மதுமிதா (எழுத்தாளர்)

மதுமிதா என்ற "மஞ்சு ரெங்கநாதன்" ஒரு தமிழக எழுத்தாளர். கவிதை, சிறுகதை, கட்டுரை, நேர்காணல் ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்ட இவர். சமசுக்கிருதத்திலிருந்து மொழிபெயர்ப்பு நூலொன்றையும் வெளியிட்டுள்ளார்.

மதுமிதா (எழுத்தாளர்)

பிறப்பு மதுமிதா

தென்காசி, தமிழ்நாடு,  இந்தியா
தொழில் எழுத்தாளர்
இலக்கிய வகை சிறுகதை, சிறுவர் இலக்கியம், மொழிபெயர்ப்பு

வாழ்க்கைச் சுருக்கம்

தமிழ்நாடு, தென்காசியில் பிறந்து, இராஜபாளையத்தில் வாழ்ந்து, சென்னையில் வசிக்கிறார். சுதந்திரப் போராட்டத் தியாகி காந்தி அரங்கசாமி ராஜாவின் பேத்தி. தந்தை ரகுபதிராஜா. தாயார் பாக்கியலட்சுமி. கணவர் ரெங்கனாதராஜா. தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டாலும் தமிழில் எழுதிக் கொண்டிருப்பவர்.

எம்.ஏ ஆங்கில இலக்கியம், டிப்ளோமா இன் போர்ட் போலியோ மேனேஜ்மெண்ட் ஆகியவை கற்றவர். ஹிந்தி பிரவீன் உத்தரார்த் வரையும் சம்ஸ்கிருதத்தில் பட்டப் படிப்பும் படித்துள்ளார்.

மகாகவி பர்த்ருஹரியின் பொன்மொழிகள் இவருடைய முதல் நூல். சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.

கல்கி, அமுதசுரபி, மங்கையர் மலர், அமீரக ஆண்டு மலர், படித்துறை, யுகமாயினி, வார்த்தை மற்றும் சில சிற்றிதழ்களில் (கலை, உங்கள் பாரதி, களம், நம்பிக்கை...) கவிதை, சிறுகதை, கட்டுரை, நேர்காணல் எனப் பல படைப்புகள் வெளிவந்துள்ளன. மரத்தடி, தமிழ் உலகம், உயிரெழுத்து, சந்தவசந்தம், அன்புடன், ஈ.சுவடி, தமிழாயம், எழுத்தும் எண்ணமும் ஆகிய மடலாடற்குழுக்களிலும் சிஃபி தமிழ், திசைகள், நிலாச்சாரல், திண்ணை, தமிழோவியம், பதிவுகள், கீற்று, தட்ஸ்தமிழ், தமிழ்நெஞ்சம், முத்துக்கமலம் ஆகிய இணைய இதழ்களிலும் இவரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. மதுரை வானொலியில் இவரின் 11 பாடல்கள் இசையமைக்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டன. பொதிகை, மக்கள் தொலைக்காட்சிகளில் கவிதை வாசித்துள்ளார். தமிழில் காற்றுவெளி, நீங்கா இன்பம் என்ற வலைப்பூக்களையும் ஆங்கிலத்தில் Truth Wins என்ற வலைப்பூவையும் நடத்தி வருகிறார்.

இவரின் பர்த்ருஹரி சுபாஷிதம் நூல் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் நான்கு காட்சிகளில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது.

இவர், சமூகப் பணிகளிலும் ஈடுபாடுள்ளவர். இரத்த தானம், கவுன்சிலிங், விழியிழந்தோருக்கு வாசித்தல், சிறுவர்களுக்கு கல்வி என இயங்கி வருகிறார். இராஜபாளையத்தில் 'இராஜபாளையம் தமிழ்நாடு அரசு பெண்கள், சிறுவர் நூலகம்' அமைய முக்கியகாரணியாய் இருந்தவர்.

எழுதிய நூல்கள்

  • மஹாகவி பர்த்ருஹரி சுபாஷிதம்:நீதிசதகம் (2000) - (மஹாகவி பர்த்ருஹரியின் பொன்மொழிகளை சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.)
  • மௌனமாய் உன்முன்னே (2003) - (கவிதை)
  • பர்த்ருஹரி சுபாஷிதம் (செப்டம்பர் 2005) - (சமஸ்கி்ருதத்திலிருந்து முந்நூறு பாடல்களின் தமிழாக்க நூல்)
  • நான்காவது தூண் (2006)(பதினெட்டு பத்திரிகை ஆசிரியர்களின் நேர்காணல்களின் தொகுப்பு)
  • தைவான் நாடோடிக் கதைகள் (2007)
  • பாயுமொளி நீ எனக்கு (கவிதை, மின்னூல்)

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.