மிகிந்தலை

மிகிந்தலை (Mihintale, சிங்களம்: මිහින්තලය), இலங்கையில் உள்ள எச்சக்குன்றுகளில் ஒன்றாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்து ஏற்படும் இயற்கை அனர்த்தங்களினால் மண் உள்ளீர்க்கப்பட்டு, இத்தகைய எச்சக்குன்றுகள் உருவாகின்றன. மகிந்த தேரரின் வருகைக்குப் பின் இந்த எச்சக்குன்றுகள் புண்ணிய இடமாக மாற்றம் பெற்றன. இதனால், வரலாற்றுச் சிறப்பு மிக்க நினைவுச் சின்னங்கள், புதை பொருட்கள் என்பன இங்கு காணப்படுகின்றன. இவை அனுராதபுரக் காலப்பகுதிக்கு உரியவையாகும். வரலாற்றுச் சிறப்பு மிக்க மிகிந்தலை ஒரு சரணாலயம் ஆகும். இது அநுராதபுரத்திலிருந்து 8 கிலோ மீற்றர் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இதன் அமைவிடம் வடக்கில் 80 பாகை ஆகவும் அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தனிமையான மலைக்குன்றுப் பகுதியாகவும் காணப்படுகின்றது. இதில் மிகிந்தலை மலை, எத்வெகர மலை, ஆனைக்குட்டி மலை மற்றும் ராஜகலலென மலை ஆகிய நான்கு மலைகள் உள்ளடங்கியுள்ளன. ஆயினும், பண்டைய காலத்தில் 'மிஸ்ஸக்க பவ்வ' என்ற பொதுப்பெயரால் இது அழைக்கப்பட்டிருந்தது. இந்த மலை 1,000 அடிகளைவிடக் குறைந்தது. மலையின் அனைத்துப் பகுதிகளிலும் கற்பாறைகள், கற்குன்றுகள் போன்றவை காணப்படுகிண்றன. இந்த மலைத் தொடர்ச்சி வடகிழக்குத் திசையை நோக்கிச் செல்கின்றது.

தூபத்துக்கு அருகில் பாறையில் செதுக்கப்பட்ட படிக்கட்டுக்கள்

வரலாற்றுப் பின்னனி

பொசென் போயா தினத்தன்று அசோகச் சக்கரவர்த்தியின் மகனான மஹிந்த தேரர் இலங்கைக்கு வந்ததாகவும் தேவநம்பிய தீசன் மான் வேட்டைக்குச் சென்றபோது மஹிந்த தேரரை இங்கு வைத்தே சந்தித்ததாகவும் அதன் பின் சிறிது நேரம் நடந்த போதனையின் பின்பிலிருந்து இலங்கையில் பௌத்த மதத்தை தேவநம்பியதீச மன்னனிடம் அறிமுக்கப்படுத்தியதாகவும் மகாவம்சம் கூறுகின்றது.

மலை உச்சியிலிருந்து தோற்றம்

பாறை வகைகள்

அநுராதபுரம் ஒரு சமவெளி நிலப்பகுதியாகும். இவ்வாறான பகுதியில் தனிமையான மலைப்பகுதி உருவாவதற்கு உள்ளீர்க்கப்படும் இயற்கை மாறுபாடுகளே காரணமாகின்றன. இங்கு பலவிதமான பாறை வகைகள் அடங்கியுள்ளன. கருங்கல், படிகக்கல் மற்றும் தீப்பாறை என்பன இந்தப் பாறை வகைகளில் சிலவாகும். மேலும், சந்திரகாந்தம் என்ற பாறை வகை இங்குள்ள பாறை வகைகளில் மிகவும் சிறப்பு மிக்கதாகும். இந்தப் பாறை வகையானது, பெல்ஸ்பார் கனிமத்தால் உருவானதாகும். பொதுவாக கருங்கல்லுடன் கலந்து பெல்ஸ்பார் கனிமம் காணப்படுகிண்றது. அத்துடன் இந்தமலைப்பகுதியில் குகைகள் அதிகமாகவே காணப்படுகின்றன. பாறைகளில் ஏற்படும் இயற்கை மாறுதல்களாலேயே, இவ்வாறான குகைகள் உருவாகின்றன.

தாவரங்கள்

உலர் வலயங்களுக்குரிய தாவர வகைகளையே இங்கு காணக்கூடியதாக உள்ளது. அதற்கமைய, சிறிய இலைகளைக் கொண்ட உயரமற்ற மற்றும் முட்புதர்கள், கள்ளித் தாவரங்கள் இங்கு அதிகம் வளர்கின்றன. அத்துடன், பல்வேறு விதமான மரங்களையும் மிகிந்தலைக் குன்றுப்பகுதியில் அதிகமாகக் காணக்கூடியதாகவுள்ளது. முன்னர் இப்பகுதி அடர்ந்த காட்டுப்பகுதியாகவே இருந்துள்ளது. அக்காலகட்டங்களில் மாமரங்கள் அதிகம் காணப்பட்டதால், இப்பகுதி 'அம்பஸ்தலய' என்று அழைக்கப்பட்டது.

வனவிலங்குகள் உள்ள காடு

உலர் வலயத்திற்கே உரிய விலங்குகள் இங்கு வசிக்கின்றன. மிகிந்தலையை சூழவுள்ள வனாந்தரப்பகுதி மிகிந்தலை சரணாலயப்பகுதிக்குச் சொந்தமானதாகும். யானைகள், மான்கள், மரைகள், காட்டுப்பன்றிகள் எலி இனங்கள், மயில்கள், முயல்கள் மற்றும் சிறுத்தைகள் ஆகிய விலங்கினங்கள் இங்கு அதிகமாக வாழ்கின்றன. தேவநம்பியதீச மன்னன் மான் வேட்டைக்காக இக்காட்டுப் பகுதிக்குச் சென்றதாகவும், அப்போதே மகிந்த தேரரைச் சந்தித்ததாகவும் வரலாறு கூறுகின்றது.

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.