பிரமோத்தர காண்டம்

பிரமோத்தர காண்டம் என்னும் நூல் பாண்டியர் பாடிய நூல்களில் ஒன்று. 16 ஆம் நூற்றாண்டு அரசன் வரதுங்கராம பாண்டியனால் பாடப்பட்டது. சிவ புண்ணியக் கதைகளைக் கூறும் நூல் இது. [1] [2] [3]

வடமொழியிலுள்ள கந்தபுராணத்தில் மூன்றாம் பிரிவு பிரமாண்ட புராணம். இந்த மூன்றாம் பிரிவின் மூன்றாவது பகுதியே பிரமோத்தர காண்டம். தமிழ்நூல் பிரமோத்தர காண்டம் வடமொழி நூலாகிய பிரமோத்தர காண்டம் என்னும் நூலின் மொழிபெயர்ப்பு. நூலாசிரியர் இதனை மதுரைத் தமிழ்ச்சங்கத்தில், அறுகால்பீடத்தில் அரங்கேற்றினார். [4] இந்நூலில் 22 அத்தியாயங்கள் உள்ளன.

நயக்குறிப்புகள்

இந்த நூல் ஒரு காப்பியம் போல் அமைந்துள்ளது. கதைகளில் வரும் குறிப்புகள் மிகவும் நயமாக உள்ளன.

  • கடலில் மிதக்கும் அப்பர் பாற்கடலில் பள்ளி கொள்ளும் நாரணன் போலக் காணப்பட்டார்.
  • குரு நிம்பை ஈசான முனிவரைச் சிவபெருமானோடு ஒப்பிட்டுப் பாடியுள்ளார்.
  • விநாயகர் இராவணனைத் தன்முன் குட்டிக்கொள்ளுமாறு கூறினார். அதுமுதல் பிள்ளையார் முன் குட்டிக்கொள்ளும் வழக்கம் வந்தது.

சில கதைகள்

  • மனைவி சொன்ன நன்மொழியைக் கேட்ட அரசன் ஒருவன் அவளையே தன் குருவாக எண்ணி அருள் வழங்குமாறு வேண்டுகிறான். அவள் முறை அன்று என்று சொல்லி வேறு ஒருவரிடம் அனுப்பிவைக்கிறாள்
  • வழிபாடு செய்யச் சாம்பல் [5] கிடைக்காதபோது ஒருவன் தன் மனைவியையே சுட்டுப் பூசிக்கொண்டு வழிபாடு செய்கிறான்.

பாடல் பாங்கு [6]

குருவைப் போற்றும் பாடல்

தேசான சிவஞானச் செஞ்சுடராம், மும்மலனை
மாசான இருள் அகற்றி மன் உயிரைப் புரந்து அளித்துத்
தூசான உரி அசைத்தோன் தொல் சமயம் நிறுத்தும் நிம்பை
ஈசான மாமுனிவன் இணை அடியை இறைஞ்சுவாம்.

சிவகதி

நித்தியமாம் ஆனந்த உருவம் ஆகி, நிறைவுபடும் பொருளாகி, கறை படாது
சத்தியமாய் அனைத்து உயிர்க்கும் உள்ளீடு ஆகி, சங்கற்ப விகற்பங்கட்கு அயலது ஆகி
வைத்த சிவ தத்துவத்தின் இயல்பு தன்னை வரு குருவரன் அருளின் இனிது உணர்ந்து வாழும்
அத் தகையர் பிறப்பு ஆழி இடைநின்று ஏறி அழியாத சிவ கதியில் அடைவர் அன்றே.

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 1, பதிப்பு 2005

அடிக்குறிப்பு

  1. நூல் மூலமும் காஞ்சிபுரம் சபாபதி முதலியார் செய்த உரையும், முதல் பதிப்பு, 1878
  2. இது சந்திரசேகரர் உரை என்னும் பிழையான குறிப்புடன் 1897-ல் மீண்டும் வெளிவந்துள்ளது.
  3. பிரமோத்தர காண்ட வசனம் என்னும் குறிப்புடன் வ.த. சுப்பிரமணிய பிள்ளை இரண்டாம் பதிப்பாக இதனை வெளியிட்டுள்ளார் 1928
  4. இந்நூலின் பாயிரப்பாடல் இதனைக் குறிப்பிடுகிறது.
  5. திருநீறு
  6. பொருள்நோக்குச் சொற்பிரிப்பு
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.