பெயராய்வு

பெயராய்வு (onomastics, onomatology) என்பது, இயற்பெயர்களின் தோற்றம், வரலாறு, பயன்பாடு என்பவை குறித்த ஆய்வு ஆகும். இது எல்லாவகையான பெயர்களையும் ஆய்வுக்கு உட்படுத்துகிறது. மக்களின் பெயர்கள், இடங்களின் பெயர்கள், புவியியல் அம்சங்களின் பெயர்கள், கட்டிடங்களின் பெயர்கள், விலங்குகளின் பெயர்கள், இன மற்றும் சமூகக் குழுக்களின் பெயர்கள், நிகழ்வுகளின் பெயர்கள், வானியல் அம்சங்களின் பெயர்கள், வண்டிகளின் பெயர்கள், வணிக உற்பத்திகளின் பெயர்கள், ஆக்கங்களின் பெயர்கள் என்பன போன்ற பல வகையான பெயர்கள் இத்துறையின் ஆய்வுப் பொருள்களுள் அடங்கக் கூடியன.[1] இடப்பெயராய்வு, பெயராய்வின் முக்கியமான ஒரு கிளைத் துறை. மக்கட்பெயர் ஆய்வு தனிப்பட்ட மனிதர்களில் பெயர்கள் குறித்த ஆய்வு ஆகும். பெயராய்வு தரவுச் செயலாக்கத்துக்கு உதவக்கூடியது.

பெயர்களின் தோற்றம்

பெரும்பாலான பெயர்கள் பொருள் பொதிந்த சொற்களாகவே தோற்றம் பெறுகின்றன. ஆறுமுகன், கயல்விழி போன்ற மக்கட்பெயர்கள்; தமிழ் நாடு, ஆனை இறவு, நெல்லியடி, கங்கைகொண்டசோழபுரம் போன்ற இடப்பெயர்கள் போன்றவை பொருள் கொண்ட சொற்கள். தமிழ் தெரிந்தவர்களுக்கு மேற்படி பெயர்களுடைய பொருளும் அதற்கான காரணமும் தெளிவாகவே தெரியக்கூடும். பல வேளைகளில் பெயர்கள் பொருள் தெளிவாகத் தெரியாதபடி திரிபடைந்து விடுவதும் உண்டு. அல்லது, முன்னர் இருந்து தற்போது இல்லாமல் போன மொழியில் பெயர் உருவாகி அதுவே நீண்டகாலம் நிலைத்துவிடுவதும் உண்டு. சில பெயர்களுக்குப் பொருள் தெளிவாகத் தெரிந்த போதிலும், அது வழங்கப்பட்ட ஆளுக்கோ அல்லது பிறவற்றுக்கோ அது குறிக்கும் பொருள் தொடர்பற்றதாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக, ஆறுமுகன் என்பவருக்கு ஆறுமுகம் இருக்காது. இவ்வாறான பெயர்கள் கடவுளரைக் குறித்தோ, வேறேதாவது ஒன்றின் நினைவாகவோ ஏற்படக்கூடும்.

பெயராய்வின் பயன்கள்

பெயர்கள் பொதுவாகப் பல தகவல்களைத் தம்முள் பொதித்து வைத்திருக்கின்றன. இவற்றை ஆராய்வதன் மூலம் அவற்றை அறிந்துகொள்ள முடியும். ஒரு சமூகத்தில் காணப்படும் மக்கட் பெயர்கள் அச்சமுதாயத்தினர் எவ்வாறான விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர், எவ்வாறு அவர்கள் பழைய தலைமுறையினரிடம் இருந்து வேறுபடுகின்றனர், அவர்கள் மத்தியில் ஏற்படும் பண்பாட்டுத் தாக்கங்கள், பிற சமூகத்தவர் தொடர்புகள், சமூக அமைப்பு போன்றவை குறித்த தகவல்களை அறிந்துகொள்ள உதவக் கூடியவை. இடப்பெயர்கள், அப்பெயர்களை வழங்கிய மக்கள் எவ்வாறு உலகத்தைப் பார்த்தார்கள் என்பதை உணர்த்த வல்லன. அத்துடன், அவ்விடத்தின் வரலாறு, அங்கு வாழ்ந்தோர், பயன்பாடு போன்ற பல தகவல்களை இடப்பெயர்களில் இருந்து அறிந்துகொள்ளக் கூடும்.

குறிப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.