பூண்டு

பூண்டு அல்லது பூடு என்பது தாவர வகைகளுள் ஒன்று. இவை உறுதியில்லாத, ஒடிசலான, பெரும்பாலும் பச்சை நிறம் கொண்ட தண்டுகளுடன் கூடியவை. பூண்டுகள் ஒரு மீட்டருக்கும் குறைவான உயரம் கொண்டவை. இவை பருவகாலத் தாவரங்கள். நிலத்துக்கு மேல் உள்ள இதன் பகுதிகளான இலை, தண்டு என்பன குறிப்பிட்ட பருவ காலங்களில் மட்டுமே காணப்படும். அதன் பின்னர் அவை அழிந்து விடுகின்றன.

பலவகைப் பூண்டுகள் வளர்ந்திருக்கும் காட்சி
பல்வேறு வகைப் பூண்டுகளிடையே ஊதாநிறப் பூக்களுடன் கூடிய பூண்டுத் தாவரம்

பூண்டுகளில் ஓராண்டுத் தாவரங்கள், ஈராண்டுத் தாவரங்கள், பல்லாண்டுத் தாவரங்கள் என்னும் வகைகள் இருக்கின்றன. ஓராண்டுத் தாவர வகையைச் சேர்ந்த பூண்டுகள், ஓராண்டுக்குள் அவற்றின் வளரும் காலம் முடிவடைந்ததும் முற்றாகவே அழிந்து விடுகின்றன. ஈராண்டுத் தாவர வகைப் பூண்டுகளில், முதல் ஆண்டுப் பருவகால முடிவில் இலைகளும், தண்டுகளும் அழிந்தாலும், நிலத்துக்குக் கீழ் வேர்கள், கிழங்குகள் போன்ற பகுதிகள் உயிருடன் இருக்கின்றன. அடுத்த பருவகாலத்தில் அவற்றில் இருந்து தண்டுகளும் இலைகளும் வளர்ந்து பூத்து, வித்துக்களை உருவாக்கியபின் இறந்துவிடுகின்றன. பல்லாண்டுப் பூண்டுகளில், நிலத்தின் கீழுள்ள சில பகுதிகள் பல ஆண்டுகள் நிலைத்திருக்கக் கூடியவை. ஒவ்வொரு பருவகாலத்திலும் புதிதாகத் தண்டுகளும், இலைகளும் உருவாகின்றன.

பயன்கள்

பூண்டுத் தாவரங்கள் பல மிகப் பழைய காலத்திலிருந்தே சமையலில் பயன்பட்டு வருகின்றன. பல பூண்டுகளின் தண்டு, இலை, வேர், கிழங்கு முதலிய உறுப்புகள் ஊட்டச்சத்துகள் கொண்ட உணவாக அமையும் அதே வேளை, வேறு சில பூண்டுகளின் உறுப்புக்கள் உணவில் வாசனைப் பொருட்களாகப் பயன்படுகின்றன. பல பூண்டுகளின் பகுதிகள் மருத்துவக் குணம் கொண்டவை. இதனால் பல மருத்துவ முறைகளில் இப்பூண்டுகள் நோய்களைத் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகின்றன. பூண்டுத் தாவரங்களிற் பல அழகிய பூக்களையோ, இலைகளையோ அல்லது தோற்றத்தையோ கொண்டிருப்பதனால், அவை அலங்காரத் தாவரங்களாகவும் பயன்படுகின்றன.

பூண்டு வகைகள்

பூண்டு வகைகளில்.

1.ஒருதலை பூண்டு 2.மலை பூண்டு (கொடைக்கானல், மூணார் மலை பகுதிகளில் விளைவது) 3.தரை பூண்டு (ஊட்டி பகுதிகளில் விளைவது) 4.நாட்டு பூண்டு (தமிழகம் மற்றும் பிற மாநில சமவெளியில் விளைவது) 5.தைவான் அல்லது சைனா பூண்டு (இது இறக்குமதி செய்யப்பட்ட வியாபார நோக்கத்தில் பரப்பபட்டு இந்திய மாநிலங்களில் விற்கப்படும் அளவில் பெரியதாக உள்ள மரபுமாற்ற பூண்டாக இருக்கலாம்)

மேலும் படிக்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.