முதலாம் பாஸ்கரர்

பாஸ்கரா (Bhāskara, 600 – 680) கிபி ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்திய வானியலாளர் ஆவார். (12ம் நூற்றாண்டில் வாழ்ந்த இரண்டாம் பாஸ்கராவுடன் முரண்படாதிருக்க இவர் முதலாம் பாஸ்கரா என அழைக்கப்படுகிறார்). முதன் முதலில் இடமதிப்பில் எண்களைக் குறிப்பிட்டது பாஸ்கரா ஆவார்.[1] முதன் முதலில் சுழியத்தைக் குறிக்க சிறிய வட்டம் வரைந்து இப்போது நாம் பயன்படுத்தும் இந்திய-அராபிக் எண் முறையை தொடங்கி வைத்தவர். குஜராத் மாநிலத்தில் பிறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

எண் வரலாறு

இந்தியர்கள் கிமு ஐந்தாம் நூற்றாண்டிலேயே தசம முறையை அறிந்திருந்தனர் என்றாலும் எண்களைக் குறிக்க அவர்கள் பிராமி எண் முறையைப் பயன்படுத்தாமல் சமஸ்கிருத வார்த்தைகளையே பயன் படுத்தினர். எடுத்துக்காட்டாக நிலவு என்பது ஒன்றுதான் . எனவே ஒன்று என்பதைக் குறிக்க நிலவு என எழுதினார்கள். இறக்கைகள் இரண்டு இருப்பதனால் இரண்டு என்பதை இறக்கைகள் என எழுதினார்கள் பிராமி எண்முறையை விட கடவுளின் மொழி என்று தங்கள் எண்ணிய சமஸ்கிருததில் எண்களைக் குறிப்பிட்டனர்.

நூல்கள்

பாஸ்கரா எழுதிய 'மஹாபாஸ்கரியா' என்ற நூலில் வானவியல் கணித முறைகள் இடம் பெற்றுள்ளன. இது எட்டு தொகுதிகள் கொண்டது. மேலும் 'லகு பாஸ்கரியா' என்ற நூலையும் எழுதியுள்ளார். இந்திய வானவியல் அறிஞரான ஆரியபட்டாவின் கொள்கைகளை எளிமைப் படுத்தி விளக்கும் உரையாக 'ஆர்யபட்டீய பாஷ்யா'என்ற உரை நூலையும் இவர் தந்துள்ளார்.

பாஸ்கராவின் பணிகள்

எண்முறையில் 10 இனை அடிப்படையாகக் கொண்ட எண்கள், சுழியத்தை பயன்படுத்துதல் ஆகியவை இவர் கணிதத்திற்கு அளித்த கொடை ஆகும். மேலும் கோள்களின் அமைவிடங்கள், அவை உதித்து மறையும் காலங்கள், சூரியகிரகணம் ,சந்திர கிரணங்கள் ஆகியவற்றைக் கணிக்கும் முறையைத் தந்துள்ளார். இவற்றோடு கணிதவியலும் வியக்கும் வகையில் பல்வேறு ஆய்வுகளைச் செய்துள்ளார். இவரைப் பெருமைப் படுத்தும் விதமாக இந்தியா அனுப்பிய இரண்டாவது விண் செயற்கைக்கோளிற்கு பாஸ்கரா என்ற இவரது பெயர் இடப்பட்டது.

ஐன்ஸ்டீனின் பாராட்டு

"நாம் இந்தியர்களுக்கு மிகவும் கடமைப் பட்டுள்ளோம் அவர்கள்தாம் நமக்கு எண்களை எப்படி பயன்படுத்துவது என்பதைக் கற்றுத்தந்துள்ளார்கள். அந்த முறை இல்லாதிருந்தால் அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்திருக்காது." - ஐன்ஸ்டீன்.

உசாத்துணை

  1. Bhaskara I
  • அறிவியல் ஒளி. ஆகஸ்ட் 2007 இதழில் முனைவர், ஐயம்பெருமாள், செயல் இயக்குநர் தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையம் சென்னை. அவர்கள் எழுதிய கட்டுரை.
  • இளையர் அறிவியல் களஞ்சியம். மணவை முஸ்தபா - 1995
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.