பல்லவி

கருநாடக இசையில் பயின்று வரும் உருப்படிகள் பலவற்றுள் காணப்படும் உறுப்புக்களுள் பல்லவி என்பதும் ஒன்று. அனுபல்லவி, சரணம் என்பன பொதுவாகக் காணப்படும் ஏனைய இரண்டு உறுப்புக்கள். கருநாடக இசையின் உருப்படிகளான கீர்த்தனை, கிருதி, பதம், சுரசதி, சதிசுரம், வண்ணம் முதலிய இசைப் பாடல்களில் இவ்வுறுப்புக் காணப்படுகிறது.[1] கருநாடக இசை உருப்படிகளில் மட்டுமன்றித் தற்காலத்தில் மெல்லிசைப் பாடல்கள், பக்திப் பாடல்கள், திரைப் பாடல்கள் போன்றவற்றிலும் பல்லவி என்னும் உறுப்பு உள்ளது. பொதுவாக மேற்குறிப்பிட்ட உருப்படிகளில் பல்லவி முதல் உறுப்பாக வரும். இதனாலேயே தமிழில் இதை எடுப்பு, முதல்நிலை, முகம் ஆகிய சொற்களால் குறிப்பிடுவர்.[2] இந்துத்தானி இசையில் இதை ஸ்தாயி என்பர்.[3] ஒரு இசைக்கலைஞரின் கற்பனையை பல்லவி தெளிவுபடுத்தும்.

பல்லவி பாடல்களில் முதல் உறுப்பாக வரும் அதேவேளை, அனுபல்லவி, சரணம் ஆகிய உறுப்புக்களுக்குப் பின்னரும் திரும்பத் திரும்பப் பாடப்படுவது உண்டு. பல்லவி பொதுவாக ஒரு தாள வட்டணை (ஆவர்த்தம்) நீளம் கொண்டதாக இருக்கும். இரண்டு அல்லது நான்கு தாள வட்டணைகளைக் கொண்டு அமைவதும் உண்டு. பக்கவாத்தியம் வாசிப்பவர்கள், எடுத்துக்கொண்ட தாளத்தின் தன்மையை அறிந்துகொள்ள இது உதவியாக உள்ளது. பாடும்போது, பல்லவியை இரண்டு தடவைகள் அல்லது அதற்கு மேற்பட்ட தடவைகள் பாடுவதும் உண்டு.

எடுத்துக்காட்டு

அலைபாயுதே ... என்று தொடங்கும் கீர்த்தனையில் முதல் இரண்டு வரிகள் பல்லவி ஆகும்.

பல்லவி

அலைபாயுதே... கண்ணா, என் மனம் அலைபாயுதே
ஆனந்த மோகன வேணுகானமதில்

அனுபல்லவி

நிலைபெயராது சிலைபோலவே நின்று
நேரமாவதறியாமலே மிக விநோதமாக முரளீதரா - என் மனம்

சரணம்

தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே திக்கை நோக்கி என் புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே
கனித்த/ (கதித்த) மனத்தில் இருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா
ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
கனை கடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலெனக்(கு) அளித்தவா
கதறி மனமுருகி நான் அழைக்கவோ இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ, இது முறையோ, இது தர்மம் தானோ?
குழலூதிடும் பொழுது ஆடிடும் குழைகள் போலவே மனது வேதனை மிகவொடு

குறிப்புகள்

  1. மம்மது, நா., 2010. பக். 362.
  2. மம்மது, நா., 2010. பக். 362.
  3. வில்லவராயர், மீரா., 2011, பக். 46

உசாத்துணைகள்

  • மம்மது, நா., தமிழிசைப் பேரகராதி, இன்னிசை அறக்கட்டளை, மதுரை, 2010.
  • வில்லவராயர், மீரா., ஹிந்துஸ்தானி மேற்கத்திய இசை - ஓர் அறிமுகம், லங்கா புத்தகசாலை, யாழ்ப்பாணம், 2011 (மூன்றாம் பதிப்பு).
  • செல்லத்துரை, பி. டி., தென்னக இசையியல், வைகறைப் பதிப்பகம், திண்டுக்கல், 2005 (ஐந்தாம் பதிப்பு).
  • பக்கிரிசாமிபாரதி, கே. ஏ., இந்திய இசைக்கருவூலம், குசேலர் பதிப்பகம், சென்னை, 2006.

இதையும் காண்க

இராகம் தானம் பல்லவி

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.