பெண் இனப்பெருக்கத் தொகுதி
மனிதப் பெண்ணின் இனப்பெருக்கத் தொகுதி (human female reproductive system அல்லது பெண் பிறப்புறுப்பு அமைப்பு) இரண்டு முதன்மை பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது: வளரும் கருவுருவை தாங்கும், யோனி மற்றும் கருப்பை சுரப்பு நீர்களை சுரக்கும், ஆணின் விந்தணுவை உடற்கூற்றளவில் பாலோப்பியன் குழாய்களுக்கு செல்லவிடும் கருப்பை ஒன்றாகும்; மற்றொன்று உடற்கூற்றளவில் பெண்ணின் சூல்முட்டைகளை உற்பத்தியாக்கும் சூலகம் ஆகும். இவை உடலின் உள்ளே இருக்கும் உறுப்புக்களாகும். யோனி வெளி உறுப்புக்களான இதழ்கள், யோனிலிங்கம் மற்றும் சிறுநீர் வடிகுழாய் ஆகியவற்றை உள்ளடக்கிய அல்குலைச் சந்திக்கிறது. யோனியை கருப்பையுடன் கருப்பை வாய் இணைக்கிறது; கருப்பையும் சூலகமும் பாலோப்பியன் குழாய்களால் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட இடைவெளியில் சூலகம் வெளிப்படுத்தும் சூல்முட்டை பாலோப்பியன் குழாய்கள் வழியாக கருப்பையை அடைகிறது.
பெண் இனப்பெருக்கத் தொகுதி (மனித இனம்) | |
---|---|
![]() | |
பெண் இனப்பெருக்கத் தொகுதியை விளக்கும் வரைபடம். | |
இலத்தீன் | systema genitale femininum |
இவ்வாறு செல்கையில் சூல்முட்டை விந்தணுவை சந்திக்க நேர்ந்தால் விந்தணு உள்புகுந்து முட்டையுடன் கலப்பதால் கருக்கட்டல் நிகழ்கிறது. பொதுவாக கருக்கட்டல் கருக்குழல்களில் நிகழுமெனினும் கருப்பையிலும் நிகழ வாய்ப்புள்ளது. கருக்கட்டலால் உருவான கருவணு கருப்பையின் சுவர்களில் ஒட்டிக் கொள்கிறது. இங்கு கருவணு முளைய விருத்தி மற்றும் உருவத் தோற்றத்திற்கான செயல்பாடுகளை துவக்குகிறது. வெளியுலகில் பிழைக்குமளவு வளர்ச்சியடைந்த பின்னர் கருப்பை வாய் விரிந்தும் கருப்பை சுருங்கியும் முதிர்கரு யோனி வழியாக வெளியேற்றப்படுகிறது.
உடற்கூற்றளவில் பெண்ணாகப் பிறக்கும்போதே உருவாக்கப்படும் சூல்முட்டைகள் விந்தணுக்களை விட பெரியதாக உள்ளன. சூலகம் ஏறத்தாழ ஒவ்வொரு மாதமும் ஒரு சூல் முட்டையை முதிர வைத்து தன்னுடன் இணைந்துள்ள பாலோப்பியன் குழாய் மூலமாக கருப்பைக்கு அனுப்புகிறது. அங்கு கருக்கட்டவில்லை என்றால் அந்த முட்டை மாதவிடாய் காலத்தில் வெளியேற்றப்படுகிறது.