பென்குயின்
பென்குயின் (வரிசை: Sphenisciformes, குடும்பம்: Spheniscidae) என்பது நீரில் வாழும் பறக்காத பறவை ஆகும். இவை பெரும்பாலும் தெற்கு அரைக்கோளத்தில் மட்டுமே வாழ்கின்றன. எனினும் ஒரே ஒரு பென்குயின் இனம் மட்டும் நடுநிலக்கோட்டின் வடக்குப் பகுதியில் வாழ்கின்றது. இவை தங்களின் துடுப்பு போன்ற இரு இறகுகள் மூலம் கடலில் நீந்தும் திறன் பெற்றுள்ளன. இவை தங்கள் வாழ்வில் பாதியை நிலத்திலும் மீதியைக் கடலிலும் கழிக்கின்றன.
பென்குயின் புதைப்படிவ காலம்: பேலியோசீன்-அண்மை, 62–0 Ma | |
---|---|
![]() | |
தாடியுள்ள பென்குயின் (Pygoscelis antarctica) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கினம் |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
வரிசை: | பென்குயின்வடிவி |
குடும்பம்: | பென்குயின்வகையி Bonaparte, 1831 |
பேரினம் | |
Aptenodytes | |
![]() | |
பென்குயின் இனங்கள் காணப்படும் இடங்கள் |
பென்குயின் வகைகளில் மிகப் பெரியது பேரரசப் பென்குயின் (Emperor Penguin) ஆகும். இது சுமார் 1.1 மீட்டர் உயரம் வரை வளருவதுடன், 35 கிலோகிராம் அல்லது அதை விட சற்று கூடிய எடையையும் கொண்டிருக்கும். சிறிய நீலப் பென்குயின் அல்லது தேவதைப் பென்குயின் என்பது மிகச் சிறிய பென்குயின் வகையாகும். இது சாதாரணமாக 35 செ.மீ தொடக்கம் 40 செ.மீ வரையான உயரத்தையும் சுமார் ஒரு கிலோகிராம் எடையையும் கொண்டிருக்கும். பொதுவாகப் பெரிய பென்குயின்கள், சிறப்பாக வெப்பத்தை உள்வைத்துக்கொள்ளக் கூடியவையாக இருப்பதால், அதிக குளிர்ப்பகுதிகளில் வாழக்கூடியவையாக உள்ளன. சிறிய பென்குயின் வகைகள் மிதவெப்பக் காலநிலைப் பகுதிகள் அல்லது வெப்பக் காலநிலைப் பகுதிகள் ஆகியவற்றில் காணப்படுகின்றன.
உடற்கூறு
பென்குயின்கள் நீர்வாழ்வுக்கு தக்கபடி இசைவாக்கம் பெற்றுள்ளன. துடுப்புகளாக மாற்றம் பெற்றுள்ள இவற்றின் இறகுகள், பறப்பதற்குப் பயனற்றவை. எனினும் அவற்றைத் துடுப்புகள் போன்று பயன்படுத்தி நீரில் பென்குயின்கள் வியக்கத்தக்க வகையில் விரைவாகவும், இலகுவாகவும் நீந்தவல்லவை. இவை நீந்தும் போது ஒரு பறவை பறப்பது போல் இருக்கும். எனவே நீரில் பென்குயின் நீந்தும்போது அவற்றின் பின்னால் தொடராக நீர்க்குமிழிகளைக் காணலாம். இறகின் கீழுள்ள காற்றுப் படலம், அட்லாண்டிக் கடல் குளிரில் இருந்து உடல் வெப்பத்தைப் பாதுகாக்க உதவுகிறது. வெப்ப மற்றும் மிதவெப்ப வலயங்களில் வாழும் பென்குயின்களின் இறகுகள் ஒப்பீட்டளவில் தடிப்புக் குறைந்தவை ஆகும்.
அனைத்துப் பென்குயின்களின் உடலும் வெண்ணிறக் கீழ்ப்பகுதியையும், இருண்ட நிறம் (பெரும்பாலும் கறுப்பு) கொண்ட மேற்பகுதியையும் கொண்டவை. இது உருமறைப்புக்கு உதவுகிறது. கொல்லும் திமிங்கிலம் அல்லது சிறுத்தை நீர்நாய் போன்ற, பென்குயின்களைக் கொன்று தின்னக்கூடிய விலங்குகள் நீரிலிருந்து பார்க்கும்போது, வெண்ணிற வயிற்றுப் பகுதியை கொண்ட பென்குயினையும், ஒளி தெறிக்கும் நீர்ப்பரப்பையும் வேறுபடுத்திக் கண்டுகொள்வது சிரமம்.
நீந்தும் போது பென்குயின்களின் வேகம் மணிக்கு ஆறு தொடக்கம் 12 கிலோமீட்டர் வரை இருக்கும். 27 கிமீ.மணி வரை வேகம் அவதானிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. சிறிய பென்குயின்கள் அதிக ஆழத்தில் நீந்துவதில்லை. அவை தங்கள் உணவுகளை நீர் மேற்பரப்புக்கு அருகிலேயே பிடித்துக்கொள்வதுடன், ஒவ்வொரு நீச்சலும் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் வரை மட்டுமே நீடிக்கின்றது. தேவையேற்படின் கூடிய ஆழத்துக்கு நீந்தவும் அவற்றால் முடியும். பெரிய பேரரசப் பென்குயின்கள் 267 மீட்டர் ஆழம் வரை சென்றது பதியப்பட்டுள்ளதுடன் இதன் கால அளவும் 18 நிமிடங்களாக அவதானிக்கப்பட்டுள்ளது.
நிலத்தில் பென்குயின்களின் நடத்தை லாவகமற்றது. அவை காலால், இருபுறமும் அசைந்து அசைந்து நடக்கின்றன அல்லது அவற்றின் வயிற்றினால் பனிக்கட்டியின் மீது வழுக்கிச் செல்கின்றன. ஆனாலும், உண்மையில் பெரும்பாலான மனிதர்களுக்கு ஈடாக அல்லது அவர்களிலும் வேகமாக ஓடுவதற்கும் பென்குயினால் முடியும். சக்தியைச் சேமிப்பதற்காகவும் அதேவேளை வேகமாக நகர்வதற்காகவும் இவை வயிற்றினால் வழுக்கிச் செல்கின்றன. இது ஆங்கிலத்தில் tobogganing என அழைக்கப்படுகின்றது.
இவற்றின் செவிப்புலன் மிகச் சிறப்பானது. கண்கள் நீர்க் கீழ்ப் பார்வைக்கு ஏற்ப இசைவாக்கம் பெற்றுள்ளன. இவையே உணவைப் பிடிப்பதற்கும், பிற விலங்குகளிடமிருந்து தப்புவதற்குமான, பென்குயின்களின் முதன்மையான வழியாகும். காற்றில் இவைகளால் நீண்டதூரம் பார்க்க முடியாது. இவற்றின் மணக்கும் சக்தி பற்றி அதிக தகல்வல்கள் தெரிய வரவில்லை.
வகைபிரிப்பு
குடும்பம் Spheniscinae
- அரச பென்குயின், (Aptenodytes patagonicus)
- பேரரசப் பென்குயின், (Aptenodytes forsteri)
- கெண்டூ பென்குயின், (Pygoscelis papua)
- அடேலி பென்குயின், (Pygoscelis adeliae)
- தாடியுள்ள பென்குயின், (Pygoscelis antarctica)
- ராக்ஹோப்பெர் பென்குயின், (Eudyptes chrysocome)
- பியோர்லாண்ட் பென்குயின், (Eudyptes pachyrhynchus)
- ஸ்னேர்ஸ் பென்குயின், (Eudyptes robustus)
- நிமிர்-கொண்டை பென்குயின், (Eudyptes sclateri)
- மக்கரோனி பென்குயின், (Eudyptes chrysolophus)
- மஞ்சட்கண் பென்குயின், மெகாடைப்டெஸ் அண்டிபோடெஸ் (Megadyptes antipodes)
- சிறிய பென்குயின் (அல்லது தேவதை பென்குயின்), (Eudyptula minor)
- ஆபிரிக்கப் பென்குயின், (Spheniscus demersus)
- மகெலனிக் பென்குயின், (Spheniscus magellanicus)
- ஹும்போல்ட் பென்குயின், (Spheniscus humboldti)
- கலப்பகொஸ் பென்குயின், (Spheniscus mendiculus)
வெளி இணைப்புகள்
- Two new fossil penguin species found in Peru. news.nationalgeographic.com
- Information about penguins at pinguins.info
- Integrated Taxonomic Information System
- Penguin information on 70South
- Penguin research projects on the web
- Penguin videos and photos on the Internet Bird Collection
- Penguin World
- Penguins in Te Ara: The Encyclopedia of New Zealand the Encyclopedia of New Zealand
- Seaworld Penguin Information
- "Lessons in a Land of Wind and Ice" from National Wildlife Magazine 1/15/2010
- Live 24/7 camera inside a penguin habitat