மாமல்லபுரம் புடைப்புச் சிற்பங்கள்

மாமல்லபுரம் வரலாற்றுச் சிறப்புள்ள சிற்பங்களுக்குப் பெயர் பெற்றது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை சிற்பக்கலைகளின் திருப்பு முனையாக அமைந்த பல்லவர் காலச் சிற்பங்களின் கருவூலமாகத் திகழ்வது மாமல்லபுரம் எனலாம். சிற்பம் எனும் போது அதனுள் கட்டிடங்கள், அவற்றின் கூறுகள், அலங்கார வடிவங்கள், உருவச் சிற்பங்கள் போன்ற பலவற்றையும் உள்ளடக்குவது இந்திய மரபில் பொதுவாகக் காணப்படுவது. எனினும் மாமல்லபுரம் புடைப்புச் சிற்பங்கள் என்னும் இக்கட்டுரை புடைப்புச் சிற்ப வகையில் அமைந்த உருவச் சிற்பங்கள் அவற்றை உள்ளடக்கிய நிகழ்வுகள் கதைகள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் சிற்பங்கள் ஆகியவை பற்றியே எடுத்துக்கூறுகின்றது.

மாமல்லபுரம், அருச்சுனன் தவம் என்று அழைக்கப்படும் புடைப்புச் சிற்பத்தின் ஒரு பகுதி

துறைமுக நகரம்

பல்லவர் காலத்திலும் அதற்குப் பின்னரும் புகழ் பெற்ற துறைமுக நகரமாக விளங்கிய மாமல்லபுரத்தில் திராவிடக் கட்டிடக்கலைப் பாணிக்குரிய கட்டிடங்களும் அமைப்புக்களும் பெருமளவில் காணப்படுகின்றன. கல்லிலே கட்டிடங்கள் அமைக்கத் தொடங்கிய காலத்தைச் சேர்ந்த கட்டிட வகைகளான குடைவரைகள், ஒற்றைக்கல் தளிகள் என்பனவும் ஆரம்பகாலத்தைச் சேர்ந்த கட்டுமானக் கோயில்களும் இங்கே உள்ளன.[1] இவை வெறும் கட்டிடங்களாக மட்டுமன்றி ஏராளமான சிற்பங்களையும் தம்மகத்தே கொண்டு விளங்குகின்றன.

கல்லில் செதுக்கப்பட்டவை

மாமல்லபுரத்தில் காணப்படும் சிற்பங்கள் கல்லில் செதுக்கப்பட்டவை. இவை கடவுளரின் உருவங்கள், புராணக் கதை நிகழ்வுகள் என்பவற்றுடன் இயற்கை வனப்புகளையும், அக்காலத்துச் சமூக நிகழ்வுகளையும் கூடப் படம்பிடித்துக் காட்டுகின்றன எனலாம். இங்கே காணப்படும் சிற்பங்கள் பெரும்பாலும் புடைப்புச் சிற்பங்களாகவே காணப்படுகின்றன. புடைப்புச் சிற்பங்கள் நாற்புறத்திலிருந்தும் பார்க்கக்கூடிய முப்பரிமாண அமைப்பிலுள்ள சிற்பங்களாகவன்றி, சுவரோடு ஒட்டியபடி சுவரிலிருந்து வெளித்தள்ளிக் கொண்டிருப்பது போல் அமைந்தனவாகும்.

புகழ் பெற்ற மாமல்லபுரச் சிற்பங்கள்

குறிப்புக்கள்

  1. காசிநாதன், நடன., மாமல்லபுரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2000. பக்.31.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.