முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் பிற்காலப் பாண்டிய மன்னர்களுள் ஒருவன். பாண்டிய மன்னர்கள் வரிசையில் அறிவற்றாலும் வீரமும் கொண்ட சிறந்த மன்னனாக விளங்கினான். இவனது ஆட்சிக்காலம் 1216 முதல் 1239 வரை ஆகும்.
சோழப்பேரரசின் வீழ்ச்சி[1]
மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சிக் காலத்திலேயே கலகங்களை ஆரம்பித்தாலும், குலோத்துங்கனின் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாமல் சிற்றரசனாகவே இருந்து வந்தான். ஆனால் குலோத்துங்கனின் மறைவுக்கு பின்பு ஆட்சிக்கு வந்த மூன்றாம் இராசராசன், ஆட்சி புரியும் ஆற்றல் இல்லாமால் இருப்பதை அறிந்த சுந்தர பாண்டியன் சோழனை எதிர்த்து போர்க்களம் புகுந்து வென்று முடி கொண்ட சோழபுரத்து ஆயிரங்கால் மண்டபத்தில் வீராபிடேகம் செய்துகொண்டு சிதம்பரத்தைத் தரிசித்தான். தஞ்சை, தில்லை வரைப் படை எடுத்து வந்து சோழனைப் பழையாறைக்கே செல்ல வைத்தான். சுந்தர பாண்டியனிற்கு ஈடு கொடுக்க முடியாமல் சோழர்களின் பழையாறை நகருக்கே ராச ராச சோழன் தோற்றுத் திரும்பி வந்தான். பின்னர் பாண்டியனிடம் சமாதானம் கோரி பாண்டியனுக்கு அடங்கிய சிற்றரசனாக இருக்க ஒப்புக் கொண்டு தஞ்சை வரை ஆட்சி புரிந்தான் ராச ராச சோழன். சில காலத்தின் பின்னர் சோழர் கப்பஞ்செலுத்த மறுக்க மீண்டும் சோழ நாட்டைக் கைப்பற்றினான். சுந்தரபாண்டியன் காலத்தில் இருந்து சோழப் பேரரசு சோழநாட்டையும் இழந்து மீட்கும் நிலைக்கு சில முறை தள்ளப்பட்டது. இந்த பாண்டியனின் ஆட்சிக்காலம் சோழப் பேரரசின் வீழ்ச்சிக்கு ஆரம்பம் எனலாம்.
பாண்டியப் பேரரசின் தொடக்கம்[1]
இரண்டாம் பாண்டியப் பேரரசை தொடக்கி வைத்த பாண்டியர்களுள் இவனும் ஒருவனாக காட்டப்படுகிறான். இவனது வெற்றியைப் போற்றும் கல்வெட்டுப் பாடல் ஒன்று உள்ளது.
ஊடகங்களில்
புதினமாக
- முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் மதுரையை மீட்டதை கயல்விழி என்னும் புதினமாக அகிலன் எழுதினார். இதில் சுந்தரபாண்டியன் மதுரையை சோழரிடம் இருந்து மீட்டதையும் சோழநாட்டை கவர்ந்து சோழனை சிறைப்படுத்தி மீண்டும் அவனிடமே சோழநாட்டின் ஆட்சியைக் கொடுத்து திறை செலுத்த வைத்ததையும் போசள இளவரசியை பாண்டீயன் மணந்த வரலாறு வரை இப்புதினம் காட்டுகிறது.
- முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ நாட்டில் படையெடுத்த போது அங்கே இருந்த கரிகாலன் உருத்திரங்கண்ணனாருக்குக் கொடுத்த ஆயிரங்கால் மண்டபத்தை மட்டும் தமிழ் பெருமைக் காக்கக்கருதி இடிக்காமல் விட்டதை கூறும் புதினம் பூவண்ணன் எழுதிய வளவன் பரிசு ஆகும்.
திரைப்படங்களாக
- முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் மதுரையை மீட்டதை கயல்விழி என்னும் புதினமாக அகிலன் எழுதினார். அந்த புதினத்தை ஒட்டி எடுக்கப்பட்ட திரைப்படம் தான் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் திரைப்படமாகும். இதில் எம். ஜி. ஆர் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனாகவும் நம்பியார் மூன்றாம் இராஜராஜ சோழனாகவும் நடித்திருந்தனர்.[2]
- மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக புரட்சித் தலைவன் என்ற ஒரு இயங்குபடம் தயாரிக்கப்படுகிறது. இதில் எம். ஜி. ஆர் உருவத்தை பாண்டியனாக உருவகப்படுத்தி இயங்குபடம் தயாரிக்கப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
- "பிற்காலப் பாண்டிய மன்னர்கள்". tamilvu.org. tamilvu.org. பார்த்த நாள் 4 சூன் 2014.
- "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் எம்.ஜி.ஆர். நடித்த கடைசிப்படம்: கதை-அகிலன், டைரக்ஷன்-எம்.ஜி.ஆர்.". மாலைமலர். பார்த்த நாள் 4 சூன் 2014.
- http://www.rediff.com/movies/2008/dec/01mgr-in-an-animation-film.htm
உசாத்துணைகள்
- S. Krishnaswami Aiyangar (1921), South India and her Muhammadan Invaders, Chennai: Oxford University Press, http://www.archive.org/details/southindiahermuh00krisuoft
- K.A. Nilakanta Sastri (1955), A history of South India: from prehistoric times to the fall of Vijayanagar (Hardback ), Chennai: Oxford University Press, ISBN 0-19-560686-8, http://books.google.com/books?id=1p6AOwAACAAJ
- Narasayya (2009) (in Tamil), Aalavaai: Madurai Maanagarathin Kadhai (Hardback ), Chennai: Palaniappa Brothers, ISBN 978-81-8379-517-3
- Sethuraman, N (1978), The imperial Pandyas: mathematics reconstructs the chronology, http://books.google.com/books?id=Du8CAAAAMAAJ
முன்னர் முதலாம் சடையவர்மன் குலசேகரன் |
பாண்டியர் 1216 –1238 |
பின்னர் இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் |