நாடு கடந்த தமிழீழ அரசு
நாடு கடந்த தமிழீழ அரசு (Provisional Transitional Government of Tamil Eelam) என்பது அனைத்துலக சட்டமரபு நெறிகளுக்கு அமைவாக தமிழீழத்திலும் வெளிநாடுகளிலும் பரவி வாழும் தமிழீழத்தவர்களின் தற்காலிக அரசமைப்பு ஆகும். இலங்கையின் அரசியலில் தமிழர்கள் பங்கு பெறுவது சாத்தியம் அற்றதாகிவிட்டதால், அந்த தீவிற்கு வெளியிலேயே தமிழர்கள் தமது உரிமைகளை நிலைநாட்டுவதற்கான முன்னெடுப்பு முயற்சிகளைத் தற்போதைக்குத் தொடருவதற்காக இவ்வமைப்பு உருவாக்கப்பட்டது[1].
![]() Area claimed | |
உருவாக்கம் | 17 மே 2010 |
---|---|
நோக்கம் | சுதந்திரத் தமிழீழம் அமைப்பது |
ஆட்சி மொழி | தமிழ் |
பிரதம மந்திரி | விசுவநாதன் உருத்திரகுமார் |
மைய்ய அமைப்பு | நாடுகடந்த தமிழீழ அரசு Transnational Constituent Assembly of Tamil Eelam |
வலைத்தளம் | tgte.org |
பன்னாட்டு அமைப்பாக நிறுவப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசில் ஐக்கிய அமெரிக்கா, கனடா, நோர்வே, ஐக்கிய இராச்சியம் உட்படப் பல நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் உறுப்பினராக உள்ளனர். இதன் தலைவராக விசுவநாதன் உருத்திரகுமாரன் உள்ளார்[2][3] இவ்வமைப்பின் அங்கத்தவர்களைத் தெரிவதற்காக இலங்கை தவிர்த்து வெளிநாடுகளில் வதியும் இலங்கைத் தமிழரிடையே மே 2010 இல் தேர்தல்கள் இடம்பெற்று உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
செயல்திட்டம்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை தற்பொழுதிற்கு உருவாக்குவதற்கான கட்டமைப்புக்களை உருவாக்குவதற்காக வி. உருத்திரகுமாரன் தலைமையில் பின்வரும் விடயங்களைக் கருத்திற் கொண்டு பணியாற்ற செயற்குழு ஒன்று 2009 ஜூன் 16 அமைக்கப்பட்டது[1].
- 1976 இல் வரையறுக்கப்பட்ட வட்டுக்கோட்டைப் பிரகடனத்தினதும், 1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்களால் ஒரு மனதாக வாக்களித்து வரவேற்கப்பட்டதும், பின்பு 1985 இல் திம்புப் பிரகடனத்தில் வெளிப்படுத்தப்பட்டதும், 2003 இல் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரப்பகிர்வின் தளமாக அமைந்ததுமாகிய
- தமிழர் ஓர் தேசிய இனம்
- வடக்கு- கிழக்கு தமிழர் தாயக நிலம்
- ஈழத் தமிழரின் தன்னாட்சி உரிமை
போன்ற அடிப்படைக் கோட்பாடுகளை ஈழத் தமிழரின் அரசியல் அபிலாசைகளின் ஆதார சுருதியாக ஏற்றுக்கொள்ளும் அனைத்துத் தமிழ் மக்களையும் ஓன்றிணைப்பது.
- 2001 ஆம் ஆண்டு, 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களின்போது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் அரசியல் கட்சியாகத் தமிழ் மக்களினால் ஏற்று உறுதி செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் ஈழத் தமிழரின் தன்னாட்சிக் கோட்பாட்டினை ஏந்தி ஆதரிக்கும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுடனும் இணைந்து செயற்படுதல்.
- சிங்களப் தேசத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கான தமிழர் தேசத்தின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தல்.
- உலகு அனைத்தும் பரவி வாழும் ஈழத் தமிழர் மத்தியில் அனைத்துலக மதிப்பினைப் பெற்ற நிறுவனம் ஒன்றினுடன் இணைந்து வாக்காளர் பட்டியல் ஒன்றினைத் தயாரித்தல். இவ்வாறு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் வாக்களிப்பை நடத்தி தமிழ்த் தேசியப் பேரவையினை தெரிவு செய்து இப்பேரவையினூடாக தமிழீழ அரசியல் யாப்பினை வடிவமைத்தலும் தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காணும் நோக்குக்கு வழிகோலும் வகையில் பொது வாக்கெடுப்பினை பன்னாட்டு மேற்பார்வையில் நடத்த வழிசெய்தலும்.
- ஈழத் தமிழர் உலகப்பேரவை ஒன்றினையும், நிறைவேற்று அதிகாரக் குழு ஒன்றினையும் தெரிவு செய்யும் முறைநெறிகளை வரையறை செய்தல்.
- அரசுகளுடனும், பல் அரசுகள் சார்ந்த நிறுவனங்களுடனும் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்துதல்.
- உலகெங்கும் பரவி வாழும் ஈழத் தமிழரின் சமூக, பொருண்மிய, பண்பாட்டு மேம்பாடுகளைத் துரிதப்படுத்தல்.
- தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையிலான வேறுபாடுகளை தமிழர் தன்னாட்சி உரிமைக்கு எதிரான பயத்தை தோற்றுவிக்கும் கருவியாகக் கொள்ளாமல், முஸ்லிம் மக்களுடன் இணைந்து இரு சமூகத்தினரும் ஒருமித்து பங்குபெறும் அரசியல் வழிமுறைகளை இனம் காணுதல்.
- வடக்கு- கிழக்கில் வாழும் ஈழத் தமிழர்களினதும், உலகெங்கும் வாழும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களினதும் நலன்பேணும் வகையிலான செயற்பாடுகளை ஊக்குவித்தல்.
முதலாவது அமர்வு
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அரசவையின் முதலாவது அமர்வு 2010, மே 17-19 ஆம் திகதிகளில் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின், பிலடெல்பியா நகரில் அமைந்துள்ள அமெரிக்காவின் அரசியலமைப்பு எழுதப்பட்ட வரலாற்றுப் புகழ் மிக்க தேசிய அரசியலமைப்பு மையத்தில் கூடியது.
இம் அமர்வில் அவுஸ்திரேலியா, கனடா, டென்மார்க், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்காக தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நேரடியாகக் கலந்து கொண்டனர்[4].
மேற்கோள்கள்
- நாடு கடந்த தமிழீழ அரசு: வரலாற்றுத் தேவை, சட்டப் பின்னணி, வேலைத் திட்டங்கள், ஆலோசனைக் குழு: உருத்திரகுமாரன் விளக்கம், புதினம், 16 ஜூன் 2009
- Haviland, Charles (15 செப்டம்பர் 2009). "Tamil exiles to form 'government'". பிபிசி. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8257144.stm.
- "Tamils proposed Provisional ”Transnational Government of Tamil Eelam (PTGTE)”". UKTamilNews.com. 20 செப்டம்பர் 2009. http://www.uktamilnews.com/?p=5229.
- நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமர்வு, தமிழ்வின், மே 21, 2010
வெளி இணைப்புகள்
- நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான நாடுவாரியான செயற்பாட்டுக் குழுக்கள், தமிழ்வின், அக்டோபர் 16, 2009
- "நாடு கடந்த தமிழீழ அரசு" உருத்திரகுமாரன் ஆற்றிய விளக்கவுரை--காணொளி
- Tamil national aspirations, TNA and transnational governance, தமிழ்நெட், 16 செப்டம்பர் 2009 - (ஆங்கில மொழியில்)
- Vaddukkoaddai and Thimphu, தமிழ்நெட், 19 செப் 2009 - (ஆங்கில மொழியில்)