பாகனேரி

அமைவிடம்

'பாகனேரி நாடு (Paganeri Nadu)' (தற்போதைய சிவகங்கை) மாவட்டத்தில் காளையார் கோவில், கல்லல், திருப்பத்தூர், சிவகங்கை ஊராட்சி ஒன்றியங்களின் பகுதிகளை உள்ளடக்கியது. சற்றேறக்குறைய 750 சதுர கிலோமீட்டர் பரப்பில் விரிந்த பகுதியாகும். அதாவது கிழக்கில் அரண்மனை சிறுவயல், காளையார் கோவில், தெற்கில் மறவமங்கலம், ராஜசிம்ம மங்கலம், மேற்கில் சிவகங்கை, சோழபுரம், வடமேற்கில் திருக்கோட்டியூர், வடக்கில் பட்டமங்கலம் வரை விரவிக் காணப்படுகிறது. இவற்றுள் காளையார் கோயிலில் எட்டில் மூன்று பங்கு பாகனேரி நாட்டினுள் அடங்கும். தவிர கல்லல், திருப்பத்தூர், சிவகங்கை ஊராட்சி ஒன்றியங்களின் சிறு பகுதிகளும் இந்நாட்டில் இடம் பெறுகின்றன. இதன் எல்லைகளைக் குறிக்கச் சூலக்குறி பொறித்த எல்லைக்கற்கள் எல்லை நெடுகிலும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நடப்பட்டுள்ளன.

இந்நாடு ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டு, இங்கு வாழும் மக்களால் ஒருவகை தன்னாட்சி முறையில் பேணிக் காக்கப்பட்டு வருகிறது.

22 1/2 சிற்றூர்கள்

பாகனேரி, நகரம்பட்டி, காடனேரி, மாங்காட்டுப்பட்டி, நெற்புகப்பட்டி, புலவன்பட்டி, கற்றப்பட்டு, வடக்குக் காடனேரி, அம்மன்பட்டி, வீளநேரி, காளையார்மங்கலம், கருங்காலக்குடி, கௌரிப்பட்டி, பனங்குடி, கோவினிப்பட்டி, கீழக்கோட்டை, கீரனூர், முத்தூர், பையூர், விராணியூர், அல்லூர், சித்ததூர், பெரியகண்ணனூர், கூமாட்சிப்பட்டி.

இவற்றுள் கருங்காலக்குடிக்கு மட்டும் நாட்டமைப்பு உருவாக்கிய காலத்தில் இருந்த மக்கள் தொகையின் அடிப்படையில் அரைச் சிற்றூர் என்ற தகுதி வழங்கப்பட்டது. மொத்தம் 22 1/2 சிற்றூர்கள் இந்நாட்டிற்கு உட்பட்டுள்ளன, எனவே 22 1/2 சிற்றூர் எனப்பட்டது.

இருபத்து இரண்டரைச் சிற்றூர்கள் கொண்டு உருவாக்கப்பட்ட இந்நாட்டில் தற்போது சிறியனவும், பெரியனவுமாக 128 ஊர்கள் உள்ளன. சில ஊர்கள் தனி ஊர்கள் என்ற தகுதியையும் வேறு ,சில ஊர்கள் உட்கடைச்சிற்றூர்களையும் சேர்த்து ஊர் என்னும் தகுதியையும் பெற்றன.

மேலவெள்ளிஞ்சம்பட்டி, கீழவெள்ளிஞ்சம்பட்டி, தச்சன் புதுப்பட்டி, புத்திரிப்பட்டி, கோவில்பட்டி, ஆளவளத்தான் பட்டி ஆகிய ஆறு உட்கடைக் கிராமங்கள் கத்தப்பட்டு ஊரைச் சேர்ந்தவை. திருத்திப்பட்டி, பிளாமிச்சாம்பட்டி,மும்முடிசன்பட்டி, சக்கரவர்த்திப்பட்டி, சீவூரணி, சூரம்பட்டி, வீரநேந்தல் ஆகிய ஏழு உட்கடைக் கிராமங்கள் பனங்குடி, கோவினிப்பட்டி ஊரின் கீழ் உள்ளன. இவை தற்போது பாகனேரி நாட்டில் இருந்து பிரிந்து தனித்து இயங்குகின்றன.

பெரிச்சிக்கோயில், ஆளவிலாம்பட்டி, சடையன்பட்டி, கொலாம்பட்டி, கொங்கராம்பட்டி, ஊடேந்தல்பட்டி, பொய்யாமணிப்பட்டி, கொட்டகுடி ஆகிய எட்டு உட்கடைக் கிராமங்கள் கீழக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவைகளாகும். இவைகளும் தற்போது பாகனேரி நாட்டில் இருந்து பிரிந்து தனித்து இயங்குகின்றன

பாகனேரி நாட்டின் தென்பகுதியில் அமைந்துள்ள கீரனூர், முத்தூர், பையூர், விராணியூர்,அல்லூர், சித்ததூர், பெரியகண்ணனூர் ஆகிய ஏழு ஊர்ளும் அவற்றின் உட்கடைக் கிராமங்களும் ஏழூர்ப்பற்று என வழங்கப்படுகின்றன. இவற்றுள் கீரனூர் என்ற ஊர் ஏழூர்ப்பற்றுக்கு தலைமை இடமாகும்.

நட்பு மற்றும் பகை நாடுகள்

பாகனேரி நாட்டுப் பெருநான்கெல்லையைச் சூழ்ந்து மற்ற பிற நாடுகளும் அமைந்துள்ளன. அவற்றுள் சில நட்பாகவும் சில பகைமை உணர்வுடன் இருந்தன, இருக்கின்றன. இவற்றுள் மயில்ராயன்கோட்டை, கண்டரமாணிக்கம், குன்னங்கோட்டை, மங்கலம், பூக்குழி ஆகிய நாடுகள் பாகனேரி நாட்டுடன் நீண்ட காலமாக நட்புறவு கொண்டுள்ளன. ஆறூர்வட்டகை, பட்டமங்கலம் நாடுகள் பகைமை உணர்வுடன் உடையன. உதாரணத்திற்கு வாளுக்குவேலி அம்பலத்திற்கும் வல்லத்தராயனுக்கும் ஏற்பட்ட விரோதத்தால் இன்றளவும் இவ்விரு நாடுகளும் பகைமை உணர்வுடனேயே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பாகனேரியில் பாண்டியர் கால சிவன் கோயில் உள்ளது

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=23&centcode=0004&tlkname=Sivaganga#MAP
  5. http://tnmaps.tn.nic.in/district.php?dcode=23

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.