மா. க. ஈழவேந்தன்
மாணிக்கவாசகர் கனகசபாபதி ஈழவேந்தன் (M. K. Eelaventhan, பிறப்பு: 14 செப்டம்பர் 1932)[1][2] இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
எம். கே. ஈழவேந்தன் M. K. Eelaventhan நா.உ. | |
---|---|
தேசியப் பட்டியல் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2004–2007 | |
பின்வந்தவர் | ரசீன் முகம்மது இமாம் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | மா. க. கனகேந்திரன் 14 செப்டம்பர் 1932 |
அரசியல் கட்சி | தமிழீழ விடுதலை முன்னணி |
பிற அரசியல் சார்புகள் |
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
படித்த கல்வி நிறுவனங்கள் | பரி. யோவான் கல்லூரி, யாழ்ப்பாணம் உவெசுலி கல்லூரி, கொழும்பு |
சமயம் | இந்து |
இனம் | இலங்கைத் தமிழர் |
வாழ்க்கைச் சுருக்கம்
கனகேந்திரன் என்ற இயற்பெயர் கொண்ட ஈழவேந்தன் நல்லூரைச் சேர்ந்த புகையிரத நிலைய அதிபர் கனகசபாபதிக்குப் பிறந்தவர்.[2] இவர் யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு உவெசுலி கல்லூரியிலும் கல்வி பயின்றார்.[2] தமிழீழக் கொள்கையில் மிகவும் பிடிப்புள்ளவராக இருந்த இவர் தனது பெயரை ஈழவேந்தன் என மாற்றிக் கொண்டார்.[3]
பணி
இலங்கை மத்திய வங்கியில் பணியாற்றிய கனகேந்திரன், பின்னர் பொருளாதார ஆய்வுத் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி 1980 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.[2][4]
அரசியலில்
இலங்கைத் தமிழரசுக் கட்சியில் முக்கிய உறுப்பினராக இருந்த இவர் 1970 ஆம் ஆண்டில் வி. நவரத்தினம் தொடங்கிய தமிழர் சுயாட்சிக் கட்சியில் இணைந்தார்.[2][3] பின்னர் மீண்டும் தமிழரசுக் கட்சியில் சேர்ந்தார். தமிழரசுக் கட்சி அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணியில் ஓர் உறுப்புக் கட்சியாக இருந்தது.[3][4] தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொழும்புக் கிளைக்கு ஈழவேந்தன் தலைவராக இருந்து பணியாற்றினார்.[3] 1977 வன்முறைகளில் இவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்.[3] 1980 ஆம் ஆண்டில் வேறு சிலருடன் இணைந்து தமிழரசுக் கட்சியில் இருந்து விலகி, தமிழீழ விடுதலை முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்தார்.[2] அக்கட்சியின் செயலாளராக ஈழவேந்தன் பணியாற்றினார்.[2]
இலங்கையில் தமிழருக்கு எதிரான வன்முறைகள் கிளம்பிய காலகட்டத்தில் 1981 ஆம் ஆண்டில் இவர் தமிழ்நாட்டுக்கு சென்றார்.[4] விடுதலைப் புலிகளுக்கு மருந்துகள் கொள்வனவு செய்தனர் என்ற குற்றச்சாட்டில் இவரும் வேறும் நால்வரும் 1997 பெப்ரவரியில் சென்னையில் கைது செய்யப்பட்டனர்..[3][4] 1999 ஆம் ஆண்டில் இவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.[4] ஈழவேந்தன் 2000 டிசம்பர் 4 இல் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.[4][5]
2004 நாடாளுமன்றத் தேர்தலில் ஈழவேந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டு நாடாளுமன்றம் சென்றார்.[6][7] மூன்று மாதங்களுக்கு மேலாக நாடாளுமன்றத்துக்குச் செல்லாமல் விட்டதை அடுத்து இவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி 2007 நவம்பரில் பறி போனது.[8][9]
ஈழவேந்தன் இலங்கையில் இருந்து இடம் பெயர்ந்து கனடாவுக்குப் புலம் பெயர்ந்தார். 2010 மே மாதத்தில் நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[10]
மேற்கோள்கள்
- "Directory of Past Members: Manicavasagar Kanagasabapathy Eelaventhan". இலங்கை நாடாளுமன்றம்.
- ச. ஆறுமுகம் (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. பக். 51. http://www.noolaham.org/wiki/index.php?title=Dictionary_of_Biography_of_the_Tamils_of_Ceylon.
- டி. பி. எஸ். ஜெயராஜ் (10 பெப்ரவரி 2008). "Tigers oust King of Eelam". The Nation (Sri Lanka). http://www.nation.lk/2008/02/10/special4.htm.
- Subramanian, T. S. (23 டிசம்பர் 2000). "A swift deportation". Frontline (magazine) 17 (26). http://www.frontline.in/static/html/fl1726/17260490.htm.
- Subramanian, T. S. (7 சனவரி 2001). "A swift deportation". சண்டே டைம்சு. http://www.sundaytimes.lk/010107/specrpt2.html.
- "TNA nominates two national list MPs". தமிழ்நெட். 9 ஏப்ரல் 2004. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=11705.
- டி. பி. எஸ். ஜெயராஜ் (5 சூலை 2014). "BIRTH AND GROWTH OF NEXUS BETWEEN THE TNA AND THE LTTE". டெய்லிமிரர். http://www.dailymirror.lk/49301/birth-and-growth-of-nexus-between-the-tna-and-the-ltte.
- "National List MP lost his seat "by mistake’’". தி ஐலண்டு. 17 பெப்ரவரி 2008. http://www.island.lk/2008/02/17/news4.html.
- "Eelaventhan loses membership in SL parliament". தமிழ்நெட். 15 டிசம்பர் 2007. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24010.
- "31,000 vote in Canadian TGTE elections". தமிழ்நெட். 3 மே 2010. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31671.
வெளி இணைப்புகள்
- "One Hundred Tamils of the 20th Century: M. K. Eelaventhan". Tamil Nation.