பாலா சங்குப்பிள்ளை

சங்குப்பிள்ளை பாலகிருஷ்ணன் (பிறப்பு: மே 12, 1957) ஒரு ஈழத்து எழுத்தாளரும், ஆய்வாளருமாவார். இவர் கே.எஸ்.பாலா, இளைய பாலா ஆகிய புனைப் பெயர்களிலும் எழுதி வருகின்றார்.

பாலா சங்குப்பிள்ளை
பிறப்புமே 12, 1957
அட்டன், நுவரெலியா
பெற்றோர்கருப்பையாபிள்ளை, தாமரை

வாழ்க்கைக் குறிப்பு

கருப்பையாபிள்ளை, தாமரை தம்பதியினரின் புதல்வராக நுவரெலியா மாவட்டம் அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவில் அட்டன் எனும் இடத்தில் பிறந்த சங்குப்பிள்ளை பாலகிருஷ்ணன் அட்டன் ஐலன்ஸ் தேசிய பாடசாலை, கண்டி அசோகா வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவராவார்[1]. கண்டியில் தட்டச்சு மற்றும் கணக்காய்வு சம்பந்தமான படிப்பைத் தொடர்ந்தார். பின்னர் தென்னிந்தியா சென்று கல்வி கற்றுத் தற்போது கணக்காய்வாளராகப் பணியாற்றுகிறார். கணக்காய்வாளர் நிறுவனமான 'சங்கப்பிள்ளை அன் கோ' வின் உரிமையாளர். இவரின் துணைவியார் இந்துராணி. இத்தம்பதியினருக்கு அருண் பிரசாத், சிநேகா ஆகிய இரண்டு பிள்ளைகள் உளர்.

இலக்கியத்துறை

பாலா சங்குப்பிள்ளையின் முதலாவது சிறுகதை 1980ம் ஆண்டில் தினகரன் பத்திரிகையில் 'புதிய தீர்ப்பு' எனும் தலைப்பில் பிரசுரமானது. 1990ம் ஆண்டில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வர்த்தக சேவையில் இவரது முதலாவது கதை ஒலிபரப்பானது. இதிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 150க்கு மேற்பட்ட அரசியல், அறிவியல், ஆரோக்கிய, சினிமா, இலக்கக் கட்டுரைகளையும், நான்கு தொடர் கதைகளையும் எழுதியுள்ளார். இத்தகைய ஆக்கங்கள் தினக்குரல், வீரகேசரி, தினகரன், தினமுரசு, சுடர்ஒளி, மித்திரன் வாரமஞ்சரி, விஜய், மெட்ரோ நியுஸ் ஆகிய பத்திரிகைகளிலும், மல்லிகை, ஞானம், அமுது, சுவைத்திரன், ராணி (இந்தியா) ஆகிய இதழ்ளிலும் வெளியாகியுள்ளன. இலங்கையில் 'துரைவி' வெளியீட்டகத்தின் மூலமாக வெளியான 'உழைக்கப் பிறந்தவர்கள்' சிறுகதைத் தொகுதியிலும், மணிமேகலைப் பிரசுரமாக வெளியான மூன்று இலங்கை எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பிலும் இவரது சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.

மித்திரன் வாரமலர், தினக்குரல், சுவைத்திரன், சூரியகாந்தி, உதயசூரியன் ஆகிய பத்திரிகைகளில் இதுவரை 15 தொடர் புதினங்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் ‘பார்த்திபன் கனவு’ பின்னர் மணிமேகலை பிரசுரம் வாயிலாக புதின நூலாக வெளிவந்து மத்திய மாகாண சாகித்திய விழாவில் சிறந்த நாவலுக்கான பரிசினைப் பெற்றது.

எழுதிய நூல்கள்

பாலா சங்குப்பிள்ளை இதுவரை இரண்டு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

  • காதலுனுக்குக் கல்யாணம் (சிறுகதைத் தொகுதி)
  • ஓர் உன்னதத் தமிழனின் கதை (சிறுகதைத் தொகுதி)

கௌரவங்கள்

1998ம் ஆண்டு 05ம் மாதம் 31ம் திகதி அட்டனில் நடைபெற்ற மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவில் இவரின் சிறுகதைத் துறைக்காகவும், 2006 ஜனவரி 28,29ம் திகதிகளில் நுவரெலியாவில் நடைபெற்ற மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவின் போது இவரின் எழுத்தாக்கத் துறைக்காகவும், 2006 டிசம்பர் 17ம் திகதி கண்டியில் நடைபெற்ற 2006 - மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவின் போது சிறந்த நூலுக்காகவும் கௌரவிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.