மு. திருச்செல்வம்
முருகேசன் திருச்செல்வம் (Murugeysen Tiruchelvam, 19 நவம்பர் 1907 - 23 நவம்பர் 1976) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் மேலவை உறுப்பினரும், அமைச்சரும், பிரபலமான வழக்கறிஞரும் ஆவார்.
செனட்டர் மு. திருச்செல்வம் M. Tiruchelvam | |
---|---|
![]() | |
உள்ளூராட்சி அமைச்சர் | |
பதவியில் 1965–1968 | |
பின்வந்தவர் | ரணசிங்க பிரேமதாசா |
இலங்கை சட்டமா அதிபர் | |
பதவியில் 1957–1960 | |
முன்னவர் | டி. எஸ். சி. பி. ஜான்சி |
பின்வந்தவர் | ஏ. சி. அலெஸ் |
இலங்கை செனட் சபை உறுப்பினர் | |
பதவியில் 1965–1971 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | நவம்பர் 19, 1907 யாழ்ப்பாணம், இலங்கை |
இறப்பு | 23 நவம்பர் 1976 69) | (அகவை
அரசியல் கட்சி | இலங்கைத் தமிழரசுக் கட்சி |
பிற அரசியல் சார்புகள் |
தமிழர் விடுதலைக் கூட்டணி |
வாழ்க்கை துணைவர்(கள்) | புனிதம் |
பிள்ளைகள் | நீலன், இராஜேந்திரா, ஜானகி |
படித்த கல்வி நிறுவனங்கள் | புனித தோமையர் கல்லூரி, கல்கிசை இலங்கை பல்கலைக்கழகக் கல்லூரி |
தொழில் | வழக்கறிஞர் |
ஆரம்ப வாழ்க்கை
திருச்செல்வம் 1907 நவம்பர் 19 இல் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். மூன்று வயதாக இருக்கும் போது தாயாருடன் மலாயா சென்றார். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்ட தந்தை விசுவநாதன் முருகேசு அப்போது கோலாலம்பூர் நகரில் பிரித்தானிய அரசில் தந்தி அலுவலகத் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். மலாயாவில் இவரது குடும்பம் செல்வநாயகம் குடும்பத்துடன் நெருக்கமாக உறவு கொண்டிருந்தது. திருச்செல்வத்திற்கு மூன்று சகோதரர்களும், ஒரு சகோதரியும் இருந்தனர். திருச்செல்வமும் அவரது சகோதரரும் மேல் படிப்பிற்காக இலங்கை திரும்பி கல்கிசை புனித தோமையர் கல்லூரியில் செல்வநாயகத்தின் மேற்பார்வையில் கல்வி கற்றனர். திருச்செல்வம் பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் கல்வி கற்று வரலாற்றில் சிறப்புப் பட்டம் பெற்றார்.
திருச்செல்வம் புனிதவதி (புனிதம்) கனகரத்தினம் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு நீலன் திருச்செல்வம் உட்பட நான்கு பிள்ளைகள் பிறந்தனர். நீலன் 1999 இல் தற்கொலைத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.
சட்டத் துறையில்
பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற திருச்செல்வம் சட்டம் பயின்று 1935 ஆம் ஆண்டில் வழக்கறிஞரானார். நீர்கொழும்பு, பாணந்துறை, காலி ஆகிய இடங்களில் 1945 ஆம் ஆண்டு வரையில் நீதித்துறை நடுவராகப் பணியாற்றினார். பின்னர் இவர் சட்டத்துறைச் செயலர் சேர் அலன் ரோஸ் என்பவருக்கு செயலாளராக அமர்த்தப்பட்டார். சோல்பரி அரசியலமைப்புச் சட்ட வரைவிற்கு சேர் அலனுக்கு உதவியாக திருச்செல்வம் பணியாற்றினார். 1944 ஆம் ஆண்டில் பிரதி சட்டமா அதிபராகப் பணியில் அமர்ந்தார். பின்னர் 1957 முதல் 1960 வரை சட்டமா அதிபராக ஆக்கப்பட்டார்.
திருச்செல்வம் பல அரசியல் முக்கியத்துவம் வாய்த வழக்குகளில் பங்கெடுத்துள்ளார். 1976 ஆம் ஆண்டில் முதலாவது குடியரசு அரசியலமைப்பை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நான்கு தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், கா. பொ. இரத்தினம், மு. சிவசிதம்பரம், க. துரைரத்தினம் ஆகியோருக்கு எதிரான Trial-at-Bar வழக்கில் செல்வநாயகம், ஜி. ஜி. பொன்னம்பலம் ஆகியோருடன் இணைந்து வாதாடினார். இவ்வழக்கில் நால்வரும் விடுதலை ஆனார்கள்.
அரசியலில்
1960களில் திருச்செல்வம் அரசியலில் ஆர்வம் காட்டினார். இலங்கைத் தமிழரசுக் கட்சி நிறுவனர் தந்தை செல்வாவிற்கு அரசியல் ஆலோசகராகப் பணியாற்றினார். 1961 ஆம் ஆண்டில் தனிச் சிங்களச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியமைக்காக திருச்செல்வமும் ஏனைய தமிழரசுக் கட்சியினரும் பனாகொடை சிறையில் ஆறு மாதங்கள வரை அடைக்கப்பட்டனர்.
1965 ஆம் ஆண்டில் டட்லி-செல்வா ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு, தமிழரசுக் கட்சியினர் டட்லி சேனநாயக்கா தலைமையிலான அரசில் இணைந்தனர். ஆனாலும் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்ப்பினர்கள் எவரும் அமைச்சர் பதவிகளைப் பெற முன்வரவில்லை. இதனை அடுத்து திருச்செல்வம் இலங்கை செனட் சபைக்கு நியமிக்கப்பட்டு உள்ளூராட்சி அமைச்சராகப் பொறுப்பேற்றார். இவரது காலத்திலேயே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆரம்பிப்பதற்கான ஆரம்பக் கட்ட ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 1966 ஆம் ஆண்டில் தமிழ் மொழி சிறப்பு ஏற்பாடுகள் சட்டம் கொண்டுவரப்பட்டது.
1968 ஆம் ஆண்டில் திருகோணமலையில் அமைந்துள்ள திருகோணமலை கோட்டைப் பகுதியை புனித இடமாக அறிவிக்க திருச்செல்வம் மேற்கொண்ட நடவடிக்கையை பிரதமர் டட்லி சேனாநாயக்க தடுத்து நிறுத்தியதை அடுத்து, அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். டட்லி-செல்வா உடன்படிக்கையை நிறைவேற்றத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழரசுக் கட்சி அரசில் இருந்து விலகியது. திருச்செல்வம் 1971 இல் செனட் சபை ஒழிக்கப்படும் வரை அதன் உறுப்பினராக இருந்தார்.
மேற்கோள்கள்
- டி. பி. எஸ். ஜெயராஜ் (24 November 2007). "Murugeysen Tiruchelvam: Strategist-Statesman of the Federal Party". Transcurrents.
- Altaf, Saleem (24 December 2006). "A Tribute: Senator Murugeysu Tiruchelvam QC". Sunday Observer, Sri Lanka. http://www.sundayobserver.lk/2006/12/24/fea15.asp.
- Wilson, A. J. (23 April 2006). "Senator Murugeysu Tiruchelvam QC: A tribute to an intellectual, a man of many parts". Sunday Observer, Sri Lanka. http://www.sundayobserver.lk/2006/04/23/fea10.html.
- ரணில் விக்கிரமசிங்க. "Remembering Senator M. Tiruchelvam". mtiruchelvam.com.
- Rajasingham, K. T.. "Chapter 20 - Tamil leadership lacks perspicuity". SRI LANKA: THE UNTOLD STORY. http://www.atimes.com/ind-pak/CL22Df03.html.
- Rajasingham, K. T.. "Chapter 21 - A further lack of perspicuity". SRI LANKA: THE UNTOLD STORY. http://www.atimes.com/ind-pak/DA05Df05.html.
- Rajasingham, K. T.. "Chapter 24: Tamil militancy - a manifestation". SRI LANKA: THE UNTOLD STORY. http://www.atimes.com/ind-pak/DA26Df04.html.