திண்ணை

திண்ணை என்பது, மரபுவழி வீடுகள் மற்றும் அது போன்ற கட்டிடங்களில், வாயில் கதவுக்கு அருகிலோ அல்லது அவற்றின் உட்பகுதியில் சில இடங்களிலோ காணப்படுகின்ற மேடை போன்ற அமைப்புக்களாகும்.

அமைப்பு

திண்ணைகள் இருக்கையாகப் பயன்படுவதனால், மனிதர்கள் காலைக் கீழே வைத்துக்கொண்டு இருப்பதற்கு வசதியாக ஏறத்தாழ ஒன்றரை அடி (45 ச.மீ) உயரத்தைக் கொண்டவையாக இருக்கின்றன. திண்ணைகளின் பின்பகுதி பெரும்பாலும் சுவரை அண்டியதாக இருக்கும். முன்பகுதி திறந்து இருப்பதுடன், திண்ணைக்கு மேல் அமைந்திருக்கும் கூரையைத் தாங்கும் தூண்களையும் கொண்டிருக்கும். இரண்டு திண்ணைகளுக்கு நடுவே வாயில் கதவை நோக்கிச் செல்லும் தாழ்வான நடைபாதை நடை என வழங்கப்படுகின்றது.

பயன்பாடு

வீட்டின் எந்தப் பகுதியில் அமைந்திருந்தாலும், இருக்கையாகத் தொழிற்படுவதே இதன் முக்கியமான பயன்பாடாகும். இதனாலேயே இதனைச் சில இடங்களில் குந்து என அழைக்கின்றார்கள். குந்து என்பது இருத்தல் என்னும் பொருள் கொண்ட ஒரு சொல். இருப்பதற்கு மட்டுமன்றிப் படுத்து இளைப்பாறுவதற்கும் திண்ணை பயன்படுவதுண்டு. வடிவமைப்பு அடிப்படையில் திண்ணை, நடை ஆகியவற்றை உட்படுத்திய இரு வேறு மட்டங்களிலான தள அமைப்பு வேறு சில நன்மைகளையும் கொண்டுள்ளது. இவ்வமைப்பில் நடக்கும் பகுதி, இருத்தல், நடத்தல் போன்ற தொழிற்பாடுகளுக்கு உதவும் திண்ணையைவிடத் தாழ்ந்த மட்டத்தில் இருப்பதன் காரணமாக வெளியிலிருந்து நடந்து வருபவர்களின் கால்களோடு ஒட்டிக்கொண்டு வரக்கூடிய அழுக்குகள் திண்ணைகளில் சேராது அவை சுத்தமாக இருக்கக்கூடியதாக உள்ளது.

திண்ணைகளும் சமூக பண்பாட்டுப் பயன்பாடுகளும்

மரபுவழிக் கட்டிடங்களில் திண்ணைகள், சிறப்பாக வாயில் திண்ணைகள், பல்வேறு சமூக பண்பாட்டுச் செயற்பாடுகளைத் தம்முள் அடக்கியுள்ளன. கட்டிடங்களில், பெரும்பாலும் தனியார் வீடுகளில், தனிப்பட்ட பயன்பாட்டுக்கான உட்பகுதி, பொதுப் பயன்பாட்டுக்கான வெளிப்பகுதி என்பவற்றுக்கிடையே இடைநிலையில் அமைந்துள்ள இத் திண்ணைகள், இருவேறுபட்ட பயன்பாட்டுக் களங்களுக்கு இடையேயான மாறுநிலைப் பகுதிகளாகச் செயற்படுகின்றன. இதனால் இத் திண்ணைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வெளியார் பயன்பாட்டுக்கும் உதவுகின்றன.

திண்ணைகள் பயன்பாட்டிலுள்ள இடங்களில், குடும்பத்துடன் அதிகம் நெருக்கமில்லாத வெளியாரை உபசரித்தல், தொழில் ரீதியான வெளியார் தொடர்புகள் போன்றவற்றுக்கு இவை பயன்படுகின்றன. சிலவகையான தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் தொழில் செய்யும் இடமாகவும் இவை பயன்படுகின்றன. முற்காலத்தில் சிறுவர்களுக்குக் கல்வி புகட்டும் இடமாகவும் இவை பயன்பட்டதுண்டு. திண்ணைப் பள்ளிக்கூடம், திண்ணைப் பேச்சு, திண்ணைத் தூங்கி போன்ற சொற்றொடர்களிலிருந்து திண்ணை பயன்பட்ட முறை பற்றி அறிய முடிகின்றது.

சாலைகளை அண்டியுள்ள வீடுகளின் திண்ணைகள் பொதுவாகச் சாலைகளுக்குத் திறந்தே இருப்பது வழக்கமாதலால் பழங்காலத்தில் தூரப் பயணத்தில் ஈடுபட்டுள்ள வழிப்போக்கர்கள் தங்கிச் செல்வதற்கு உரிய இடமாகவும் இவை பயன்பட்டன. பழந் தமிழ் இலக்கியங்களில் இதற்கான சான்றுகளைப் பரவலாகக் காணமுடியும்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.