பொது உரிமையியல் சட்டம்
பொது உரிமையியல் சட்டம் அல்லது பொது சிவில் சட்டம் (Uniform civil code) என்பது ஒரு நாட்டின் அனைத்து சமயம், மொழி, இனம் மற்றும் குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்களுக்கான பொதுவான உரிமையியல் மற்றும் தண்டனைச் சட்டங்களைக் குறிக்கிறது. உலகில் பெரும்பான்மை நாடுகளில் அனைத்து சமயத்திற்கான பொது உரிமையில் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால் சில நாடுகளில், குறிப்பாக இசுலாமியப் பெரும்பாண்மை கொண்ட நாடுகளான சௌதி அரேபியா, ஏமன், இரான், ஜோர்டான், சிரியா, லெபனான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மட்டுமே உரிமையியல் மற்றும் தண்டனைச் சட்டங்களில், ஷரியத் சட்டம் முழுமையாக நடைமுறையில் உள்ளது. சில நாடுகளில் இசுலாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் மட்டுமே ஷரியத் சட்டம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் இசுலாமியர்களுக்கான உரிமையியல் சட்டத்தைப் பொருத்தவரை, ஷரியத் சட்டமே மூலமாக அமைந்துள்ளது.

இந்தியாவில் பொது சிவில் சட்டம்
இந்தியாவில் கோவா மட்டுமே பொது உரிமையியல் சட்டத்தை பின்பற்றி வருகிறது.[1] சமய சார்பற்ற நாடான இந்தியாவில், வாழும் பல்வேறு சமய மக்களுக்கான தனிநபர் சட்டத்தினை (Personal Law) நீக்கி, அதற்கு பதிலாக நாட்டின் அனைத்து தரப்பு சமய மக்கள் கடைப்பிடிக்க வசதியாக பொது உரிமையியல் சட்டத்தை நடைமுறைப்படுத்த, 1949 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் சரத்து 44-இல் பரிந்துரை செய்தது.[2] ஆனால் இது வரை இந்திய அரசு பொது உரிமையியல் சட்டத்தை இயற்றி நடைமுறைப்படுத்தவில்லை.[3] உச்ச நீதிமன்றமும் பொது உரிமையியல் சட்டத்தினை இயற்ற இந்திய அரசுக்கு கருத்து தெரிவித்துள்ளது. முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதை வரவேற்றார்.[4][5][6][7] ஆனால் இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டுவர இசுலாமியர்கள் கடும் எதிர்ப்பு காட்டி வருகின்றனர்.[8]
பொது சிவில் சட்டத்தின் நோக்கம்
- இந்து தனிநபர் சட்டப்படி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காள மாநிலம் தவிர இந்தியாவின் பிற மாநிலங்களில், இந்து சமய மகளிர்க்கு சொத்து மற்றும் பரம்பரை சொத்துகளில் உரிமையில்லை. எனவே இந்த ஆண் - பெண்களுக்கிடையே உள்ள சொத்து உரிமையில் ஏற்றத் தாழ்வை நீக்க பொது சிவில் சட்டத்தால் மட்டுமே இயலும்.
- முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது, முஸ்லீம் அல்லாத கணவன் இரண்டாம் திருமனம் செய்து கொண்டால், அச்செயலை குற்றமாக கருதி இந்திய தண்டனைச் சட்டம் அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படுகிறது. அதே செயலை ஒரு இசுலாமிய ஆண் செய்தால் இந்திய தண்டனைச் சட்டம் குற்றமாக கருதுவதில்லை.
- சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க, இரண்டாம் திருமணம் செய்து கொள்ள நினைக்கும் இசுலாமியர் அல்லாத ஒரு ஆண் அல்லது பெண், இசுலாம் சமயத்தில் சேர்ந்து பின் இரண்டாம் திருமணம் செய்து கொள்வதை தடுத்து நிறுத்திட இந்திய தண்டனைச் சட்டத்தில் இடமில்லை.
- முஸ்லீம் திருமண முறிவு மற்றும் ஜீவனாம்சம் பொருத்தவரை, இசுலாம் தனிநபர் சட்டமான ஷரியத் சட்டம் நடைமுறையில் உள்ளதால் இசுலாமியப் பெண்களுக்கு, பிற சமய பெண்கள் அளவிற்கு சமூக, பொருளாதார அளவில் பாதுகாப்பு கிடைப்பதில்லை.[9]
- திருமணம், திருமண முறிவு, ஜீவனாம்சம், வாரிசுரிமை, சொத்து மற்றும் பரம்பரைச் சொத்தைப் பங்கீடு செய்தல், குழுந்தைகளை தத்து எடுத்தல் போன்றவற்றில் சமயம் சார்ந்த தனி நபர் சட்டங்கள் நடைமுறையில் உள்ளது. எடுத்துக்காட்டாக இசுலாமியர்களுக்கு திருமணம், திருமண முறிவு, ஜீவனாம்சம், சொத்துரிமை போன்றவைகளில் மட்டுமே, ஷரியத் சட்டத்தின் படி தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் குற்ற வழக்குகளில் இசுலாமியர்கள் ஷரியத் சட்டத்தின் வரம்பில் வருவதில்லை. பிரித்தானிய இந்திய அரசு இயற்றிய இந்திய தண்டனைச் சட்டமே, அனைத்து சமயத்தினருக்கும் பொதுவாக உள்ளது.
விவாதத்திற்கு உட்படும் பொது சிவில் சட்டம்
- எந்தவொரு ஆணோ,பெண்ணோ அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் மதம் மாறாமலேயே திருமணம் செய்து கொள்ளும் உரிமைக்கும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற திருமணக் கொள்கைக்கும் எதிராக மதங்கள் வழங்கும் சலுகைகளை நிராகரித்தல்.
- ஆண், பெண் இருவரின் ஒப்புதல் இருப்பின் நீதிமன்றத்தில் மணவிலக்கு பெறும் உரிமை.
- கணவனால் மணவிலக்கு செய்யப்பட்ட மனைவியும், குழந்தைகளும் அவனிடமிருந்து ஜீவனாம்சம் பெறும் உரிமை.
- பருவம் வராத சிறுவர் – சிறுமிகளுக்கு பெற்றோர்களே காப்பாளர்கள் என்ற மதச்சட்டங்களுக்கு மாறாக, அச்சிறுவர்களின் நலனில் அக்கறை கொண்ட வேறு யாரையேனும் கூட நியமிப்பதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம்.
- சொத்து மற்றும் பாரம்பரியச் சொத்துக்களில் ஆண் -பெண் இருபாலருக்கும் சம உரிமை.
- மணமான அல்லது மணமாகாத எந்தவொரு ஆணும் பெண்ணும் குழந்தையொன்றைத் தத்து எடுத்து கொள்ள சட்ட பூர்வமான உரிமை.
பழங்குடி அமைப்புகளின் எதிர்ப்பு
சர்வதர்மா என்ற இந்திய பழங்குடிகள் அமைப்பு பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து செயல்பட்டு வருகிறது.
இந்திய அரசின் மத்திய கலாச்சார துறையின் கீழ் வரும் ஆந்த்ரோபாலஜிகல் சர்வே ஆப் இந்தியா எனும் அமைப்பு 6748 இந்திய பழங்குடிகளை இனங்கண்டு 4635 பழங்குடிகள் பற்றி 120 நூல்களாக பீப்பிள் ஆப் இந்தியா என்று வெளியிட்டுள்ளது. பொது சிவில் சட்டம் பன்னெடுங்காலமாக வழக்கில் இருந்து வரும் இவ்வனைத்து இந்திய பழங்குடிகளின் வாழ்க்கை முறைகளை அடியோடு ஒழித்து விடும் என்பதே சர்வதர்மா அமைப்பின் நிலைப்பாடு.
அமேரிக்காவில் பழங்குடிகளுக்கு அவர்களுக்கென்று தனி ஒழுங்குகள் முறையாக ஏற்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இந்தியாவில் பார்சிகளுக்கு தனி சிவில் சட்டம் வழக்கில் இருக்கிறது. சீக்கியர்கள் 2012 ஆம் ஆண்டு தங்களுக்கென தனி திருமணச் சட்டத்தைப் பெற்றனர். இதற்கு பாரதிய ஜனதா கட்சியும், காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்தன. இத்தகைய உரிமைகளை அனைத்து இந்திய பழங்குடிக்களும் பெற வேண்டும் என்பதே இவர்கள் நிலைப்பாடு.
பாஜக, ஆர் எஸ் எஸ் அமைப்புகளின் நிலைமாற்றம்
ஜன சங்கம் இந்துக்களின் வாழ்க்கை முறைகளில் குறுக்கிடுவதாக இந்துக்கள் மீது இந்து கோட் பில் கொண்டு வரப்பட்ட போது எதிர்த்தது. பொது சிவில் சட்டம் என்பதை இதனை அனைவருக்கும் விரிவாக்குவது தான். 1958 இல் ஆர். எஸ். எஸ் அமைப்பின் அப்போதைய தலைவர் கோல்வால்கர், நேரு தலைமையிலான அரசு இந்து கோட் பில் கொண்டு வந்துவிடப் பாரக்கிறது. எனவே இந்துக்கள் அதனை விடாத வண்ணம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். தொடர்ந்து 1972 இலும் இந்து கோட் பில் தொடர்பாகவும் பொது சிவில் சட்டம் தொடர்பாகவும் அவை அவசியமே இல்லை என்றே தெரிவித்தார். இந்துக்களின் ஒற்றுமைக்கு ஒருரூபத்தன்மை அவசியமில்லை என்று வலியுறுத்தினார்.
மேற்கோள்கள்
- "Call to implement Goan model of civil code". New Indian Express. 15 May 2012. http://newindianexpress.com/cities/chennai/article138136.ece. பார்த்த நாள்: 22 October 2013.
- Article 44 in The Constitution Of India 1949
- Article 44 Of The Constitution Of India
- "President Kalam votes for uniform civil code".
- "Kalam calls for uniform civil code".
- "Uniform Civil Code essential: Kalam".
- "Puri seer rallies for uniform civil code".
- பொது சிவில் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு கூட்டத்தில் முடிவு
- "Muslim women fight instant divorce"
- Chavan, Nandini; Kidwai, Qutub Jehan (2006). Personal Law Reforms and Gender Empowerment: A Debate on Uniform Civil Code. Hope India Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7871-079-2. http://books.google.co.in/books?id=0HNgJuBaSfkC&lpg=PP1&pg=PA11#v=onepage&q&f=false. பார்த்த நாள்: 17 January 2014.
- Sarkar, Sumit; Sarkar, Tanika (2008). Women and Social Reform in Modern India: A Reader. Indiana University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-253-22049-3. http://books.google.co.in/books?id=GEPYbuzOwcQC&lpg=PP1&pg=PA2#v=onepage&q&f=false. பார்த்த நாள்: 17 January 2014.
- Samaddar, Ranabir (2005). The Politics of Autonomy: Indian Experiences. SAGE Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7619-3453-0. http://books.google.co.in/books?id=kcVh_QInSD0C&lpg=PA7&pg=PT17#v=onepage&q&f=false. பார்த்த நாள்: 17 January 2014.
- Lawrence, Bruce B; Karim, Aisha (2007). On Violence: A Reader. Duke University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8223-9016-7. http://books.google.co.in/books?id=32SGA4EV9EEC&lpg=PP1&pg=PA262#v=onepage&q&f=false. பார்த்த நாள்: 17 January 2014.