தந்த முல்லைப் பூவைக் கூந்தலுக்குள் வைத்துத் தலைவி மூடிக்கொண்டாள். தாயரிடம் சென்றபோது அது விழுந்துவிட்டது. தாய் பார்த்துவிட்டாள். ஒன்றும் சொல்லவிலை. என்றாலும் தலைவிக்கு அச்சம். தோழியிடம் சொல்லிக் கலங்கினாள். திருமணம் நிகழும் எனத் தோழி தேற்றினாள். [4]
  • தலைவி ஒப்புதல் - பூக்காரி உறவு - வழியில் சென்றவளை அவன் மறித்தான். கையில் என்ன என்றான். புலைத்தி பின்னிய கூடை என்றாள். உள்ளே என்ன என்றான். முல்லைப் பூ என்றாள். இருட்டிவிட்டது, இங்கே இரு என்றான். அவளும் இருந்தாள். கலந்தனர். [5]

பெருந்திணை நிகழ்வு

  • அவளது உறவினர் கேட்டுக்கொண்டிருக்கும்போது உரையாடல் நிகழ்கிறது [6]
  • அழகியை மாங்காய் தின்ன வைக்காமல் போகமாட்டேன் என்கிறான் அவன் [7]

கைக்கிளை நிகழ்வு

  • முல்லை பூத்திருந்த பாட்டங்காலில் விளையாடிக்கொண்டிருந்தவர்களிடம் உரையாடி ஏமாந்து திரும்பிய காதல் [8]
  • எருது, பசு, கன்று அடைந்திருக்கும் கொட்டகையில் உரையாடல் நிகழ்கிறது. [9]
  • காதலன் வேறு, கணவன் வேறா? இருமணம் கூடுதல் இல்-இயல்பு அன்று [10]

ஏறு தழுவல் பற்றிய உவமைகள்

  • பாஞ்சாலியின் கூந்தலைப் பற்றிய துச்சாதனனின் நெஞ்சைப் பிளந்து சுழற்றி எறிந்த வீமன் போல், காளை பொதுவனைக் பொதுவன் = இடையன் கொம்பால் குத்திச் சுழற்றியது. [11]
  • எருமைத்தலை கொண்ட சூரனைக் கொன்று கூளிப்பேய்களுக்கு உணவூட்டிய அந்திப் பசுங்கண்-கடவுள் போல், காரிக்காளை பொதுவனைக் கொன்றது. [12]
  • தந்தையைக் கொன்றவனைப் போல வெள்ளைக்காளை பொதுவனைக் கொன்றது. [13]
  • பட்டம் விடும்போது நூல் சுற்றுவது போல் ஒருகாளை பொதுவன் குடலைத் தன் கொம்பில் சுற்றியது. [14]
  • உழலை-மரம் போலக் கொம்பால் சுழற்றியது. [15]

ஆயர் மகளிர் பண்பு

  • விடையை அடக்கிப் பிடித்தால் வளர்த்தவளின் தோளைப் பெறலாம். [16]
  • கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆயமகள் [17]

சொல்லாட்சிகள்

  • கோளாளன் [18], கேளாளன் [19], தாளாண்மை [20], வேளாண்மை [21] [22], [23]
  • காளையின் நிறப்பெயர்கள் – காரி, வெள்ளை, சே என்னும் செவலை, [24]
  • கோட்டினத்து ஆயர், கோவினத்து ஆயர், புல்லினத்து ஆயர் [25] நல்லினத்து ஆயர் [26]

வரலாறு

மாடு மேய்க்கும் 'நல்லினத்து ஆயர்' பாண்டியர் குடியோடு உடன் பிறந்த குடியினர். பாண்டியரைக் குறிப்பிடும்போது, பாண்டிய நாட்டின் ஒரு பகுதி கடற்கோளுக்கு இரையானதாகவும், அதனை ஈடுகட்டிக்கொள்ள பாண்டியன் சேரனையும், சோழனையும் வென்று நாட்டை விரிவுபடுத்திக் கொண்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. இச்செய்தியைச் சொல்லும் பகுதி பாண்டிய நாட்டின் ஒருபகுதி கடலால் கொள்ளப்பட்ட வரலாற்றுச் செய்தியை வெளிப்படுத்துகிறது. [27]

அடிக்குறிப்பு

  1. சு. வையாபுரிப்பிள்ளை, சங்க இலக்கியம் பாட்டும் தொகையும் பாரிநிலையம் வெளியீடு, 1967.
  2. கலித்தொகை 116
  3. கலித்தொகை 108
  4. காணாமை உண்ட கடுங்கள்ளை மெய்கூர நாணாது சென்று நடுங்க உரைத்தாங்கு களவு வெளிப்பட்டது. (கலித்தொகை 115)
  5. கலித்தொகை 117
  6. கலித்தொகை 112
    அவள் - தடுத்து நிறுத்தும் நீ யார்
    அவன் - கரும்பெழுதிய தோளினர் பேசினால் விட்டுவிடாதே என்று என்னைச் சேரந்தவர்கள் கூறி வைத்துள்ளனர்
    அவள் - பெண்ணின் நல்லாரின் அழகைப் புகழ நல்லவழி(?) சொல்லியிருக்கிறார்கள். மேயாத கன்றை மேய்க்கக் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள்
    அவன் - அறிவேன். என்றேனும் இதழைச் சுவைப்பேன்
    இப்படி அவன் சொன்னது உண்மையாகிவிடுமோ என்று தலைவி தோழியைக் கேட்கிளாள்.
  7. மாங்காய் நறுங்காடி கூட்டுவேம் (கலித்தொகை 109)
  8. கலித்தொகை 111
    அவன் - மணல்வீடு கட்டித் தரட்டுமா
    அவள் - வேண்டாம் கிடைத்த வீட்டில் இருந்துவிடுவாய்
    அவன் - தலையில் பூ பின்னி விடட்டுமா என்றான்.
    அவள் - அடுத்தவர் தந்த பூ அல்லவா அது
    அவன் - தோளில் எழுதட்டுமா
    அவள் – ஆசை! ஆசை! விடு
    அவன் அல்லாந்தான் ஏமாந்தவன் போலச் சென்றுவிட்டான். நிகழ்ந்ததைத் தாயர்க்குச் சொல்லிவிடு என்று தலைவி தோழியிடம் சொல்லி, தனக்கு அவன் மேல் உள்ள காதலை வெளிப்படுத்துகிறாள்.
  9. கலித்தொகை 113
    அவன் – உன் கண் பட்ட காதலுக்கு வழி சொல்லிவிட்டுச் செல்
    அவள் - நீ யார்
    அவன் - பகைவர்க்கு அஞ்சா புல்லினத்தாயன் ஆட்டிடையன்
    அவள் - எம்மவர் குடப்பால் கறக்கும் நல்லினத்தாயர் மாடு மேய்க்கும் இடையர் எதம் துன்பம் வரும். வழி விடு
    அவன் – நீ என்னிடம் பேசுகிறாய். விடமாட்டேன்
    அவள் – வாய்ப்பேச்சு காதல் ஆகுமா
    அவன் – தெளிந்தேன்
    அவன் அங்கேயே நின்றுகொண்டிருந்தான். அவள் சென்றுவிட்டாள்
  10. அன்று மணல்-மேட்டில் சிற்றில் விளையாடியபோது தழுவியவன் ஒருவன் இருக்கும்போது இன்று வீட்டுக்கு வெள்ளையடித்து பூப்பந்தல் போட்டு வேறொருவனோடு திருமணம் என்றால் ஏற்றுக்கொள்ள முடியுமா (கலித்தொகை 114)
  11. கலித்தொகை 101
  12. கலித்தொகை 101, 103
  13. கலித்தொகை 101
  14. கலித்தொகை 103
  15. கலித்தொகை 106
  16. கலித்தொகை 101
  17. கலித்தொகை 103
  18. (கோள் > கொள், ஏறுகோள்,) ஏறு தழுவுபவன்
  19. (கேள் < கேளிர்) உறவாக்கிக்கொள்ளத் தக்கவன், கணவனாக்கிக் கொள்ளத் தக்கவன்
  20. முயற்சி
  21. உதவி
  22. தாளாற்றித் தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தல் பொருட்டு (திருக்குறள்)
  23. கலித்தொகை 101
  24. கலித்தொகை 103,
  25. கலித்தொகை 103
  26. கலித்தொகை 104
  27. மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின்,
    மெலிவு இன்றி, மேல் சென்று, மேவார் நாடு இடம்பட,
    புலியொடு வில் நீக்கி, புகழ் பொறித்த கிளர் கெண்டை,
    வலியினான் வணக்கிய, வாடாச் சீர்த் தென்னவன்
    தொல் இசை நட்ட குடியொடு தோன்றிய
    நல் இனத்து ஆயர், (கலித்தொகை 104)

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.