ம. நடராசன்

ம. நடராசன் (23, அக்டோபர் 1943 - 20 மார்ச்சு 2018)[1] என்பவர் புதிய பார்வை இதழின் ஆசிரியரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் சசிகலாவின் கணவர். 1967ஆம் ஆண்டு மாணவப் பருவத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்றார். பிறகு திமுகவில் இணைந்தார். தெற்கு ஆற்காடு மாவட்டத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றினார். சசிகலா-ஜெயலலிதா நட்பு உருவாக அடிப்படைக் காரணம் இவர்தான். அன்றைய கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரலேகாவிடம் தன் மனைவி சசிகலாவை ஜெயலலிதாவுக்கு அறிமுகம் செய்து வைக்குமாறு கேட்டார். அதற்கு உடன்பட்ட சந்திரலேகாவும் அவரை அறிமுகம் செய்து வைத்தார்.

ம. நடராசன்
தனிநபர் தகவல்
பிறப்பு அக்டோபர் 23, 1943(1943-10-23)
விளார், திருவாரூர், தமிழ்நாடு, இந்தியா
இறப்பு மார்ச்சு 20, 2018(2018-03-20) (அகவை 74)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம் இந்தியர்
வாழ்க்கை துணைவர்(கள்) வி. கே. சசிகலா
இருப்பிடம் சென்னை, தமிழ்நாடு
பணி அரசியல்வாதி, இதழாசிரியர்
சமயம் இந்து

பிறப்பும் படிப்பும்

தஞ்சை நகரிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விளார் என்பது இவரது சொந்த ஊர். பள்ளிப் படிப்பை தஞ்சை தூய அந்தோணியார் பள்ளியிலும் இளங்கலைப் படிப்பை மன்னர் சரபோசிக் கல்லூரியிலும் முதுகலைப் படிப்பை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் முடித்தார். 1965 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டதில் மாணவராக இருந்தபோது முனைப்பாக இருந்தார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் எல். கணேசன் அவர்களின் வழிகாட்டுதலில் மாணவர்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பை ஏற்று செவ்வனே செயல்படுத்தினார்.

பணிகள்

திராவிட முன்னேற்ற கழகத்தில் சேர்ந்து அரசியல் பணி ஆற்றினார். 1967 இல் அரசுப் பணியில் சேர்ந்தார். மக்கள் தொடர்பு அதிகாரி என்கிற நிலையில் சந்திரலேகா என்ற மாவட்ட ஆட்சி அதிகாரி மூலமாக முன்னாள் முதல்வர் செயலலிதா அறிமுகம் கிடைத்தது. இவருடைய மனைவி சசிகலா முதல்வர் செயலலிதாவின் தோழி ஆனார். புதிய பார்வை என்ற இதழைத் தொடங்கினார். ஈழத் தமிழர்களின் படுகொலைகளையும் பட்ட அவலங்களையும் நினைவுகூரும் வகையில் விளாரில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் என்னும் பெரிய கூடத்தை நிறுவினார். ஒவ்வொரு ஆண்டும் தஞ்சையில் கலை இலக்கிய விழாவை பொங்கல் விழாவின் போது நடத்தி வந்தார். ஈழப்போர் பற்றிய ஒரு நூலை எழுதினார்.

மறைவு

பல மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நடராஜன் 20.03.2018 (செவ்வாய்க்கிழமை) அதிகாலையில் சென்னை குளோபல் மருத்துவமனையில் உயிரிழந்தார்.[2][3]

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "நடராசன் மரணம் - பரோலில் வருகிறார் சசிகலா..!".
  2. சசிகலாவின் கணவர் நடராசன் காலமானார்!
  3. நடராசன்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.