முத்தி

முத்தி என்பது வீடுபேறு. சிப்பிக்குள் விழுந்த நீர் இறுகி முத்தாவது போல உடலுக்குள் விழுந்த உயிர் முத்தாகி ஒளிர்வது முத்தி. சமய நூல்கள் இதனை இறைவனடி சேர்தல் எனக் குறிப்பிடுகின்றன.

முத்தி பெற வழிகள்

நான்கு வழிகளில் முத்தி பெறலாம் எனச் சைவநெறி குறிப்பிடுகிறது. [1] வழிகளை 'மார்க்கம்' என்பர். இந்த 4 வழிகளுக்கு வடசொற்களால் பெயர்கள் இடப்பட்டுள்ளன. அவை சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன. தமிழில் இவற்றை ஒழுக்கம், செயல், தவம், மெய்யுணர்தல் எனலாம்.

சரியை

சரியை என்பது பிறரிடம் நடந்துகொள்ளும் நடத்தை முறைமை. அன்பு, அடக்கம், ஒழுக்கம், பொறை, அழுக்காறாமை, வெஃகாமை போன்ற இல்லற நடத்தைகளும், அவாவின்மை போன்ற துறவற நடத்தைகளும் திருக்குறள் காட்டும் ஒருக்க நெறிகள். இந்த நற்பண்புகளைக் கடைப்பிடித்து முத்தி பெறுவது சரியை காட்டும் வழி.

சிவதருமோத்தரம், சைவசமயநெறி, வாயுசங்கிரதை, மச்சபுராணம், பிரமோத்தர காண்டம், உபதேச காண்டம் முதலான நூல்கள் சரியை வழியைக் கூறுவன.

கிரியை

கிரியை என்பது செயல். விருந்தோம்பல், இனியவை கூறல், புறங்கூறாமை, பயனில சொல்லாமை, தீவினை அச்சம், பிறனில் விழையாமை முதலான நற்செயல்களால் முத்தி அடைவது கிரியை கூறும் வழி.

தத்துவப் பிரகாசம் கிரியை வழியைக் கூறும் நூல்.

யோகம்

யோகம் என்பது தவம். திருமூலர் இதனை அட்டாங்க யோகம் என்று கூறி விளக்குகிறார். [2] இதனைக் கடைப்பிடித்து முத்தி பெறுவது இன்னொரு வழி.

ஞானம்

ஞானம் என்பது மெய்யுணர்தல். இது உள்ளுணர்வு. இறைவன் தனக்குள்ளே, இறைவனுக்குள்ளே யான்; இறைவன் வெளியே, வெளிக்குள்ளே யான் என்றல்லாம் உணர்ந்துகொண்டு செயலாற்றி வாழ்வதால் முத்தி பெறலாம் என்பது ஞானம் உணர்த்தும் வழி.

சிவநெறிப் பிரகாசம், தத்துவ ரத்னாகரம் போன்ற நூல்கள் ஞானவழி பற்றிக் கூறுகின்றன.

முத்திக் கோட்பாடு

முத்தி என்பது பேரின்பம். இதனை ஆனந்தம் என்பர். இதுபற்றி இரு கோட்பாடுகள் உண்டு. [3]

  • ஆன்மானந்த வாதம் - ஆன்மா இயல்பாகவே ஆனந்தத்தில் திளைக்கும். உடலோடு கட்டுண்டு கிடக்கும்போது மலப்பாசத்தால் துன்புறும். பாசத்தை விலக்கி ஆன்மாவுக்கு ஆனந்தம் தரவேண்டும். - மறைஞான சம்பந்தர் கோட்பாடு. [4] [5] [6]
  • ஆன்ம வாதம் - ஆன்மா முயற்சியால்தான் பேரின்பப் பேற்றை அடையமுடியும் என்பது மற்றொரு கோட்பாடு. இந்தக் கோட்பாட்டை விளக்குவது குருஞான சம்பந்தர் செய்த முத்திநிலை என்னும் நூல். [7] [8]

அத்வைத வேதாந்த நோக்கில் முக்தி

ஒரு சீவாத்மா பிறப்பு-இறப்பு எனும் மீளாத சுழற்சியிலிருந்து நிலையாக விடுதலை பெற்று, பிரம்மத்தில் ஐக்கியமாவதே முக்தி எனப்படும். சீவ முக்தி, விதேக முக்தி மற்றும் கிரம முக்தி என மூன்று படிகளில் ஒரு மனிதன் முக்தியை அடையலாம்.

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005, பக்கம் 167
  2. திருமந்திரம், மூன்றாம் தந்திரம்
  3. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், 2005, பக்கம் 181
  4. சதானந்தம்
  5. அகம் பிரமம்
  6. அத்துவைதம்
  7. ச்சசிதானந்தம்
  8. துவைதம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.