போடோ மக்கள்

போடோ மக்கள் (Bodos) எனப்படுவோர் வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தில் வாழும் பழங்குடியினர் ஆவர். 1991 ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படி அசாம் மாநிலத்தில் 1.2 மில்லியன் போடோ இனத்தவர்கள் வாழ்கிறார்கள். இது மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் 53. விழுக்காடு ஆகும்[1]. அசாம் மாநிலத்தின் உதால்குரி, கொக்ராஜார் ஆகிய நகரங்களில் இவர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இந்தியாவின் ஷெடியூல் வகுப்பினரில் போடோக்கள் 8வது இடத்தை (1971) வகிக்கின்றனர். இவர்கள் போடோ மொழியைப் பேசுகின்றனர்.

போடோ மக்களின் மரபு நடனம்

போடோக்கள் போடோ-கச்சாரி என்ற இனக்குழுக்களின் 18 பிரிவுகளில் ஒன்று என 19ம் நூற்றாண்டில் முதன் முதலாக வகைப்படுத்தப்பட்டது[2]. வடகிழக்கு இந்தியாவின் பெரும் பகுதியிலும், நேபாளத்திலும் போடோக்கள் வாழ்கின்றனர். பிரம்மபுத்ரா ஆற்றுக் கரைகளில் வாழும் மக்களில் பெரும்பான்மையானோர்ர் போடோக்கள் ஆவர்.

சமயம்

போடோக்கள் முன்னைய காலங்களில் தம்முடைய மூதாதையோரயே வழிபட்டு வந்தனர். இதற்கு "பாத்தூயிசம்" என்று பெயர். அண்மைக்காலங்களில் இந்து சமயத்தைப் பின்பற்றுகிறார்கள்.

போடோக்கள் இன்று

1980களின் இறுதிப் பகுதியில் இருந்து போடோக்கள் தமக்கு சுயாட்சி வழங்கக்கோரி உபேந்திரா நாத் பிரம்மா தலைமையில் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இவர் இப்போது போடோக்களின் தந்தை என அழைக்கப்பட்டு வருகிறார். போடோக்களின் தனித்துவம், பண்பாடு, கலாசாரம், மொழி ஆகியவற்றைப் பேண நடத்தப்பட்ட போராட்டங்களை அடுத்து இவர்களுக்கு "போடோலாந்து பிராந்தியக் கவுன்சில்" என்ற தனியான நிர்வாக அலகு தற்போதைய கொக்ராஜார் மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டது. சுயாட்சிக்கான போராட்டங்கள் "அனைத்து போடோ மாணவர் அமைப்பு" மூலமாகவும், "போடோ விடுதலைப் புலிகள்" (Bodo Liberation Tigers, BLT) என்ற ஆயுத அமைப்பினாலும் முன்னெடுக்கப்பட்டது. இவர்களைவிட "போரோ பாதுகாப்பு படை", போடோலாந்து தேசிய மக்களாட்சி முன்னணி, போன்றவை ஆயுதம் தாங்கி தற்போதும் போராடி வருகின்றன.

2006 அசாம் மாநில தேர்தல்களில் போடோ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து திஸ்பூரில் போட்டியிட்டு ஆட்சியை அமைத்தனர்.

2012 இல் அசாமில் போடோ மக்களுக்கும் முசுலிம்களுக்கும் இடையே இடம்பெற்ற வன்முறைகளில் 400,000 பேர் வரையில் இடம்பெயர்ந்தனர். 5,000 இற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன.[3]

இவற்றையும் பார்க்க

குறிப்புகளும் மேற்கோள்களும்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.