பீர் முகம்மது ஒலியுல்லா தர்கா

பீர் முகம்மது சாகிபு தர்கா கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலையில் இருக்கும் பீர் முகமது ஒலியுல்லா என்ற துறவியின் சமாதியின் மேல் கட்டப்பட்டுள்ள சமாதியாகும்.[1] இந்த சமாதியின் அருகில் அவரிடம் ஞானம் பெற்ற முனிவரான எக்கீம் முகமதுவின் சமாதியும் அமைந்துள்ளது. புகழ்பெற்ற இந்த சமாதியில் ஆண்டுதோறும் ரஜபு மாதம் 14ம் தேதி ஞானமாமேதை சமாதியான நாளாக அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் விழா கொண்டாடப்படுகின்றது. அந்த நாளை தமிழக அரசு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்துவருகின்றது.

வரலாறு

கி.பி 16ம் நூற்றாண்டில் நெல்லை மாவட்டம் தென்காசியில் சிறுமலுக்கர் என்பவருக்கு பீர்முகமது மகனாக பிறந்தார். சிறுவயதிலேயே ஞானம் பெற்ற அவர் தற்போதைய கேரள மாநிலத்தின் வடகிழக்கு மலையில் நெடுங்காலம் தவவாழ்க்கையில் ஈடுபட்டார். பின்னர் ஆனைமலையில் சுமார் 25 ஆண்டுகள் வரை வாழ்ந்தார்.

அரச கவுரவம்

பீர்முகமதுவின் ஞானத்தை அறிந்த கொச்சி மன்னன் சொர்க்கத்து மலருக்கு எத்தனை இதழ்கள் என்ற கேள்வியை கேட்டார். அதற்கு பீர்முகமது, எத்தனை இதழ்கள் என்று சொன்னால் மட்டும் போதுமா? காட்ட வேண்டாமா? எண்ணீனோர் எண்ணினர், பேறு கண்டோர் பார்த்தனர் என்றார். இதை கேட்ட மன்னன் இசுலாம் மதத்தில் பற்றுகொண்டதாக கூறப்படுகிறது.

திருவிதாங்கூர் மன்னன் முத்துசாமி தம்புரான் ஞானம் பெற்ற பீர்முகமதுவை தன்னுடன் வரும்படி அழைத்தார். அதை ஏற்று பீர்முகமது அரசகுடும்பத்தில் ஒரு உறுப்பினராகவே வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் அரசனின் மகன் இறந்துவிடவே அவனை பீர்முகமது உயிர்பித்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு பீர்முகமது மன்னனிடம் மன்னா, நீ என்னை காண்பது இந்நாளோடு சரி, இனிமேல் இல்லை என்று கூறிவிட்டு மறைந்துவிட்டதாக கூறப்படுகின்றது. அதன் பின்னர் மன்னரால் பீர்முகமதுவை அரசனால் கண்டுபிடிக்கமுடியவில்லை.

ஞானபுகழ்ச்சி பாடல்கள்

பீர்முகமது 18 ஆயிரம் ஞானபுகழ்ச்சி பாடல்களை எழுதியுள்ளார். அதை ஒவ்வொரு ஆண்டும் ஆண்டுவிழாவின் போது அவரது சமாதியில் பாடப்படுகின்றன.

இறுதிகாலம்

பீர்முகமது இறுதிகாலங்களை குழந்தைகளுடன் கழித்தார். அப்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை அருகில் உள்ள மேட்டுக்கடை என்னுமிடத்தில் அவர் தங்கியிருந்த பகுதியில் நிலத்தில் குழிதோண்டி அதற்குள் அமர்ந்து அருகில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளிடம் தன் மேல் மணலை போட்டு மூட கூறுவது வழக்கம். பின்னர் அந்த மணலை பிளந்து கொண்டு வெளியே வந்து குழந்தைகளுக்கு காட்சி கொடுப்பது வழக்கம். இதுபோல் ஒருநாள் நிகழ்ந்த போது அவர் மண்ணுக்குள் இருந்து வெளியே வரவில்லை. அந்த நாளையே சமாதியான நாளாக அறிவிக்கப்பட்டு ஆண்டுவிழா கொண்டாடப்படுகின்றது.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.