நல்லுருத்திரனார்

நல்லுருத்திரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். கலித்தொகையில் முல்லைத்திணைப் பாடல்களாக அமைந்துள்ள 17 பாடல்களைப் பாடியவர். புறநானூற்றுப் பாடலைப் [1] பாடிய சோழன் நல்லுருத்திரன் அரசனாக விளங்கிய புலவன்.[2] சோழன் நல்லுருத்திரன் காலத்தால் முந்தியவன். புலவர் நல்லுருத்திரன் சுமார் 150 ஆண்டுகளேனும் காலத்தால் பிந்தியவர்.

முல்லைக்கலி பாடல்கள் சொல்லும் செய்தி

நல்லுருத்திரனார் பாடிய இந்த 17 பாடல்களை முல்லைக்கலி எனக் கூறுவது வழக்கம். பொதுவன் முல்லைநிலத்துக் கட்டிளங்காளை. இவன் காரிகையார் வளர்த்த காளைகளை அடக்கிக் காளையை வளர்த்த கன்னியை மணக்கும் செய்தி முதல் 6 பாடல்களில் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஏறு தழுவல் என்று பெயர். அடுத்த 7 பாடல்கள் [3] பெற்றோர் மணம் முடித்து வைத்தல், காஞ்சி மரத்தடியில் குரவையாடும்போது குழல் ஊது, வருகிறேன் என்று தலைவி சொல்லுதல் முதலான செய்திகளைக் குறிப்பிடுகின்றன. ஆயர் மகள் மறுமணம் செய்துகொள்ள மாட்டாளாம்.[4]

முல்லைக்கலி யாப்பமைதி

முல்லைக்கலியின் முதல் பாடலிலேயே யாப்பு வகையில் குறள் வெண்பா,[5] சிந்தியல் வெண்பா,[6] நாலடி வெண்பா [7] பஃறொடை வெண்பா[8] ஆகியவை கையாளப்பட்டுள்ளன.

சொல்லாட்சி முதலானவை

  • இந்த நூலில் அன்னை, அத்தன் என்னும் சொற்களால் தாய்தந்தையர் குறிப்பிடப்பட்டுள்ளனர் [9]
  • பெற்றோர் செய்துவைக்கும் திருமணத்துக்குப் பெயர் வதுவை [9]
  • எருமைத் தலைமேல் ஆடுபவன் கதை[10] *தந்தையைக் கொன்ற சண்டேசுரன் கதை [11] முதலான புராணச் செய்திகள் இவரது பாடல்களில் வருகின்றன.

இவை இந்தப் புலவரைச் சோழன் நல்லூருத்திரனிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன.

எனினும் வாய்பாட்டுப் பாடல் ஒன்று இப் புலவரைச் சோழன் நல்லுருத்திரன் என்னும் அரசனே எனக் குறிப்பிடுகிறது.

பெருங்கடுங்கோன் பாலை, கபிலன் குறிஞ்சி
மருதனிள நாகன் மருதம் - அருஞ்சோழன்
நல்லுருத்திரன் முல்லை, நல்லந்துவன் நெய்தல்
கல்வி வலார் கண்ட கலி

சு. வையாபுரிப்பிள்ளை புலவர் அகர வரிசையில் பாடல்களைத் தொகுத்த சங்க இலக்கியம் பாட்டும் தொகையும் என்னும் நூலில் சோழன் நல்லுருத்திரன் என்னும் அரச புலவனை வேறு புலவராகக் காட்டியுள்ளார் [12]

அடிக்குறிப்பு

  1. புறநானூறு 190
  2. சங்க இலக்கியம் பாட்டும் தொகையும் நூலைத் தொகுத்துப் பகுப்பாய்வு செய்துள்ள வையாபுரிப்பிள்ளை கலித்தொகைப் பாடல்களைப் பாடிய நல்லுருத்திரன் வேறு, புறநாற்றுப் பாடலைப் பாடிய சோழன் நல்லுருத்திரன் வேறு எனக் கண்டுள்ளார்.
  3. கலித்தொகை 7-13
  4. ஆயர் மகளிர்க்கு இருமணம் கூடுதல் இல் இயல்பு அன்றே (கலித்தொகை 114)
  5. அணி மாலைக் கேள்வற் தரூஉமார், ஆயர்
    மணி மாலை ஊதும் குழல்
  6. கடாஅக் களிற்றினும் கண்ணஞ்சா ஏற்றை
    விடாஅது நீ கொள்குவை, ஆயின்; படாஅகை
    ஈன்றன, ஆய மகள் தோள்
  7. பகலிடக் கண்ணியன், பைதற் குழலன்,
    சுவல்மிசைக் கோல் அசைத்த கையன், அயலது;
    கொல் ஏறு சாட இருந்தார்க்கு, எம் பல் இருங்
    கூந்தல் அணை கொடுப்பேம், யாம்
  8. செவி மறை நேர் மின்னும் நுண் பொறி வெள்ளைக்
    கதன் அஞ்சான், பாய்ந்த பொதுவனைச் சாடி,
    நுதி நுனைக் கோட்டால் குலைப்பதன் தோற்றம் காண்
    ஆர் இருள் என்னான் அருங் கங்குல் வந்து, தன்
    தாளின் கடந்து அட்டு, தந்தையைக் கொன்றானைத்
    தோளின் திருகுவான் போன்ம்

  9. கலித்தொகை 115
  10. சுடர் விரிந்தன்ன சுரி நெற்றிக் காரி
    விடரி அம் கண்ணிப் பொதுவனைச் சாடி,
    குடர் சொரியக் குத்தி, குலைப்பதன் தோற்றம் காண்
    படர் அணி அந்தி, பசுங் கட் கடவுள்
    இடரிய ஏற்று எருமை நெஞ்சு இடந்து இட்டு,
    குடர் கூளிக்கு ஆர்த்துவான் போன்ம்

  11. பாடல் பஃறொடை வெண்பாவின் காட்டாகத் தரப்பட்டுள்ளது.
  12. சங்க இலக்கியம் பாட்டும் தொகையும், பாரி நிலைய வெளியீடு, 1967
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.